Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > “என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

print
கத்சிங். இந்திய விடுதலைப் போர் வரலாறு இவரைப் போல ஒரு மாபெரும் வீரரை கண்டதில்லை. 1931 ஆம் ஆண்டு, பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 23. தூக்கில் ஏறுவதற்கு முன்பு பகத்சிங் சொன்னது என்ன தெரியுமா? “மரணத்தை கண்டு  நான் பயப்படவில்லை. மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்றாமல் நான் மரணிக்கிறேன் என்பது தான் என் வருத்தம்!” என்றார். தாய்நாட்டிற்காக தனது உயிரை 23 வயதிலேயே தியாகம் செய்த அந்த மாவீரன் சொன்னது இது.

நாம் இந்த நாட்டுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறோம்? நம் இளைஞர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? இனி என்ன செய்யப்போகிறோம்? நடிகர், நடிகையரின் பிறந்த நாளை மறக்காமல் கொண்டாடும் இன்றைய இளைய சமுதாயத்தினர் எத்தனை பேருக்கு நாளை செப்டம்பர் 28 அந்த மாவீரரின் பிறந்தநாள் என்று தெரியும்?  அல்லது நம்மில் தான் எத்தனை பேருக்கு தெரியும்?

DSC_7515
சென்ற ஆண்டு நம் தளம் சார்பாக நடைபெற்ற பகத்சிங் பிறந்தநாள் பேச்சு போட்டியில் பேசும் பள்ளி மாணவன்

ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்தபோது பகத்சிங்குக்கு வயது 12. ஒரு நாள் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே சென்ற பகத்சிங், நேரே படுகொலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, நம் இந்தியரின் இரத்தம் தோய்ந்த அந்த மண்ணை ஒரு சிறிய பாட்டிலில் நிரப்பி வந்து, அதை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தாராம். அப்பா… அப்பா… இதுவல்லவோ பக்தி…!

“உன் மாநிலம் எது? உன் நாடு எது?” என்று யாரேனும் நம்மை கேட்டால், “மகாகவி பாரதி பிறந்த தமிழ்நாடு எங்கள் மாநிலம். மாவீரன்  பகத்சிங்கை பெற்ற நாடு என் நாடு!” என்று சொல்வோம்.

தலைவணங்குகிறோம் அந்த வீரனை. வெட்கத்துடன்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 29 அன்று சென்னையில், நமது ஆண்டுவிழா நடைபெற்றபோது, பகத்சிங் பிறந்தநாள் விழாவும் சேர்த்து கொண்டாப்பட்டது நினைவிருக்கலாம். அது சமயம் குழந்தைகள் பங்கு பெற்ற பகத்சிங் பிறந்தநாள் பேச்சு போட்டி நடத்தப்பட்டு நன்றாக பேசிய சிறுமிக்கு பரிசும் வழங்கப்பட்டது.

DSC_7630
முதல் பரிசு பெற்ற மாணவி மு.பானுப்ரியா

இன்று மாலை 6.30  க்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் வாரியார் சுவாமிகளின் பேரக்குழந்தைகள் பங்குபெற்று பாடும் நவராத்திரி பாடல் நிகழ்ச்சியின் இறுதியில், பகத்சிங் பிறந்த நாளையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்படும்.

இன்குலாப் ஜிந்தாபாத்.

பகத்சிங்கின் இறுதி நாட்கள் பற்றி உணர்வுபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள இந்த பதிவை அவசியம் வரிவிடாமல்  படியுங்கள். அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பகத்சிங்  பிறந்த நாட்டில் எம்மை படைத்த இறைவனுக்கு நன்றி!!!

– ஆசிரியர், www.rightmantra.com

(சரி… தலைப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதில் எங்கே என்று தானே கேட்கிறீர்கள். கீழ் காணும் கட்டுரையை படியுங்கள். பதில் அதில் உள்ளது!)

=====================================================================

பகத் சிங் – ஒரு மாவீரனின் இறுதி கணங்கள்!

