Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

print
ம் வாசகர்கள் ஈரோடு திரு.ஞானப்பிரகாசம் & தமிழ்செல்வி தம்பதியினரிடம் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது, ஐந்து வருடத்துக்குள் 1000 சாதனையாளர்களை சந்திக்கும் நமது லட்சியத்தை பற்றி குறிப்பிட்டு நமது புதுக்கோட்டை பயணத்தை பற்றியும் ஆலங்குடி கணேசன் அவர்களை சந்திக்கவிருப்பதையும் கூறினோம். அப்போது அவர்கள் நீங்கள் புதுக்கோட்டை செல்வதென்றால் அவசியம் ராதாபாய் என்பவரை சந்திக்கவேண்டும் என்று கூறி அவரைப் பற்றிய விபரங்களை நமக்கு கூறினர். அவர்கள் கூறியதை கேட்டவுடனேயே ராதாபாய் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் நமக்கு ற்பட்டுவிட்டது.

Radhabai6

இங்கே யார் ராதாபாய்?

“இங்கே யார் ராதாபாய்?” – இந்தக் கேள்வியை நீங்கள் புதுக்கோட்டை அரசு  மகளிர் கல்லூரிக்கு சென்று யாரிடம் கேட்டாலும் அவர்களிடமிருந்து வரும் ஒரே பதில் “தன்னம்பிக்கை தாய்!” என்பது தான்.

தன்னம்பிக்கைப் பெண்மணி, கருத்தொளிச் செம்மல், நல்லாசிரியர், கவிநிலவு, சிறந்த பெண்மணி, சாதனைப் பெண்மணி, சமூகப்பணிக்கான அன்னை தெரசா விருது எனப்பல விருதுகளைப் பெற்று, சாதனை புரிய உடற்குறை ஒரு தடையல்ல என உலகிற்கு உணர்த்தியபடி வாழ்ந்து வரும் ஒரு மாதர்குலத் திலகம்.

அவருக்குப் பார்வை கிடையாது. ஆனால், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு அவர் ஒரு வழிகாட்டி.

பெண் குழந்தை என்றால் சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம்பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ஆவார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தற்போது வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர்.

ராதாபாய் அவர்களை பற்றி கேள்விப்பட்டதுமே அவரை நமது பாரதி விழாவுக்கு அழைத்து கௌரவிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். ஆனால் நேரில் சென்று ஒரு பேட்டி எடுத்து அதை அவரிடம் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்து புதுக்கோட்டை பயண திட்டத்தில் ராதாபாய் அவர்களை சந்திப்பதையும் சேர்த்துக்கொண்டோம்.

ஆலங்குடியில் கணேசன் அவர்களை சந்தித்தபிறகு அங்கிருந்து நேராக புதுக்கோட்டை நகருக்கு திரும்பி அங்கு ராதாபாய் அவர்களின் இல்லத்துக்கு சென்றோம். நம்முடன் நண்பர் சிட்டியும் வந்திருந்தார்.

நாமாது வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார் ராதாபாய். நாம் வாகனத்தை விட்டு இறங்கியதும் வாசல் வரை வந்து வரவேற்றார்.

தனது ஒரே மகளையும் சகோதரர்களையும் அறிமுகப்படுத்திவைத்தார். பரஸ்பர நல விசாரிப்புக்களுக்கு பின் எங்கள் உரையாடல் துவங்கியது. நம்மை நமது பணிகளை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

Radhabai2

நீ விரும்பியது கிடைக்கலியா? கிடைச்சதை விரும்பு!

கனிவும் கருணையுமாகப் பேசுகிறார் ராதாபாய். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர். தென்னிந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண். ‘அம்மா’ என்று மாணவிகளால் அன்பொழுக அழைக்கப்படும் நல்லாசிரியை. ராதாபாயிடம் ஐந்து நிமிடங்கள் பேசினாலே நமக்கும் சிறகு முளைத்து விடுகிறது!

நீ விரும்பியது கிடைக்கலியா? கிடைச்சதை விரும்பு… அது தான் மகிழ்ச்சிக்கு ஒரே வழி என்று சொல்வார்கள். அதற்கு நேரடி உதாரணம் ராதாபாய் அவர்கள் தான்.

