Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > “வணக்கம் அண்ணா!”

“வணக்கம் அண்ணா!”

print
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம் என்று  கருதுகிறோம்…. வீட்டில் சானலை மாற்றி மாற்றி பார்த்துகொண்டிருக்கையில் பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் பொதிகை சானலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

சற்று வித்தியாசமான நிகழ்ச்சி அது. இருபக்கமும் திருநங்கைகள் அமர்ந்திருக்க, நடுவில் சக்கர நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு துணையாக ஒரு வயதான பெண்மணி பின்னால் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்து, அவரது திறமையை பார்த்து அவர் வாழ்க்கையை எதிர்கொண்டதை பார்த்து, திருநங்கைகள் தங்கள் பிறப்பு குறித்த அவநம்பிக்கையை போக்கிக்கொண்டு விட்டதாக நடுவரிடம் கூறிக்கொண்டிருந்தார்கள்.

In Podhigai Program
பொதிகை தொலைகாட்சியின் காற்று சிம்மாசனம் நிகழ்ச்சியில் சாதனைகள் பல புரிந்த திருநங்கைகளை சந்தித்த போது.

சமுதாயத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், திருநங்கைகளே பார்த்து மனதை தேற்றிக்கொள்ளும் அளவுக்கு யார் இவர் அப்படி ஒரு சாதனையாளர்? என்ற ஆச்சரியம் நமக்கு ஏற்பட்டது.

தொலைக்காட்சியை உற்று பார்த்துகொண்டிருக்கும்போது, அவர் சொன்னார்…. “எனக்கு வாழ்வும் வேலையும் கொடுத்து உதவியது மதுரா ட்ராவல்ஸ் திரு.வி.கே.டி.பாலன் அவர்கள் தான்!” என்று.

நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருந்தபடியால், அடுத்த சில நிமிடங்களில்  முடிந்துவிட்டது. அந்த மாற்றுத் திறனாளியின் பெயர் ஜெகதீஷ். அவருக்கு திரு.வி.கே.டி. பாலன் அவர்கள் தான் காட்பாதர். இது மட்டுமே நமக்கு தெரிந்த தகவல்.

மேற்கொண்டு எங்கே விசாரிப்பது என்று  யோசித்தபோது, பேசாமல் திரு.வி.கே.டி.பாலன் அவர்களிடமே விசாரித்துவிடலாம் என்று முடிவு செய்து அவரை அலைபேசியில் அழைத்தோம். (திரு.வி.கே.டி.பாலன் தான் நம் சென்ற பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!).

அவரிடம் ஜெகதீஷ் அவர்களை பற்றி குறிப்பிட்டு அவரை சந்திக்கவேண்டும் என்கிற நமது  ஆவலை தெரிவித்தோம். அவர் உடனே ஜெகதீஷ் அவர்களின் அலைபேசி எண்ணை தந்தார்.

ஜெகதீஷ் அவர்களை அழைத்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட போது தான் தெரிந்தது அவர் கோவையை சேர்ந்தவர் என்று. “வணக்கம் அண்ணா!” என்று பதில் கூறி உரையாடலை துவக்கினார். அதற்கு பிறகு இரண்டு நாளில் பல மணிநேரம் ஜெகதீஷுடன் பேசிவிட்டோம்.

ஜெகதீஷ் விட்ட அறை!

கோவையை சேர்ந்த வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினருக்கு ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கி கொஞ்சாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அத்தனை அழகு. பெற்றோரிடம் ஜெகதீஷ் இருந்ததைவிட அக்கம்பக்கதவர்களின் மடியில் இருந்த நாட்கள் தான் அதிகம்.

இருப்பினும் யார் கண்பட்டதோ…. மூன்று வயது நெருங்கும்போது ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது. விளையாட்டாய் குழந்தைகள் தள்ளியதில் முன்பக்க பற்கள் உடைந்து போனது. ஆசை ஆசையாய் பெற்ற குழந்தை நிற்க முடியாமல் கஷ்டப்படுவதை எந்த பெற்றோரால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? எனவே அவனை நிற்க வைக்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்து கடைசியில் உட்கார கூட முடியாமல் போனது.