பகத்சிங்கின் குடும்பத்தில் தந்தை பாட்டனார் அனைவருமே போராட்ட உணர்வுக்காரர்கள். நாட்டின் விடுதலைக்குத் தங்களைத் தந்தவர்கள். பகத்சிங்கின் தந்தை கிக்ஷ்ன் சிங், அவருடைய சகோதரர் அஜீத் சிங், பாட்டனார் அர்ஜூன் சிங், அனைவருமே நாட்டு விடுதலைக்குப் போராடியவர்கள். வழி வழியாக ஏறத்தாழ ஜமீன்தார் குடும்பம்தான். பகத்சிங் பிறந்த அன்றுதான் தந்தையின் சகோதரர் அஜீத் சிங் மகிழ்ச்சியோடு நீண்ட நாட்களுக்குப்பிறகு வீட்டுக்கு வருகிறார்.

Bhagat Singhதூக்கில் இடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பகத்சிங்கை அதே சிறையில் இருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரன் மிகுந்த சிரமப்பட்டு அவன் கொட்டடியில் போய்ச் சந்திப்பதற்கு அங்கே இருக்கக்கூடிய சில அதிகாரிகளின் துணையோடு பல நாள்கள் முயற்சித்து, பகத்சிங்கை கொட்டடியில் சந்தித்துப் பேசினார்.

பாபா ரண்வீர் சிங் என்கின்ற அந்த சீக்கிய சுதந்திரப் போராட்ட வீரன், பகத் சிங் மீது கொண்டு இருந்த அளவற்ற பாசத்தின் காரணமாக,‘நீ மரண தண்டனை பெற்று, தூக்குத் தண்டனைக்குச் செல்லப் போகிறாய்; வாழ்நாளெல்லாம் நீ ஆண்டவனை வழிபடாமல் நாத்திகம் பேசி வந்தாய்; எனவே, இந்தக் கடைசி நேரத்திலாவது நீ கிரந்தங்களைப் படிக்க வேண்டும், நீ இறைவனை நெருங்க வேண்டும், கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று வாதாடினார்.

இருவருக்கும் இடையில் நீண்டநேரம் விவாதம் நடைபெற்றது. அந்தக் கருத்தை பகத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆத்திரப்பட்டு தன் கருத்தை ஏற்கவில்லை இவன், கடைசிநேரத்தில்கூடக் கடவுளை நாடவில்லை என்பதால், புகழ் போதை உன் கண்ணை மறைக்கிறது, அதனால் ஏற்பட்ட திமிர் உனக்கு அகந்தையைத் தந்து இருக்கிறது, கடவுளுக்கும் உனக்கும் இடையில் அந்த அகந்தையும் திமிரும் கருந்திரையாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, அந்தக் கொட்டடியைவிட்டு ரண்வீர் சிங் பாபா வெளியே போய்விட்டார்.

இதன் காரணமாகத்தான் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்று பகத் சிங் எழுதுகிறார். அதே சொற்களின் தாக்கம்தான், நீங்கள் படித்தீர்களானால் தெரியும். போதையினாலோ புகழ் போதையினாலோ அகந்தையினாலோ அல்ல என்று ரண்வீர் சிங் பாபா எழுப்பிய கேள்விக்குப் பதில். அவர் உள்ளத்தில் மிகச்சிறந்த சிந்தனையாளன் பகத்சிங். தீர்க்கமான சிந்தனையாளன். ஆகவேதான் நான் ஏன் நாத்திகன் என்று ஆங்கிலத்தில் எழுதினான். ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவன் பகத்சிங்.

கத் சிங் ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றவுடன் தலைமுடியைக், கொண்டையை எல்லாம் எடுத்துவிட்டார் அல்லவா? தாடி கிடையாது. சிறையில் மீண்டும் கொண்டை வளர்ந்துவிட்டது. சீக்கியர்களுக்கே உரியது அல்லவா, அந்தக் கொண்டையை மேலே முடிச்சுப்போட்டு வைத்து இருக்கிறார். அம்மா பக்கத்தில் கூப்பிட்டு மார்போடு அணைத்துக்கொண்டு அந்தக் கொண்டையைத் தடவிக் கொடுக்கிறார்கள். என்னதான் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அவளை அறியாமல் கண்ணீர் பொங்குகிறது.

அப்பொழுது பகத்சிங் சொல்கிறார்: ‘அம்மா நான் இறந்து போவேன் என்று பகத் சிங் தாயார் அழுதார் என்று வெளி உலகம் நினைக்கக்கூடாது. அவர் தாய் தைரியமாக அதை ஏற்றுக் கொண்டார் என்று உலகம் போற்ற வேண்டும். நீங்கள் கண்ணீர் விட்டதாக இந்த உலகம் நினைக்கக்கூடாது’ என்று தன் தாயாரிடத்தில் சொல்கிறார்.