“நினைத்துப் பார்க்கவே சற்று பிரமிப்பாக இருக்கிறது. பார்வையற்ற சூழலில் வாழ்வது என்பதையே எங்களால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் நீங்களோ பார்வை இழந்த ஒரு பெண்ணாக பிறந்து, இப்படி ஒரு சாதனை படைத்திருக்கிறீர்கள்… இதன் வித்து ஊன்றப்பட்டது எங்கே?”

‘‘எங்களுக்குப் பூர்வீகம் உசிலம்பட்டி. கள்ளிப்பாலுக்கு பேர் போன ஊர். அப்பா கிருஷ்ணமூர்த்தி  தமிழாசிரியர். அம்மா முத்துலட்சுமி. 3 சகோதரர், 2 சகோதரின்னு பெரிய குடும்பம். எங்கள் வீட்டுக்கு நான் 8-வது குழந்தை. நான் பிறந்து நாலைஞ்சு மாசத்திலயே பார்வையில பிரச்னை இருக்கிறது தெரிஞ்சிடுச்சு. அப்பா என்னைத் தைரியமாத்தான் வளர்த்தார். அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. மடியில உக்கார வச்சுக்கிட்டு மண்ணுல எழுதிப் பழக்குவார். பாரதி, பாரதிதாசன் பாடல்களை பாடிக் காட்டுவார். சங்க இலக்கியங்கள் சொல்லித் தருவார். வரலாறு வாசிச்சுக் காட்டுவார்.

Radhabai3

நான் வளர வளர என் பார்வையில் ஒளி தேஞ்சுக்கிட்டே போயிடுச்சு. நாலாம் வகுப்பு படிக்கும்போது தடுமாறத் தொடங்கிட்டேன். இப்படித்தான் வாழ்க்கைன்னு ஏத்துக்க ரொம்ப சிரமப்பட்டேன். போகப்போக மனசுக்குள்ள நம்பிக்கையை வளர்த்துக்கிட்டேன். அப்பா, எனக்குக் கிடைச்ச வரம். எந்த வயசுல என்ன கத்துக்கணுமோ அதையெல்லாம் கத்துக்கொடுத்தார். மத்தவங்களால முடியாததை உன்னால செய்ய முடியும். உன்னால செய்ய முடியாததை யாராலயும் செய்ய முடியாது’ன்னு சொல்லிச் சொல்லி வளர்த்தார். அப்பா ஊட்டி வளர்த்த அந்த நம்பிக்கைதான் இன்னைக்கும் என்னை வழி நடத்திக்கிட்டிருக்கு…

என் வேலைகளை என்னையே செய்யச் சொல்லி பழக்கப்படுத்துவார். எதுக்காகவும் யாரையும் எதிர்பார்க்கக் கூடாது… உன் சுயத்தை நம்பணும்’னு சொல்லித் தருவார். பகல்ல ஓரளவுக்கு நிதானமா நடந்திடுவேன். இரவுல மொத்தமா ஒளி மங்கிடும். தடுக்கித் தடுக்கி விழுந்து எழுந்திருப்பேன். ஒவ்வொரு முறை விழுந்து எழும்போதும் உத்வேகமும் உறுதியும் அதிகமாச்சு. பள்ளிக்கூடம் ரணமாத்தான் இருந்துச்சு. போர்டை பார்த்துப் படிக்க முடியாது. பாடம் நடத்தும்போது ரொம்பக் கவனமா உள்வாங்கிக்கிட்டு மனசுக்குள்ள எழுதி வச்சுக்குவேன். என் பிரச்னையை ஆசிரியர்கள் புரிஞ்சுக்கவே நீண்ட நாட்கள் ஆச்சு. மூன்றாம் வகுப்பு வரைக்கும் பொதுப் பள்ளியிலதான் படிச்சேன். அதுக்குப் பிறகு பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் பள்ளி…! வெளியுலகம் தெரியாம, இருட்டுக்குள்ள முடங்கிக் கிடந்த எனக்கு மிகப்பெரும் நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் கொடுத்தது அந்தப் பள்ளிதான்.