குழந்தைக்கு மின்சார சிகிச்சை மூலம் அதிர்ச்சி அளித்தால் அவனால் நிற்க முடியும் என்று கூற, அதற்கும் ஏற்பாடு செய்தார்கள். அந்த சிகிச்சையோ அவனது உயிரை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் எடுத்துவிட்டது. ஆளாளுக்கு ஜெகதீஷின் உடலை அராய்ச்சி கூடமாக்க, அந்த உடலில் வளர்ச்சி என்பதே இல்லாமல் போனது.

10 ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதுவும் அதற்கு பின்னால் முடியாமல் போனது.

உட்கார கூட இயலாத சிறுவன் பத்தாம் வகுப்பு வரை படித்தது எப்படி?

ஜெகதீஷுகென்றுஆட்டோவோ, தனி வாகனமோ வைக்கும் அளவிற்கு அவன் பெற்றோர்களுக்கு வசதியில்லை. ஊனம் இருந்தாலும் பரவாயில்லை… கல்வியறிவு இல்லாமல் போய்விடக்கூடாது என்று கருதிய அந்த பெற்றோர் எப்பாடுபட்டாவது மகனை படிக்க வைத்துவிடவேண்டும் என்று விரும்பினார்கள்.

அவன் தந்தை தான் வைத்திருந்த மொப்பெட்டில்  வைத்து, கைகால்களை வண்டியின் பம்பரோடு சேர்த்து கட்டிவிடுவாராம். இப்படித் தான் பல ஆண்டுகள் பள்ளி சென்றான் ஜெகதீஷ்.

FB genius

சக்கர நாற்காலியில் இருக்கும்போது ஒரு பத்து வயது சிறுவனைப் போல காணப்படும் சிறிது நேரமே அமரமுடியும். மீதி நேரம் படுத்துக் கொண்டுதானிருப்பார். கழுத்துக்கு கீழே அவரது அவர் உடலில் செயல்படும் ஒரே பாகம் கைவிரல்கள் தான். உட்கார்ந்துகொண்டு சாப்பிட முடியாது. படுத்துக்கொண்டு தான் சாப்பிடமுடியும். அதுவும் யாராவது ஊட்டிவிடவேண்டும்.

வலியும், வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை என்று நீங்கள் கருதினால் ஏமாந்து போவீர்கள்.

இவரைச் சுற்றிலும் எப்போதும் மகிழ்ச்சியின் அலைகள் தான். இவருக்கோ இவரது பெற்றோருக்கோ இவரது நிலை குறித்த கவலையே இல்லை. முன்பு இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இல்லை.

“என்னை சுற்றிலும் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன் நான்!” என்று கூறுகிறார்.

இவரது அம்மா கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவருக்கான பணிவிடைகள் அனைத்தையும், இவரை குளிப்பாட்டுவது, சோறூட்டுவது என அனைத்தையும் செய்வது இவரது பாட்டி சுப்புலஷ்மி அவர்கள் தான்.

வளர்ந்து படித்து முடித்த பின்பும் ஏதேதோ சாக்கு கூறிக் கொண்டு வேலைக்கு போகாமல் வெட்டி அரட்டையில் ஈடுபட்டு பெற்றோரின் சம்பாத்தியத்தில் காலம் தள்ளும் பிள்ளைகளுக்கு நடுவே இவர் பெற்றோருக்கு சம்பாதித்து கொடுக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

தனது முதலாளி மதுரா ட்ராவல்ஸ் பாலன் அவர்களுடன்
தனது முதலாளி மதுரா ட்ராவல்ஸ் பாலன் அவர்களுடன்

இந்த லேசான அசைவுகளை கொண்டே இன்று கணினியில் தனது அறிவை வளர்த்துக்கொண்டு, ஒரு மிகப் பெரிய நிறுவனத்துக்கு இணையதள வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு ஆலோசகராக இவர் பணிபுரிகிறார் என்றால் நம்பமுடிகிறதா? (தினமலரில் வெளியான இவரது கதையை பார்த்த திரு.மதுரா ட்ராவல்ஸ் பாலன் அவர்கள் REMOTE ACCESS மூலம் கோவையில் வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் விதமாக இவருக்கு தனது நிறுவனத்தில் வேலை போட்டு கொடுத்திருக்கிறார்.)

ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்ஸ்பாட், என இணையத்தில் இவருக்கு தெரியாத தொழில் நுட்பங்களே கிடையாது.