பகத்சிங்கின் தோழர்களிடம் இருந்து சிறைக்கு ஒருகேள்வி அனுப்பப்படுகிறது “நீ உயிர்வாழ ஆசைப்படுகிறாயா” என்பதே அக்கேள்வி. அதற்கு மார்ச் 22 ஆம் தேதி பகத்சிங் எழுதும் பதில் கடிதமே அவரது கடைசி எழுத்தாகும்.

அதில் பகத்சிங் கூறுகிறார்.

“வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானது. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது.

ஒரு சிறைக் கைதியாகவோ, நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை. என் பெயர் இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகி உள்ளது.

துணிச்சலோடும், புன்னகையோடும் நான் தூக்குமேடையேறினால் அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் உயிர்த் தியாகம் செய்ய சித்தமாவோர் எண்ணிக்கை பெருகும். புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.

மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சிலகுறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கடைசிக் கட்டத்துக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உங்கள் தோழன்
பகத்சிங்

Bhagat_Singh's_execution_Lahore_Tribune_Front_page copy

பிரேம்நாத் மேத்தா என்கின்ற பகத்சிங்கின் வக்கீலுக்கு அங்கே நேர்காணலுக்கு அனுமதி கிடைக்கிறது. அவர்தான் பகத்சிங்கைக் கடைசியாகச் சந்தித்தவர். அவர் இண்டர்வியூ அறையில் இருக்கிறார். பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் கடைசி சந்திப்பு. பிரேம்நாத்தான் பகத்சிங்கை தூக்கில் போடுவதற்கு இரண்டுமணி நேரத்துக்கு முன் சந்தித்தவர்.

பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். வந்த உடன் பகத்சிங், ‘நான் கேட்ட புத்தகம் கிடைத்ததா?’ என்கிறார். என்ன புத்தகம்? கேட்டார் என்றால், Lenin the revolutionary ‘புரட்சிக்காரர் லெனின் என்கின்ற புத்தகத்தைப்பற்றி நல்ல மதிப்புரை வந்து இருக்கிறது. அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னனே, நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

‘புத்தகம் கிடைத்தது’ என்று கையில் கொடுக்கிறார் வழக்கறிஞர் மேத்தா. உடனே பகத்சிங் மிகவும் மகிழ்ச்சியுற்று அங்கேயே அதைப்படிக்க ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, சொல்கிறார் ‘அநேகமாக நாளைக்குக் காலையில் தூக்கில் போட்டாலும் போட்டுவிடுவார்கள்’ என்று சொல்கிறபோது, ஜவஹர் லால் நேருவுக்கும், சுபாக்ஷ் சந்திர போசுக்கும் அவர்கள் நான் சிறையில் இருந்தபோது கவலைப்பட்டு என் வழக்கில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக இரண்டுபேருக்கும் நான் நன்றி தெரிவித்தேன் என்று அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்’ என்று வக்கீலிடம் சொல்லிவிடுகிறான் பகத்சிங். திரும்ப கொட்டடிக்கு கொண்டு போனார்கள் பகத்சிங்கை.

அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருக்கிறார். அப்பொழுது, ‘சாகேப் சாகேப்’ என்கிறார்கள். சிறையில் எல்லாம் கம்பிபோட்ட கதவு கிடையாது. இப்பொழுது எங்களுக்கு எல்லாம் கொட்டடியில் கம்பி போட்ட கதவு இருந்தது. எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதில் கதவைத் தகரத்தைப்போட்டு மூடிவிட்டான். உள்ளே இருக்கிறார். பகத்சிங் இருக்கின்ற அறைக்குவந்து, ‘சாகேப் சாகேப் கதவைத் திற’ என்கிறார்கள். பகத்சிங்கோ, ‘இப்பொழுது என்னை இடையூறு செய்யாதே. நான் ஒரு புரட்சிக் காரனைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்கிறார்.