முதல் மாணவி

‘நம் வாழ்க்கை முடங்கிப்போகலே’ங்கிற தைரியம் அங்கேதான் கிடைச்சுச்சு. இதுதான் நம் நிலைமைங்கிற யதார்த்தத்தை அங்கேதான் புரிஞ்சுக்கிட்டேன். என்னை மாதிரியே நிறைய பேர் இந்த உலகத்துல இருக்காங்கங்கிறதும் தெரிஞ்சுச்சு. ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் படைக்கப்படுது… நம் படைப்புக்கும் ஆண்டவன் ஏதோ ஒரு காரணம் வச்சிருக்கான்னு உணர்ந்தேன். பிரெயிலி புத்தகங்கள், டெய்லர் ஃபிரேம்னு சொல்லப்படுற கணக்கு சிலேட்டு எல்லாம் எனக்குள்ள மிகப்பெரிய சுதந்திர உணர்வை உருவாக்குச்சு. நாம கத்துக்க முடியும்… மத்தவங்களைப் போல படிக்க முடியுங்கிற எண்ணமே என்னை உற்சாகமாக்குச்சு. ஆவேசமாக் கத்துக்கிட்டேன். 77ல எஸ்எஸ்எல்சி முடிச்சேன். 600க்கு 427 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி முதல் மாணவியா வந்தேன்.

அப்போ குடும்பச் சூழலோ நிறைவா இல்லே. அப்பா ரிடையர் ஆகிட்டார். அண்ணன்கள் வேலைக்குப் போற நிலையில இல்லை. ரெண்டு அக்காக்கள் ஆசிரியர் பயிற்சிக்குப் படிச்சுக்கிட்டிருந்தாங்க. ஒரு வருசம் வீட்டில் இரு… அடுத்த வருசம் ஆசிரியர் பயிற்சியில சேத்துவிடுறேன்னு அப்பா சொன்னார். அந்த ஒரு வருடத்தை வீணாக் கழிக்க எனக்கு விருப்பமில்லை. ஏதாவது உருப்படியா கத்துக்கலாமேன்னு யோசிச்சேன்.

Radhabai5

திருச்சியில ‘விழியிழந்த மகளிர் மறுவாழ்வு இல்லம்’ இருக்கு. டாக்டர் ஜோசப் சாரோட மகள் ப்ரியா தியோடர் நடத்துறாங்க. பார்வையிழந்த பெண்களுக்கு கவர் மேக்கிங், டைலரிங் மாதிரி நிறைய கைத்திறன் பயிற்சிகள் கொடுக்கிறதா கேள்விப்பட்டேன், ப்ரியா அம்மாவைப் போய் பார்த்தேன். அதுதான் என் வாழ்க்கையோட திருப்புமுனை. இவ்வளவு மார்க் எடுத்துட்டு மேல படிக்காம இருக்கக்கூடாது… நான் செலவைப் பாத்துக்கறேன்.. நீ பியூசி படின்னு சொல்லி திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரிக்கு அழைச்சுட்டுப் போனாங்க. ஆனா, கல்லூரி நிர்வாகம் என்னை சேத்துக்க விரும்பலே. இது நார்மல் பிள்ளைங்க படிக்கிற கல்லூரி… இங்கே பிளைண்ட் ஸ்டூடண்டுக்கு சீட் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ப்ரியா அம்மா எனக்காக பிரின்ஸிபல்கிட்ட பேசினாங்க. நல்லாப் படிக்கிற பொண்ணு… ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்க… சரியா படிக்கலேன்னா டிராப் பண்ணிடுங்கன்னு ரிக்வெஸ்ட் பண்ணினாங்க. உங்களுக்காக ஒரு சீட்டை வீணாக்குறோம்னு சொல்லிட்டுத்தான் என்னை கல்லூரியில சேத்துக்கிட்டாங்க. அவச்சொற்களை கவனத்துல எடுத்துக்காதே… உன் திறமையை நிரூபிச்சுக் காட்ட வேண்டிய நேரம் இது… உன்னால முடியும்… நல்லாப்படின்னு உற்சாகப்படுத்தினாங்க ப்ரியா அம்மா. என் ஒவ்வொரு வளர்ச்சியிலயும் அவங்களோட பங்கு இருக்கு.