மதுரை அகவிழி பார்வையற்றோர் விடுதியினரால் தன்னம்பிக்கை சுடர்  என கௌரவிக்கபட்ட போது.
மதுரை அகவிழி பார்வையற்றோர் விடுதியினரால் தன்னம்பிக்கை சுடர் என கௌரவிக்கபட்ட போது.

முகநூலில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையே பதிவு செய்கிறார். வெட்டி அரட்டைகளில் ஈடுபடுவதில்லை. தினமும் ஒரு திருக்குறளை அர்த்தத்துடன் பகிர்கிறார். சமுதாயத்தை மாற்றவேண்டும் என்று துடிக்கிறார். குறிப்பாக தறிகெட்டு போய் தங்கள் ஆற்றலை வீணடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவேண்டும் என்கிற ஆர்வம் இவருக்கு இருக்கிறது.

Jaggu-friends

இவருடைய நண்பர்கள் வட்டம் மிகச் சிறந்த ஒன்று. ஒவ்வொருவரும் ஒரு வகையில் சமுதாயத்தை மாற்ற துடிக்கும் இளைஞர்கள். விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்கள் எங்கேயிருக்கிறார்களோ இல்லையோ… இதோ இங்கே இவருடன் குறைந்தது ஒரு இருபது பேராவது இருக்கிறார்கள்.

ஜெகதீஷுக்கு குறைபாடு உடலில் தான் உள்ளதே தவிர மனதில் இல்லை. இவருடைய தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது. தான் கற்றதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்கிற ஆர்வம் இவருக்கு நிரம்ப இருக்கிறது.

இவருடைய ஒரே லட்சியம், ‘பிறந்த ஊருக்கு புகழைச் சேரு வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு’ என்பதற்கிணங்க, தனக்கு கல்வியறிவு புகட்டிய கோவை அம்ருத் பள்ளிக்கு கௌரவம் தேடித் தர எண்ணுகிறார்.

kalamதன் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவம் என்று இவர் எதை குறிப்பிடுகிறார் தெரியுமா?

கோவைக்கு திரு.அப்துல் கலாம் அவர்கள் வந்தபோது இவரை பார்த்து, “நீ மாற்றுத் திறனாளி அல்ல. பலரை மாற்றும் திறனாளி” என்று கூறி வாழ்த்தியது தான்.

கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றிருக்கிறார்.

அது மட்டுமா  மாணவர்கள் தனது  உடலை தானமளித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல இவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடலை தானம் செய்ய எழுதிக்கொடுத்துள்ளனர்.

Jagadish Body Donation
உடல் தானம் செய்தமைக்கான சான்றிதழை எழுத்தாளர் ராஜேஷ்குமார் இடம் இருந்து பெறும்போது.

சமீபத்தில் ஒரு நாள் ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் பிறந்தநாளையொட்டி இவர் முகநூலில் பகிர்ந்திருந்த பதிவை பார்த்துவிட்டு அவருக்கு ஃபோன் செய்தோம். “அந்த சுதந்திர போராட்ட வீரரின் பிறந்த நாள் இன்று அல்ல. அது வேறு ஒரு நாள். எங்கேயிருந்து தகவலை பெற்றீர்கள்?” என்று கேட்டோம்.

ஒரு பிரபல இணையத்தை குறிப்பிட்டார். நாம் அந்த இணையத்துக்கு சென்று பார்த்ததில் அந்த இணையத்தில் அத்தகவல் இவர்ட் குறிப்பிட்டதை போல பதிக்கப்பட்டிருந்தது.  விக்கிப்பீடியாவில் பார்த்ததில் வேறு ஒரு தேதி இருந்தது. விக்கிப்பீடியாவில் தான் தவறு என்று இருவரும் சற்று ஆராய்ச்சி செய்த போது கண்டுபிடித்தோம்.

விக்கிப்பீடியாவில் தப்பை கண்டுபிடிச்சாச்சு. அடுத்து என்ன நம்ம வேலையை பார்க்க போகவேண்டியது தானே?

ஆனால் ஜெகதீஷ் அடுத்து சொன்னது தான் நமக்கு ஒரு அறை.

“அண்ணா… தினமும் எத்தனையோ லட்சம் மாணவர்கள் பார்க்கும் விக்கிப்பீடியாவில் தவறு இருக்கக்கூடாது. அந்த தவறை நாம திருத்துவோம்ணா” என்றார். “எனக்கு விக்கிப்பீடியாவுல அக்கவுண்ட் இல்லே. உங்களுக்கு இருந்தா நீங்க திருத்துங்க அண்ணா. இல்லேன்னா.. நான் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி திருத்துறேன்!” என்றார்.