முக்கியமான புரட்சிக்காரனை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன் என்றவுடன் பயந்து, மேலே சூப்பிரண்ட் அலுவலகத்துக்கு ஓடி, அங்கு இருந்து பெரிய படை அணிகளோடு வந்து விடுகிறார்கள். வந்து கதவைத் திறந்து பார்க்கிறார்கள் புரட்சிக்கார லெனின் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறார் பகத்சிங். என்னவென்று கேட்கிறார். ‘உங்களைத் தூக்கில் போடப்போகிறோம்’ என்கிறார்கள். ‘நாளைக்குக் காலையில்தானே எங்களுக்குத் தூக்கு. இன்னும் பதினொரு மணிநேரம் இருக்கிறதே?’ என்கிறார். ‘இல்லை பைனல் ஆர்டர் வந்து விட்டது. இன்றைக்கே தூக்கில் போடவேண்டும்’ என்கிறார்கள்.

பகத் சிங் உடனே, ‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. பிரிட்டிக்ஷ் அரசுக்கும் கருணை பிறந்து விட்டது. அடிமைப்பூச்சிகளாக இன்னும் ஒரு 12 மணி நேரம் இங்கே இருப்பதைவிட, சீக்கிரமாக விடைபெற்றுப் போவது நல்லது என்று எங்களை சீக்கிரமாக அனுப்புகிறார்கள் என்று சொல்கிறார். இதற்குள் இந்தச் செய்தியைக் கேள்விபட்டு பர்கத் என்கின்ற முடி திருத்துகிற சகோதரன், அவனும் சிறைக்கைதிதான். அவனுடைய லாக்கப்தான் கடைசி. அவன் வரிசையாக ஓடி, எல்லா கொட்டடிக்கும் சென்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கில் போடப்போகிறார்கள் தூக்கில் போடப்போகிறார்கள் என்று சொல்லி விடுகிறான். அனைவருக்கும் தெரிந்து விட்டது.

அதன்பிறகு, மாலை ஆறரை மணி அளவில் அவர்களை குளிக்கச் சொல்கிறார்கள். கடைசியாக பகத்சிங் அவனுக்கு மிகவும் பிடித்தமான ரசகுல்லா சாப்பிடுகிறார். மூவரையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அதற்குமுன்பு கடைசியாக தலைமை வார்டன் இருக்கிறார் அல்லவா? அவரும் ராணா …. சிங் மாதிரி அப்பா கடைசியிலாவது நமது கிரந்தங்களின் அடிப்படையில் நீ சாமி கும்பிட்டு விடலாமே என்கிறபோது பகத்சிங் சொல்கிறார், என்ன கத்தார்சிங் உன் கடவுளே என்னைப்பற்றி மோசமாக நினைத்து விடுவாரே? என்னைக் கோழை என்று நினைத்து விடுவாரே? கடைசிவரை நாத்திகனாக இருந்து, சாவு வருகிறது என்றவுடன் பயந்து ஆத்திகத்துக்குப் போய்விட்டான் என்று என்னைப்பற்றி நினைக்க மாட்டாரா? அப்படி ஒரு பெயர் எனக்கு வராதா?

ஆகையினால், நான் கடைசிவரை மத நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து விடுகிறேன். ஆனால், 10 ஆவது குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் வாசகங்கள்தான் என் மனதில் இருக்கின்றன. குரு கோவிந்த் சிங் சொன்னார், சிட்டுக்குருவிகளை வல்லூறுகளோடு மோதச் செய்யாவிட்டால், எனக்கு குருகோவிந்த் சிங் என்ற பெயர் இருந்து பயன் இல்லை. வல்லூறுகளை எதிர்த்து சிட்டுக்குருவிகளைப் போராட வைக்க முடியும். இந்த வாசகம் குருகோவிந்த் சிங்கின் வாசகம் என் மனதைக்கவர்ந்த வாசகம் என்று சொன்னார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 21 ஆம் தேதி, கவர்னருக்கு இந்த மூவரும் கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தில்தான் குறிப்பிட்டார்கள். ‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங்கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நாங்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று கவர்னருக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்கள். ஆனால், அதை கவர்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பகத்சிங் தம்மை தூக்கில் இடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி தந்தது ஆங்கில அரசு.

‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங்கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நாங்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். “நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய், உன்னை எப்படிக் கொன்றால் என்ன?” என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள். அதற்கு பகத்சிங்,””தூக்கிலிடும்போது என் கால்கள் என்னுடைய தாய் மண்ணை தொட முடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியால் சுடும்போது என்னுடைய தாய் மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை” என்று கூறினார்.