கல்லூரி நான் எதிர்பார்த்த அளவுக்கு இதமா இல்லை. 104 மாணவிகள்ல நானும் சந்திராங்கிற பெண்ணும்தான் பார்வையில்லாதவங்க. சந்திராவும் ப்ரியா அம்மா மூலமா வந்தவதான். வகுப்பறையில எங்ககூட யாரும் பேச மாட்டாங்க. வெளியில போனா எங்களை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிடுவாங்க. ஹாஸ்டல்ல எங்களை யாரும் ரூம் மேட்டாக்கூட சேத்துக்கத் தயாராயில்லே. பாக்கியரதின்னு ஒரு பொண்ணு மட்டும் இவங்கள என் கூட வச்சுக்கிறேன்னு முன் வந்தா. இறைவன் ப்ரியாம்மா மாதிரி, பாக்கியரதி மாதிரி எல்லா இடத்திலயும் எனக்காக ஒரு ஜீவனை அனுப்பி வைக்கத் தவறலே. பாக்கியரதி நிறைய சப்போர்ட்டா இருந்தா. அவ இல்லைன்னா கல்லூரியில இருந்து பாதியிலேயே நின்னாலும் நின்னிருப்பேன். அந்த அளவுக்கு மன நெருக்கடி. காலப்போக்குல அந்த சூழ்நிலை மாறிடுச்சு. படிக்கணும்கிற என்னோட ஆர்வத்தைப் பார்த்து மாணவிகள் என் மேல தனிக் கவனம் செலுத்த ஆரம்பிச்சாங்க. எனக்கான தேவைகளைக் கூட சில மாணவிகள் ஏத்துக்கிட்டாங்க.

வகுப்பறையில நடத்துற பாடத்தை பிரெய்லியில நோட்ஸ் எடுத்துக்குவேன். அன்னம் நாராயணன் மேடம், ரீடர்ஸ் அசோசியேஷன் ஃபார் த பிளைண்ட்னு அமைப்பு நடத்தினாங்க. அவங்ககிட்ட பாடப் புத்தகங்களைக் கொடுத்தா கேசட்ல பேசி ரெக்கார்டு பண்ணிக் கொடுப்பாங்க. அதுவும் உபயோகமா இருந்துச்சு. ஹாஸ்டல் தோழிகள் படிச்சுக் காட்டுவாங்க. அதைக் குறிப்பெடுத்துப் படிப்பேன். பியூசி படிச்ச 104 பேர்ல நான்தான் ஃபர்ஸ்ட் மார்க். பியூசி முடிச்சதும் பி.ஏ. படிக்கணும். அப்போவும் பணப் பிரச்னை வந்து நின்னுச்சு. ஆனா, ‘ஒரு சீட்டை வீணாக்குறேன்’னு சொல்லி எந்த பிரின்ஸிபல் வருத்தத்தோட சீட் கொடுத்தாங்களோ அவங்களே கூப்பிட்டு, நான் உன்னோட படிப்புச் செலவை ஏத்துக்கறேன். கவலைப்படாமல் படின்னு சொன்னாங்க. வேறு சிலர்கிட்டயும் உதவிகள் பெற்றுக் கொடுத்தாங்க. பி.ஏல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன்.

எம்.ஏல பல்கலைக்கழக அளவுல இரண்டாவது இடம் பிடிச்சேன். படிப்பு மேல இருக்கிற தாகம் அடங்கவேயில்லை. ப்ரியா மேடம், என்னோட பொருளாதாரத் தேவைகளை சரி செஞ்சுக்கிறதுக்காக அவங்க இல்லத்துல கவுன்சிலர் பணியிடத்தை உருவாக்கி, என்னை நியமனம் செஞ்சு, சம்பளமும் கொடுத்தாங்க. அந்தத் தருணத்துல பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரா இருந்தவங்க மணிசுந்தரம். அவங்க என்னைப் பத்திக் கேள்விப்பட்டு கூப்பிட்டு பாராட்டினாங்க. ‘பி.ஹெச்டி. படிக்க விரும்புறேன் சார்’னு சொன்னேன். நேரடியா பி.ஹெச்டி. பண்ண சிறப்பு அனுமதியும் கொடுத்தாங்க. திருச்சி ஈவேரா பெரியார் கல்லூரி பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஹீம் எனக்கு வழிகாட்டியா வந்தாங்க. என்னைப் போல பார்வையில்லாதவங்களைப் பற்றியே ஆய்வு பண்ண முடிவு செஞ்சேன். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பார்வையற்றோர் மறுவாழ்வுப் பணிகளைப் பற்றிய வரலாறுங்கிற தலைப்பை எடுத்துக்கிட்டேன்.