அவர் எனக்கு பதில் சொன்னது போல இல்லை… பளார் என்று அறைந்தது போல இருந்தது.

உடலுறுப்புக்கள் செயலிழந்து வீட்டி முடங்கிக் கிடக்கும் ஒருவருக்கு, விக்கிப்பீடியாவில் ஒரு தவறான தகவல் இடம்பெறலாகாது… அதுவும் நமக்கு உண்மை என்ன என்று தெரிந்த பிறகு அது நிச்சயம் திருத்தப்படவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அனைத்தும் பெற்ற நாம் செய்வது என்ன? சற்று யோசித்து பாருங்கள்…

“அட போங்க சார்… நாட்டை திருத்த எங்கே எனக்கு நேரம் இருக்கு? ஃபேஸ்புக்ல என் அரசியல் ஆசான் மாண்புமிகு.கம்பிக்கு அஞ்சா கனவானை ஒருத்தன் திட்டிட்டான். அவனை ரவுண்டு கட்டி அடிக்கணும்… உள்ளே போன என் அபிமான அரசியல் கட்சி தலைவரை ஒருத்தன் கேள்வி கேட்டுட்டான்… அவனை நறுக்குன்னு நாலு வார்த்தை நான் பதிலுக்கு கேட்கணும்… என் பேவரைட் ஆக்ட்ரெஸ் கொஸ்ரியா கொசின் ஹனிமூன் ட்ரிப் ஃபோட்டோஸ் கிடைச்சிருக்கு… அதை பார்க்கணும்… என் தலைவர் ஷூட்டிங் ஸ்பாட்ல கீழேயிருந்து மேலே பார்க்குற மாதிரி ஸ்டில் ஒன்னு கிடைச்சிருக்கு… வேற எவனாச்சும் அதை ஷேர் பண்றதுக்குள்ளே நான் அதை நாலு பேருக்கு ஷேர் பண்ணி என் கெத்தை காமிக்கணும்… இவ்ளோ வேலைங்க இருக்கு. இதுல விக்கிப்பீடியா… கொக்கிப்பீடியான்னுகிட்டு… போவீங்களா….”

அதானே…. தமிழன்டா!!

=============================================================

இதோ மற்றுமொரு சாதனையாளர்!

ஜெகதீஷைப் போன்றே ஊனத்தை வென்று சாதனை படைத்திருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த சூர்யா என்கிற வாலிபரை பற்றி நாம் ஏற்கனவே ஒரு பதிவளித்திருக்கிறோம்.

நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது.

இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.

Suriya varman

அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன்.

பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் தண்டுவடப் பிரச்னை காரணமாக அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி சரியாகச் செயல்படாது என்ற சூழ்நிலை.

செயல்படாத உடம்பின் பாகங்களுக்கும் சேர்த்து மூளை அபாரமாகச் செயல்பட்டது. இடதுகைப் பழக்கம் காரணமாக, இடக்கையில் எடுத்துச் சாப்பிடுவதைக் கவனித்த தாத்தா, சாப்பிடுவதையாவது வலது கையில் செய்யக் கூடாதா? என்று கேட்டதும், சற்றும் தயங்காமல், “கடவுள் எனக்கு வலது கையை இந்தப் பக்கம் வச்சுட்டான் தாத்தா”, என்று சொன்ன போது சூரியாவுக்கு வயது 3 தான். இப்படி அறிவான சூர்யாவை சென்னையில் உள்ள சிறப்பு பள்ளியில் பெற்றோர் படிக்க வைத்தனர். சூர்யாவும் இங்கு சிறப்பாக படித்தான்.