‘அதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று பதில் வந்தது.

‘அப்படியானால் எங்கள் கண்களின் கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள். நாங்கள் பிறந்த மண்ணை நாங்கள் மகிழ்ச்சியாக பார்த்துச் சிரித்துக்கொண்டே சாக விரும்புகிறோம்’ என்கிறான். மீண்டும் இந்த மண்ணில் பிறக்க விரும்புகிற நாங்கள் இந்த மண்ணைத் தரிசித்தவாறே சாக விரும்புகிறோம் என்கிறான் பகத்சிங்.

உடனே அந்த அதிகாரி, தனக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, கண் கட்டுகளை அவிழ்த்து விடச்சொன்னான். கலகலவெனச் சிரித்தான் பகத்சிங். ‘ஏன் சிரிக்கிறாய்? என்றான். மகிழ்ச்சியாக இந்த மண்ணைத் தரிசித்தவாறே நான் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு நாங்கள் சாகின்ற காட்சியைப் பார்க்கின்ற பாக்கியம், உன்னைத்தவிர இந்த உலகத்தில் வேறு எவனுக்கும் கிடைக்கவில்லை’ என்று சொன்னான். மூவரையும் தனித்தனியாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

முதலில் பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், ‘சுகதேவ் வருகிறேன். இராஜகுரு வருகிறேன். புரட்சி ஓங்குக. இன்குலாப் சிந்தாபாத்’ என்று அந்தத் தூக்குக்கயிற்றை வாயால் எடுத்து முத்தமிட்டார், அதற்குப்பிறகு கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டினார்கள். மற்ற இருவரும் அதேபோல ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்களும் அந்தத் தூக்குக்கயிற்றை அணைத்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், இது எதுவுமே தெரியாமல் நாளைக் காலையில் தூக்கில் போடுவதற்கு முன்பு கடைசியாக ஒருதடவைப் பார்த்துவிடலாமா என்ற ஏக்கத்தில், பகத்சிங்கின் தாயும் தந்தையும் கிஷன்சிங்கும் வித்யாவதி கெளரும் சிறை வாசலில் நிற்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது. ஏழரை மணிக்கே தூக்கில் போட்டு விட்டார்கள் என்பது தெரியாமல் அவர்கள் வாசலிலேயே நிற்கிறார்கள். அவர்கள் கடைசியாக ஒருமுறை மகனைப் பார்க்க முடியுமா? என்று கேட்கிறபோது, ‘சிறை அதிகாரி அலுவலகத்தில் இல்லை. நாளை காலையில் வாருங்கள்’ என்று அவர்களை பகத்சிங்கைத் தூக்கில் போடுகிற அதே நேரத்தில் அனுப்பி விட்டார்கள்.

தூக்கில் போட்ட உடன் சிறைக்குப் பின்வாசல் வழியாக இந்த மூன்று பேருடைய உடலையும் வண்டியில் தூக்கிக் கொண்டு, மண்ணெண்ணெய் டின்னும், விறகுகளும் எடுத்துக் கொண்டு லாரியில், மதகுருக்கள் இருவர் நந்தா சிங் கிரஞ்சி என்ற சீக்கிய மதகுருவையும் ஜெகநாத ஆச்சர்யா என்ற இந்து மதகுருவையும் அதிகாரிகள் உடன் அழைத்துக் கொண்டு சட்லஜ் நதிக்கரைக்குப் போனார்கள். இருட்டி விட்டது இரவு எட்டரை மணி.

சட்லஜ் நதிக்கரையில் ஒரே சிதையில் மூன்று பேரின் உடலையும் வைக்கிறார்கள். அப்பொழுது சீக்கிய மதகுரு நந்தா சிங் கிரஞ்சா சொல்கிறார்; ‘எங்கள் சீக்கிய மத வழக்கப்படி இருட்டியபிறகு ஈமச்சடங்கு செய்யக்கூடாது, இருட்டியபிறகு தகனம் செய்யக்கூடாது’ என்றவுடன், காவல்துறை அதிகாரி அவரைப் பார்த்து மிரட்டுகிறார். ‘வாயை மூடிக்கொண்டு இரு’ என்கிறார். பயந்து கொண்டு பேசாமல் இருந்து விடுகிறார். அதற்குப்பிறகு சிதையில் மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள். எங்கள் மத வழக்கப்படி மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கக்கூடாது என்கிறார். அப்பொழுதும் மிரட்டுகிறார்.