Dr Radhabai Felicitatedஇந்தியா முழுவதும் இருக்கிற பார்வையிழந்தோர் அமைப்புகளுக்குப் போய் செய்திகள் சேகரிச்சேன். சாருபாலாங்கிற பெண் எனக்கு உதவியாளரா வந்தாங்க. எட்வர்ட் ஜேனதான்ங்கிற சமூக ஆர்வலர் எல்லாப் பயணங்கள்லயும் கூட வந்து உதவி செஞ்சார். புத்தகங்கள் எடுத்துக்கிட்டு வந்து படிக்கச் சொல்லி பிரெய்லியில் எழுதி வச்சு அதை மனசுல ஏத்திக்கிட்டு டைப்ரைட்டர்ல நானே டைப் பண்ணி ஆய்வை சப்மிட் செஞ்சேன். 2 வருடங்கள் தீவிரமா பரிசீலனை செஞ்ச பிறகுதான் எனக்கு பி.ஹெச்டி. கொடுத்தாங்க. எனக்கு முன் மத்தியப்பிரதேசத்துல உஷா பாலேராவ்ங்கிற பெண் 1975ல பி.ஹெச்டி. முடிச்சிருக்காங்க. தென்னிந்தியாவில பி.ஹெச்டி. வாங்கின முதல் பார்வையற்ற பெண்ணுன்னு என்னை அறிவிச்சாங்க. படிப்பு முடிஞ்சதும் கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில வேலை கிடைச்சுச்சு. 1994ல் தமிழக முதல்வர் சிறப்பு அரசாணை மூலம் புதுக்கோட்டை கல்லூரியில என்னை பணியமர்வு செஞ்சாங்க. 2008ல வரலாற்றுத்துறைத் தலைவரா ஆனேன்… – ராதாபாய் சொல்லும்போது நெகிழ்வில் கண் நிறைகிறது.

மாணவிகளின் விருப்பத்துக்குரிய பேராசிரியையாக இருக்கிறார் ராதாபாய்… ‘‘மேடம் கிளாஸ் ரூமுக்குள்ள வந்தாலே உற்சாகமா இருக்கும். வெறும் பாடம் மட்டுமில்லாம நிறைய செய்திகள் சொல்வாங்க. விவாதம் நடத்துவாங்க. பாடம் தொடர்பான சமூகப் பிரச்னைகளை பத்திச் சொல்வாங்க. என்னென்ன புத்தகங்கள் படிக்கணும்னு சொல்வாங்க. ஒவ்வொருத்தர் மேலயும் தனியா அக்கறை காட்டுவாங்க… என்று பெருமிதமாகச் சொல்கிறார்கள் மாணவிகள்.

‘‘எங்க கல்லூரியில படிக்கிற மாணவிகள் கிராமப்புறத்துல இருந்து வர்றவங்க. பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிங்க… அவங்களை என்னால முடிஞ்ச அளவுக்கு உற்சாகப்படுத்துவேன். கல்வியோட பயனே சுயமா சிந்திக்கத் தூண்டுறதுதான். அதனால நிறைய கேள்விகளை எழுப்பி பதில் தேட தூண்டுவேன். ஆடியோ புக், பிரெய்லி புக் வச்சு நிறைய படிச்சுட்டுதான் வகுப்பறைக்குள்ள போவேன். நமக்கு என்ன தெரியுதோ அதைச் சொல்லிட்டு தப்பிக்கக் கூடாது. அவங்க கேட்குற எந்த கேள்விக்கும் தெரியாதுன்னு சொல்லாம பதில் சொல்லணும். அதுக்காக இப்பவும் நிறைய உழைக்கிறேன்…” என்கிற ராதாபாயின் ரோல்மாடல் ஹெலன் கெல்லர்!

Radhabai4
நண்பர் சிட்டி ரைட்மந்த்ரா தினசரி பிரார்த்தனை படம் பரிசளிக்கிறார் – நடுவே அவர் மகள் பிரபா வர்ஷினி

வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்!

‘‘வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான். ஆனால், பார்வையற்றவர்களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். அதற்கும் பலனும் கிடைத்து வருகிறது. இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்கிறார் ராதாபாய்.