நான்காம் வகுப்புப் படிக்கும் போது இன்னொரு கடுமையான சோதனை,‘வாக்கரின்’ உதவியோடு நடந்து கொண்டிருந்த சூர்யாவை விளையாடிக் கொண்டிருந்த வேறு சில சிறுவர்கள் தெரியாமல் தள்ளிவிட்டதில் சூர்யாவிற்குத் தலையில் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், சூர்யா இனிமேல் ‘வாக்கர்’ வைத்தும் நடக்கமுடியாது ‘வீல்சேரில்தான்’ நடமாட முடியும், இதுவரை இயங்கி வந்த கைகளும் வழக்கம் போல இயங்காது, ஒருவித நடுக்கத்துடன்தான் செயல்படும், பேசும்போது வார்த்தைகள் ரொம்பவே திக்கும், என்று சொல்லிவிட்டனர். இந்த வேதனையை எல்லாம்கூடத் தாங்கிக் கொண்ட சூரியாவால் பள்ளியில் படிப்பைத் தொடரமுடியாது என்ற வேதனையைத்தான் தாங்கமுடியவில்லை.

வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தான். தனது அண்ணனின் கம்ப்யூட்ரைப் பொழுது போக்காக இயக்க ஆரம்பித்தான். நடுங்கும் தனது கைகளைக் கொஞ்சமாவாது நிலையாக நிறுத்த அது ஒரு பயிற்சியாக இருந்தது; அண்ணனும் தனக்குத் தெரிந்ததைத் தம்பிக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுத்தார். கம்ப்யூட்டரே தனக்கான வடிகால் என்று சூர்யா எடுத்துக் கொண்டதும் அதில் முழுமூச்சாக இறங்கிவிட்டான்.

Surya

கம்ப்யூட்டரை ஆராய்ந்து, ஆராய்ந்து இத்தனை வருடங்களில் அதில் தேர்ந்து விட்ட சூர்யா இப்போது அகில இந்திய அளவில் செயல்படக்கூடிய பெரிய சிறிய நிறுவனங்களின் வெப் டிசைனர் ஆவார்.

நிறுவனங்கள் பெரியதோ, சிறியதோ தம்மைப் பற்றி வெளியில் சொல்ல ஒரு வெப் சைட் அவசியம் தேவை, அந்த வெப்சைட் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும், எல்லாவிதத் தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு வெப் சைட்டை உருவாக்கித் தருவதுடன், அனிமேசன் மற்றும் ஆடியோ வீடியோ எடிட்டிங் போன்ற அருமையான புத்திசாலித்தனமான துறைகளிலும் ‘ஒன்மேன்ஆர்மியாக’ சூர்யா தற்போது சாதித்து வருகிறார்.

புகழ் பெற்ற திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் நிறுவனமான MENAKA CARDS PVT LTD, NORTH EASTERN MARITIMES SERVICE PVT.LTD, BUDGET FURNITURE, IMPERIAL INFOTECH, VARNA உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வெப் சைட்கள் இவர் டிசைன் செய்தவைதான்.

“என்னைப் பார்த்து என் மீது இரக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் எனக்கு வேண்டாம்; என் திறமையை, என் கற்பனையை, என் தொழிலை மட்டும் பாருங்கள்; பின் உங்கள் நிறுவனத்தின் வெப் சைட்டை டிசைன் செய்ய எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள்; அது போதும்” என்று சொல்லும் சூர்யாவின் தன்னம்பிக்கை நம்மை வியக்கவைக்கிறது.

(சூரியாவைப் பற்றி ஏற்கனவே ஒரு விரிவான பதிவு வெளியிட்டிருக்கிறோம்.)

=============================================================

ஜெகதீஷ் அவர்களிடம் பேசப் பேச அவரை நமது தளத்திற்காக கோவைக்கு நேரில் சென்று அவரை சந்திக்கவேண்டும் என்று ஆவல் கொண்டோம். அது பற்றி ஒரு நாள் ஜெகதீஷிடம் பேசும்போது, “பொள்ளாச்சியை சேர்ந்த சூர்யாவை தெரியுமா? அவரும் உங்களை போல ஒரு மாற்றுத் திறனாளிதான். ஆனால் விதியை வென்று சாதித்துக்கொண்டிருக்கிறார். ரைட் மந்த்ராவில் கூட அவரைப் பற்றிய பதிவு ஒன்றை அளித்திருக்கிறேன்!” என்றோம்.

“அண்ணா…  சூர்யாவை எனக்கு நல்லாத் தெரியும். நானும் அவரும் பேஸ்புக்ல கூட ப்ரெண்ட்ஸ்!” என்றார். (இப்போது நாம் ஜெகதீஷ், சூரியா மூவரும் முகநூலில் நண்பர்கள்.)