Bhagat Singh Death Certificate

மூன்றுபேரையும் ஒரேசிதையில் வைத்தவுடன், இந்து மதகுரு ஜெகநாத ஆச்சார்யா சொல்கிறார். ஒரு சிதையில் ஒரு பிரேதத்தைத்தான் வைக்கவேண்டும். மூன்று பிரேதத்தையும் ஒரே சிதையில் வைக்கக் கூடாது என்கிறார். அவரையும் மிரட்டுகிறார்கள். இரவு 11.45 தீயை வைக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் எரிகிறது. நள்ளிரவு கடந்து 2.15 மணிக்குப் பார்க்கிறார்கள். இன்னும் சில பகுதிகள் உடம்பு எரிந்தும் எரியாமலும் இருக்கிறது. என்ன செய்கிறார்கள் என்றால் எரியாமல் இருக்கின்ற பகுதிகளை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டு கிறார்கள். மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறார்கள். அதற்குப்பிறகு துண்டும் துணுக்குகளுமாகக் கிடந்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் சட்லஜ் நதியில் போடுகிறார்கள்.

இவ்வளவு கொடுமையும் நடந்து முடிந்து விட்டது. காலையில் போய் பகத்சிங்கை பார்க்கலாம் என்று அவன் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், லாகூர் வீதிகளில், பிரிட்டிக்ஷ் அரசு காவல்துறையை வைத்தே ஒரு சுவரொட்டியை ஒட்டுகிறது எல்லா இடங்களிலும். ‘பகத் சிங் – ராஜ குரு – சுகதேவ் நேற்று இரவிலேயே தூக்கிலிடப்பட்டு அவர்களது அஸ்தி சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டது’ என்று சுவரொட்டிகளை எல்லா இடங்களிலும் ஒட்டிவிட்டார்கள். இதை அறிந்த மக்களின் உள்ளம் எரிமலையாயிற்று. கிளர்ச்சி வெடித்தது. மக்கள் பொங்கி எழுந்தார்கள்.

தன் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரையில் இலட்சியத்தை நேசித்து, மரணம் நிச்சயம் என்று தெரிந்ததற்குப்பிறகும்கூட எந்தக் கொள்கையை நேசித்தார்களோ அதற்காக வாழ்ந்த மாவீரன் அப்படிப்பட்ட மாவீரன் பகத்சிங்.

(- ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஒரு கூட்டத்தில் பேசியது இது.)

======================================================================
Also check :

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

இந்த வெற்றி உங்கள் வெற்றி! Quick Update on Righmantra Awards 2013 & Annual Day!

======================================================================

[END]

 

 

10 thoughts on ““என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

  1. பகத் சிங்கின் பதிவை படிக்க படிக்க நம் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுகிறது. எவ்வளவு பெரிய விடுதலை போராட்ட வீரர். தூக்கு கயிற்றையே முத்தமிட்ட வீரர் . அவர் பற்றிய பதிவு அவர் பிறந்த நாளை முன்னிட்டு படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து மாணவ மாணவிகளும் இந்த பதிவை கட்டாயம் படிக்க வேண்டும். பகத் சிங்கின் பிறந்த நாளை நம் தளம் தளம் சார்பாக இனிப்புகள் வழங்குவது நாம் அவருக்கு செய்யும் கடமையாகும்

    நீண்ட பதிவாக இருந்தாலும் மிகவும் நன்றாக உள்ளது

    ஜெய்ஹிந்த்

    நன்றி
    உமா

  2. பகத்சிங் உண்மையில் நம் இந்திய விடுதலை போர் வரலாற்றில் மிகப் பெரிய வீரர் தான். நாட்டுக்காக அவர் தன் உயிரை அற்பணித்த கதையை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. நல்லவரை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. நம் பிள்ளைகளுக்கு பகத்சிங் பற்றி அனைவரும் சொல்லித் தரவேண்டும்.

    சென்ற ஆண்டு நடைபெற்ற ரைட்மந்த்ரா விருதுகள் மற்றும் ஆண்டுவிழாவின் புகைப்படங்கள் அருமை.