மேலும் ராதாபாய் அவர்கள் கூறிய மற்றொரு விஷயம் தான் அவரை ரைட்மந்த்ரா பாரதி விருதுக்கு தகுதியுடையவராய் உயர்த்தியது.

“நான் படிச்சது பெரிய விஷயம் இல்லை. ஏன்னா அந்தளவுக்கு என் வீட்ல படிக்க என்னை அனுமதிச்சாங்க. ஆனா கிராமப்புறத்துல வாழற பார்வையற்றவர்கள் நிலை ரொம்ப மோசம். அதனாலேயே அவங்களை முன்னேற்றனும்னு முடிவு செஞ்சேன். அவர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டு இருக்கேன். தேர்ச்சி விகிதம் குறைந்த பல கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று அந்த மாணவர்களிடையே உரையாற்றி அவர்களுக்கு எக்ஸாம் டிப்ஸ் முதலியவற்றை கொடுத்து  வருகிறேன். தேர்வு குறித்த பயத்தை அவர்களிடையே போக்கி தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள தயார்  செய்துவருகிறேன். இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. தேர்வை  நன்றாக எழுதி வெற்றி பெற்றவுடன் சம்பந்தப்பட்ட மாணவிகள் என்னை தொடர்புகொண்டு நன்றி கூறும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை!”

Dr Radhbaiமுன்பெல்லாம் ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்றவர்கள் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை. பார்வையிழந்தவர்கள் வாழ்வில் ஒளியேற்ற அரசு ஒத்துழைக்குது. அதை அவர்கள் பயன்படுத்திக்கனும்.  இன்றைய தேதியில் பார்வையற்றவர்கள் பலர் நம் நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதில் ஒருவர் தமிழகத்திலும் இருக்கிறார். அவர்களை உதாரணம் காட்டியே இவர்களை ஊக்குவிக்க முடியும். அதற்காகவே தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் சென்றுவருகிறேன்” என்று சொல்லும் ராதாபாய் பல மாணவிகளுக்கு கைடாகவும் இருந்திருக்கிறார்.

பிறர் நிறைவிலும் உயர்விலும் பெருமிதம் காணும் ராதாபாய் அவர்களுக்கு திருமண வாழ்க்கை இனிமையாக அமையவில்லை. தோல்வியில் முடிந்த திருமண வாழ்க்கையில் இவருக்கு ஆறுதல் இவரது ஒரே மகள் பிரபா வர்ஷினி தான். தற்போது ஏழாம் வகுப்பு படித்து வரும் பிரபா தன் மகள் அல்ல… தனது விழிகள் என்று கூறுகிறார் ராதாபாய்.

அது உண்மை தான் என்பது போல, பார்வையற்ற தனது தாய்க்கு எல்லாமுமாக இருந்து வருகிறார் பிரபா.

இறைவன் இவர்களை ஆசீர்வதிக்கட்டும்.

(சந்திப்பு நடைபெற்ற நேரம் தோரயாமாக மதியம் 1.00 மணி இருக்கும். மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு சாப்பிட்டுவிட்டு பேசுவோமே என்றார் ராதாபாய்.  நாம் சற்று தயங்கினோம். “உங்களுக்காக நீங்கள் வருகிறீர்கள் என்பதால் விசேஷ சமையல் தயாராகியிருக்கிறது… மறுக்கவேண்டாம்!” என்றார். அவரது அன்பை தட்டமுடியாமல் மதிய உணவை அங்கே சாப்பிட்டோம். வயிறும் நிறைந்தது. மனமும் குளிர்ந்தது. ருசிக்கு ருசி. அன்புக்கு அன்பு!)

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று துடிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

“எந்த ஒரு செயலையும் தொடங்கும்போது நன்றாகவே தொடங்குகிறோம். இடையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் வரவே கூடாது. அப்படியே தோல்வி வந்தாலும் முயற்சி செய்யத் தயங்கக் கூடாது. நான் பி.ஹெச்டி. படித்தபோது என்னுடைய கட்டுரைகளைச் சாதாரண கம்ப்யூட்டரில் நானே டைப்பிங் செய்தேன். ஒவ்வொரு கீ-க்கும் என்ன வார்த்தை என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு டைப் செய்தேன். முடியவில்லை என்று நினைத்திருந்தால் முடங்கியிருப்பேன். இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பார்வையற்றவர்கள் நல்ல முறையில் படித்து முன்னேற முடியும். சாதித்துக் காட்டவும் முடியும்’’

“குடும்ப ஒத்துழைப்பும் சமுதாய அங்கீகாரமும் கிடைத்தால் ஊனமுற்றோரும் மற்றவர்களைப் போல வாழமுடியும். திறமைசாலிகளை இந்த உலகம் அங்கீகரிக்காமல் போனது கிடையாது!”  என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராதாபாய்.

Radhabai7
டாக்டர்.ராதாபாயுடன் நேர்காணல் – பின்னணியில் அவர் சகோதரர்!

ஒரு மாற்றுத் திறனாளி என்கிற வகையில் சக மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடல் குறைபாடுகளை தன்னம்பிக்கை, தைரியம், திறமை போன்றவற்றின் மூலம் ஈடுகட்டவேண்டும். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.”

ராதாபாயின் வார்த்தைகள் பார்வையற்றவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் மட்டுமல்ல, நம் அனைவருக்கும் தான்.

சந்திப்பு முழுக்க நம்மிடம் உற்சாகத்துடன் உரையாடிய ராதாபாய் அவர்கள் தனக்கு பார்வை இல்லையே என்று ஒரு நாளும் வருத்தப்பட்டது கிடையாதாம்.

“பார்வையில்லை என்றால் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பர். நான் ஏன் அதை அணிந்து என்னிடம் உள்ள குறையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்?” என்று கேட்கிறார் ராதாபாய்.

நமது பாரதி விழா பற்றியும் ரைட்மந்த்ரா விருதுகள் பற்றியும் குறிப்பிட்டு, “இந்த ஆண்டு, ரைட்மந்த்ரா பாரதி விருதுக்கு நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். அவசியம் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு விருதைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாற்றி எங்களை பெருமைப்படுத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. (குறள் 354)

தன்னை அறியும் உண்மையான அறிவு இல்லாவிட்டால் ஐம்புலன்கள் இருந்தும் என்ன பயன் என்று கேட்கிறார் வள்ளுவர்.

அப்படிப் பார்க்கும்போது தன்னை உணர்ந்து தெளிந்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் ராதாபாய் பாரதி கண்ட புதுமைபெண் மட்டுமல்ல, குறள்வழி நடக்கும் குறள்மகளும் கூட!

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

(ராதாபாய் அவர்கள் நம்மிடம் கூறியது, நாம் கவனித்தது, அவர் நம்மிடம் தந்த பத்திரிகை கட்டிங்குகள் மற்றும் இதுவரை அவரைப்பற்றி வந்த பல்வேறு செய்திகளின் ஜெராக்ஸ் பிரதிகள் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து சற்று விரிவாக எழுதப்பட்டது இந்த பதிவு!)

===================================================================

Also check :

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

===================================================================

[END]

10 thoughts on “ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

  1. வணக்கம்…………

    திருமதி.ராதாபாய் அவர்கள் தன்னம்பிக்கையின் சிகரம்…….. அவர்களுக்கு நம் வணக்கங்கள்………..விழாவில் அவர்களை சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி…………..இவ்வளவு சிறு வயதில் தன் அன்னைக்கு உறுதுணையாய் இருக்கும் பிரபாவுக்கு நம் வாழ்த்துக்கள்……… இறைவன் என்றும் அவர்களுக்கு நல்வழி காட்டுவார்…………

  2. தன்னம்பிக்கை பெண் திருமதி ராதாபாய் அவர்களைப் பற்றி படிக்க படிக்க மிகவும் பிரமிப்பாக உள்ளது. நம் தளம் சார்பில் தன்ம்பிக்கை பெண்ணை சந்தித்து பதிவாக எழுதி எல்லோருக்கும் தன்னம்பிக்கை விதையை விதைத்து விட்டீர்கள்/

    //மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடல் குறைபாடுகளை தன்னம்பிக்கை, தைரியம், திறமை போன்றவற்றின் மூலம் ஈடுகட்டவேண்டும். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.”// மிகவும் உண்மையான வார்த்தைகள்.

    அவர்கள் மேலும் மேலும் பல அறிய சாதனைகளை செய்ய வாழ்த்துக்கள்

    மிகவும் மதிப்பிற்குரிய சாதனையாளரை நம் ஆண்டு விழாவில் சந்திப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம்\

    நன்றி
    உமா

  3. ஒரு குறையை கொடுக்கும் ஆண்டவன்,,,அவர்களுக்கு பல அறிய திறமையை கொடுப்பான் என்று சொல்ல்வார்கள் அது இதில் நிருபணம் ஆகிறது

  4. பாரதி விருதுக்கு இதைவிட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்கமுடியாது.

    ராதாபாய் அவர்களை பார்க்கையிலேயே நமக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறது.

    அவருடைய தன்னம்பிக்கைக்கு என் வணக்கங்கள்.

    தான் பார்வையற்ற நிலையிலும் மற்றவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்ற அவர் எடுத்துகொள்ளும் முயற்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  5. தன்னம்பிக்கை பெண் ஒரு இமயம்.
    பாரதி விருதுக்கு இவர்களை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்கமுடியாது.

    திருமதி ராதாபாய் அவர்கள் மென்மேலும் பல சாதனைகள் செய்து பாரதி கண்ட புதுமை பெண்ணாக வலம் வர வாழ்த்துக்கள்

    மேலும் நம் மகா பெரியவா அவர்களின் ஆசி திருமதி ராதாபாய் அவர்களுக்கு உண்டு.

  6. ராதாபாய் அம்மாவை குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. சிறப்பாக தொகுத்தளித்துள்ளீர்கள்.பாரதி விருது அவர்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரது வானொலிப் பேட்டியை சிறு வயதிலேயே கேட்ட என்கணவர் தனக்கு ராதாம்மா தான் “ரோல் மாடல்” என்று கூறுவார்.பதிவிற்கு மிக்க நன்றி.

  7. திருமதி ராதாபாய் அவர்களின் வாழ்க்கை எனக்கு ஒரு மிகச்சிறந்த பாடம். பலவிதமான சோதனைகளால் சற்று சோர்ந்திருந்த நான் இந்த பதிவை படித்த பிறகு புதிய உத்வேகம் பெற்றுள்ளேன். மஹாகவி பாரதி விருதுக்கு இவரைவிட தகுதியானவர் வேறு யாரும் இருக்க முடியாது.

    சுந்தர், உங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். என் வாழ்க்கையை இனிமேல் உருப்படியாய் வாழ்வதன் மூலம்தான் அந்த கடனை நான் திருப்பி செலுத்தமுடியும். அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டேன். எல்லாம் இறைவன் செயல்.

  8. Happy to see this article.
    **
    After we have seen Ganesan sir at alangudi, his place, we have gone to see this great person.
    **
    I have found a lot of similar thoughts with madam. Really, she is an inspiration.

    Her best which I consider is, she knows what most of us doesn’t know – which is knowing people and their mindset deeply. Being a teacher and have taken so many classes, it’s not a big surprise. but after being a visually challenged person, she knows the people’s mindset is what speaks more and is appreciable.

    Most people like me, who has all parts in his body in good condition, still doesn’t know how the people are and what they need and how to give them. But madam does know all this (at least for her students, which is most significant part, since teacher is what mother to the country, they’re creating our country) and gives exactly what they need – to the exact amount and in an inspiring way.
    **
    I can go on like this – telling a lot of good things about madam. But considering the space, I’m limiting myself to this.
    **
    Thanks so much Sundarji for taking me for the inspiring visits – Ganesan sir and Madam. Both are inspiring in their own way.
    **
    Since I personally have known you, sundarji, I know all the pain you’re taking at each and every step of your mission to achieve success.

    2015 and indeed from Bharathi’s b’day celebrations, your life will be great I feel.
    **
    God bless.
    **

  9. மரத்தின் கிளையில் பறவை அமரும்போது அது பயப்படுவது இல்லை.. ஏனென்றால் அது நம்புவது கிளையையல்ல, தன் சிறகுகளை…

    பாரதி வாழ்ந்த காலத்தில் இவர் வாழ்திருந்தால் அந்த மகாகவியே வாழ்த்தி இருப்பான்…

Leave a Reply to Voltaire Cancel reply

Your email address will not be published. Required fields are marked *