அப்போது தான் இருவரையும் ஒரே இடத்தில் வைத்து நம் தளத்திற்காக சந்திக்க வைத்து, பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அடுத்த சில நாட்களில் ஏற்பாடுகள் மளமளவென நடக்க, கோவையில் ராம்நகரில் உள்ள ஜெகதீஷின் இல்லத்தில் அனைவரும் சந்திப்பது என்று முடிவானது.

அடுத்து…..

ஊனத்தை வென்று இந்த உலகத்தை புரட்டிப்போட்டு கொண்டிருப்பவர்களுடன் ஒரு சந்திப்பு! RIGHTMANTRA EXCLUSIVE!!

விரைவில் ஒரு பிரமிக்க வைக்கும் நேரடி அனுபவம்….!!!!

=============================================================

[END]

8 thoughts on ““வணக்கம் அண்ணா!”

  1. மிகவும் அருமையான பதிவு, டிவி நிகழ்ச்சியில் ஒரு சிறிய வரியைக் கேட்டு //எனக்கு வாழ்வும் வேலையும் கொடுத்து உதவியது மதுரா ட்ராவல்ஸ் திரு.வி.கே.டி.பாலன் அவர்கள் தான்!” திரு ஜகதீஷ் அவர்களை கண்டு பிடித்து பதிவாக வெளியிட்டு அசத்தி விட்டீர்கள். திரு ஜகதீஷ் பற்றி படிக்க படிக்க அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்க் காரராக வேண்டும் என்று வாழ்த்த தோன்றுகிறது. சூரியவை பற்றி நம் தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறோம். இவர்கள் ஊனத்தை வென்ற ரியல் சாதனையார்கள். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
    நன்றி
    உமா

  2. Really I ashamed of myself – after seeing this article. I had wasted thousands of hours of time.
    **
    Thanks so much for sharing this article. I, like few in the world, thought so far most of the time – that Why did I ever get to this stage, why these much problems to me and all.
    **
    But, now I have changed. Soon, I will raise myself and once I do so, will raise others as well.
    **
    Great that you’re working damn hard to get as much as inspirational things and inspiring persons as possible and to let us know the same.
    **
    I’m glad that I know you in person for some time. Keep it up. Continue your journey. You will reach phenomenal heights in the upcoming time along with your ancestors’ blessings.

  3. ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டிய பதிவு…

    நீ மாற்றுத் திறனாளி அல்ல. பலரை மாற்றும் திறனாளி – இது ஒரு வைர வரி.. அருமை..

    தம்மை சுற்றி மகிழ்ச்சியையும், சமுதாய மாற்றத்தையும் விதைக்கும் இவரைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இவர் செய்யும் பணிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    படிக்கும் போது Stephen Hawking நினைவுக்கு வருகிறார்..
    http://www.youtube.com/watch?v=nSRyY859VvU

  4. உண்மையிலேயே எனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய சந்திப்பு இது…என் எண்ணங்களில், செயலில், சிந்தனையில் ஜெகதீசும் சூர்யாவும் நிறைய மாற்றங்களை எற்படுத்திவிட்டார்கள்…விரைவில் முழு தொகுப்பையும் எதிர்பார்க்கிறேன்…உங்களின் சுவாரசியமான எழுத்துகளில்…!

    விநாயகருக்கும் நம் தளத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு போல….நம் தளம் ஆரம்பிக்கப்பட்டது ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று…! இதோ நீங்கள் ஜெகதீஷை தொலைக்கட்சியில் பார்த்ததும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தான்…! எல்லாம் விநாயகனின் செயல் போலும்..!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  5. அருமையான பதிவு…………திரு.ஜகதீஷ் மற்றும் திரு.சூர்யா இருவரும் தன்னம்பிக்கையின் சிகரங்கள்…………..எல்லா நிறைகளும் இருந்தும் உழைக்க மறுப்பவர்களுக்கு இவர்கள் சரியான பாடம்……….

  6. நண்பர்களே

    கையிருந்தும் காலிருந்தும் இந்த சகோதரர்கள் செய்த முயற்சிகளில் ஒரு குறிப்பிட்ட சதவிதம் கூட செய்யாத நாம் தான் ஊனமுற்றவர்கள். இவர்கள் மென் மேலும் சாதிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    சங்கர நாராயணன்
    http://www.myriadwealth.in

Leave a Reply to **Chitti** Cancel reply

Your email address will not be published. Required fields are marked *