    இன்றைய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது நல்லது தான். இங்கு மேட்டூரில் கூட, நான் பணிபுரிந்த கடை அரை நாள் விடுமுறை விட்டுவிட்டார்கள்.எல்லாம் நன்மைக்கே. உங்களுக்கு அனைத்தும் நல்லபடியே முடியும். கவலைவேண்டாம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. நம் தளத்தில் இதுவரை வந்த பதிவுகளிலேயே என்னை உணர்ச்சி பூர்வமாக சிந்திக்க வைத்த, நான் ஒரு இந்தியன் என்கிற பெருமிதமான உணர்வை முதல் முறையாக கொடுத்த உன்னதமான பதிவு. பிறந்த நாட்டின் நன்மைக்காக தன இன்னுயிரை கொடுப்பதுதான் மிகப்பெரிய தியாகம். அதிலும் வாழ வேண்டிய வயதில் எல்லா சுகங்களையும் அனுபவித்து சுதந்திரமாக இருக்கவேண்டிய வயதில் நாட்டின் விடுதலைக்காக உயிரை மகிழ்ச்சியாக தியாகம் செய்த பகத் சிங் என்கிற மாவீரனுக்கு பல கோடி வணக்கங்கள்.

    மாவீரன் பகத் சிங்கின் பிறந்தநாளை இன்னும் மறக்காமல் இந்த சிறப்பான பதிவை இன்றைய சூழலில் சரியான நேரத்தில் வெளியிட்ட சுந்தருக்கு நன்றி. நாட்டின் நன்மைக்காக சிறைவாசம் அனுபவித்து உயிர் விட்ட உண்மையான புரட்சி இந்தியன் பகத் சிங்கின் நினைவை போற்றுவோம். வந்தே மாதரம்!

  4. அந்த பகத்சிங் மீண்டும் நம் (தமிழ்) மண்ணில் பிறக்க வேண்டும் என்று மனம் ஏங்குகிறது 27-09-2014 அன்று தமிழ் நாட்டில் நடந்த அநாகரிகங்கள் என்னவென்று அனைவருக்கும் தெரியும் ஒருவருக்கும் வெட்கமில்லை அந்த பகத் சிங் பிற்ந்த நாட்டில் பிறந்தோம் என்பது நமக்கு பெருமை ஆனால் நாட்டில் இன்று நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே பகத் சிங் போன்றவர்களுக்கு மிக்க அவமானம் ஆங்கிலேயர்களை தங்கள் இன்னுயிர் கொடுத்து விரட்டினார்கள் இவர்களை என்ன செய்வது!

    இன்னும் சில தினங்களில் மகாத்மா காந்தி பிறந்த தினம் அவரிடமும் மற்றும் பகத் சிங் , திருப்பூர் குமரன், மாவீரன் கட்ட பொம்மன் இவர்களைப்போன்ற பெயர் தெரியாத மாவீரர்களின் (உண்மையான மாவீரர்கள்) ஆன்மாவிடம் வேண்டிக்கொள்கிறேன் இவர்களை நல்வழிப்படுத்தவும் நாட்டைக்காககவும் உங்களின் வீரமும் தேசப்பற்றும் எங்களுக்கும் அருளுங்கள்.

  5. வந்தே மாதரம் என்போம்……..நம் பாரதத் தாயை வணங்குதும் என்போம்……… வீரர் பகத் சிங் அவர்களுக்கு நம் வணக்கங்கள்………

  6. நாம் நாடு இப்பொது இருக்கும் நிலை பார்த்தல் அவர் என்ன சொல்வர்? we should do our part to save this nation. every small step can bring difference.

  7. வாழ்க வளமுடன்

    ஒன்னா இருக்க கத்துக்கணும்
    இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
    காக்க கூட்டாத பாருங்க
    அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க

    1947 முன் நாம் அடிமை நம்மிடம் ஒற்றுமை இருந்ததது

    அனால் இப்போது நாம் ஜனநாயகம் என்று கூறி நம்மை நாமே
    ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்

  8. Bhagat Singh mesmerized me. I am awestruck that even a Man can be of immense patriotic and intensely courageous while encountering the death. He is my Hero!!

  9. அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது./// இதிலும் நக்கல்

    எப்படிலாம் போராடி பெற்ற சுதந்திரம் இன்று நமவர்களாலே நாசமாகி போகிறது
    பதவி மோகம்
    பேராசை
    புகழ்ச்சி தாகம்
    என்று பல காரணத்தினால்
    வீனாகிறதோ

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *