Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

print
ரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆவணி சுவாதி அன்று வாரியார் ஸ்வாமிகள் அவதாரத் திருநாள். நாளை 29 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. அதையொட்டிய சிறப்பு பதிவு இது.

காங்கேயநல்லூரில் வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திற்கு எதிரே அமைந்துள்ள முருகன் கோவிலில் லட்சதீப விழா. வாரியார் ஸ்வாமிகள் கலையரங்கம் பக்தர்களால் நிறைந்திருக்கிறது. தொடர் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு நடுவே தீந்தமிழில் திருவாசகப் பாடல் மழலைக் குரலில் ஒலிக்க சபையில் கனத்த அமைதி.

DSCN2391
காங்கேயநல்லூரில் உள்ள வாரியாரின் அதிஷ்டானம்
DSCN2450

எதிரே உள்ள முருகன் கோவில் (வாரியாரின் தந்தை திருப்பணி செய்த கோவில் இது)

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

பத்து நிமிடங்கள் தொடர்ந்த பாடலுக்கு பின் அரங்கமே கைதட்டல்களால் அதிர்கிறது. பாடியவர்களின் பின்புலத்தை விசாரித்தால் ஆனந்த அதிர்ச்சி.

DSCN2383
வாரியார் ஸ்வாமிகள் கலையரங்கம்

கொஞ்சு தமிழில் அனைவரையும் பரவசப்பட வைத்தவர்கள் வாரியார் சுவாமிகளின் நான்காவது தலைமுறை வாரிசுகள் வள்ளியும் லோச்சனாவும் தான்.

இது நடந்தது 2010 ஆம் ஆண்டு. அப்போது வள்ளிக்கு வயது 5 தான். வள்ளி பாடுவது கூட அதிசயமல்ல. ஏனெனில், அவளது தாத்தா சுவாமிநாதன் அவளுக்கு தினமும் திருமுறை பாடல்கள் கற்றுக்கொடுத்தார். ஆனால் அவள் தங்கை லோச்சனா பாடியது தான் பேரதியசம். ஏனெனில், அப்போது அவளுக்கு வயது மூன்று தான். சம்பந்தர் எப்படி மூன்று வயதில் ஞானப்பால் குடித்து தேவாரம் பாடினாரோ அதே போன்று லோச்சனாவும் செவிவழியாக தான் பருகிய ஞானப்பாலினால் தேவாரம் பாடத் துவங்கினாள்.

மேலும் இவர்கள் எப்பேர்ப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வருகிறார்கள்? கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல, வாரியார் வீட்டு பிள்ளைகள் தேவாரம் திருப்புகழ் பாடுவதில் வியப்பென்ன இருக்க முடியும்?.

சரி… இவர்களை பற்றி நமக்கெப்படி தெரியவந்தது? அதன் பின்னணியில் சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.

போரூரில் வாரியார் ஸ்வாமிகள் புத்தக நிலையம் என்று ஒரு புத்தக கடை உள்ளது. சென்ற வாரம் ஒரு நாள் வாரியார் ஸ்வாமிகள் எழுதிய நூல் ஒன்றை வாங்கவேண்டி அங்கு சென்றபோது, அந்த கடையில் ‘வாரியார் வாரிசுகளின் இசை மழை’ என்கிற பத்திரிகை செய்தி ஒன்று ஜெராக்ஸ் எடுத்து ஒட்டப்பட்டிருந்தது. அதை படித்தபோது பரசவசமானோம். வள்ளி, லோச்சனா என்கிற இரு பெண் குழந்தைகள் வாரியார் வீட்டிலிருந்து புறப்பட்டு தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றின் புகழை பரப்பிவருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

DSC06253 copy

“என் குழந்தைக்கு அந்த சினிமா பாட்டு நல்லா தெரியும்… என் டாட்டர் இந்த சினிமா பாட்டுக்கு நல்லா டான்ஸ் ஆடுவா: என்று பெருமைபேசும் (?!!) பெற்றோர்களுக்கு நடுவே இந்த செய்தியை படித்தபோது மனதுக்கே இதமாக இருந்தது.

valli&lochana-2013-002

பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பை மட்டுமே மனதில் கொண்டு படிக்கவைத்து அவர்களை ஒரு ஏ.டி.எம். எந்திரமாக வளர்க்கும் பெற்றோர்கள் மலிந்துள்ள காலம் இது. (இந்தப் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி பெற்றோர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் தான் பிற்காலத்தில் சேர்ப்பார்கள். நினைவிருக்கட்டும்!) இப்படிப் பட்டவர்களுக்கு நடுவே தேவாரம், திருவாசகம், திருப்புகழ் சொல்லிக்கொடுத்து இரு குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள் என்பது எத்தனை பெரிய செய்தி?

நந்தம்பாக்கம் 158 வது வார்டு கவுன்சிலர் திரு.எஸ்.ராஜசேகர் அவர்களுடன்
நந்தம்பாக்கம் 158 வது வார்டு கவுன்சிலர் திரு.எஸ்.ராஜசேகர் அவர்களுடன்

தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை பரப்பும் பணியில் இருப்பவர்கள் என்றால், அவர்களுக்கு ஏவலும் மரியாதையும் செய்து அவர்கள் புகழை திக்கெட்டும் பரப்பும் ஒரு சிறு கருவியாக திகழும் ஒரு உன்னத பணியை நாம் ஏற்றிருக்கிறோம் என்பது நீங்கள் அறிந்ததே. எனவே அவர்களை தேடிச் சென்று கௌரவிக்க அவர்களை பற்றி விசாரித்தோம்.

அந்த புத்தக கடையை நடத்தி வரும் சீதாராமன், காயத்ரி ஆகியோரின் வாரிசுகள் தான் அந்த குழந்தைகள் என்றும், இருவரும் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப் பேத்திகள் என்றும் தகவல் கிடைத்தது.

வாரியாருக்கு வாரிசு இல்லை. அவரது தம்பி மயூரநாத சிவம் அவர்களின் மகன் கலைவாணன். அவர் மகள் காயத்ரியின் குழந்தைகள் தான் இவர்கள்.

Variyar with Mayooranadhasivan
வாரியார் சுவாமிகளுடன் மற்றும் வள்ளியின் கொள்ளுத் தாத்தா திரு,வேலாயுதம் ஓதுவார் அவர்கள்

தாய்வழியில் மட்டுமல்ல, தந்தை வழியிலும் திருமுறை தொடர்பு குழந்தைகளுக்கு உள்ளது என்று தெரியவந்தபோது ஆச்சரியத்தில் மூழ்கினோம். இக்குழந்தைகளின் தந்தை வழி கொள்ளுத் தாத்தா திரு.வேலாயுத ஓதுவார் அவர்கள் வடபழனி முருகன் கோவிலில் பல்லாண்டுகள் ஓதுவாராக இருந்தவர். அவர்களின் மகன் திரு.சுவாமிநாதன். இவர் தேவாரம் கற்றவர். அவர் மகன் திரு.சீதாராமன். அவரின் குழந்தைகள் தான் இந்த வள்ளியும் லோச்சனாவும்.

DSCN6208

முறைப்படி பேசி அப்பாயின்மென்ட் பெற்று சென்ற வாரம் ஒரு நாள் போரூரில் உள்ள அவர்கள் வீட்டுக்கு சென்றோம். நண்பர் ஹரிஹரன் உடன் வந்திருந்தார். அங்கு முதலில் வள்ளியும் லோச்சனாவும் நம்மை இருகரம் கூப்பி வணக்கத்தோடு வரவேற்க அடுத்து வரவேற்பவர் குழந்தைகளின் தாத்தா வே.சுவாமிநாதன் அவர்கள். தன் தந்தையிடம் தான் கற்ற இசையை தன் பேத்திகளுக்கு கற்றுத் தந்த பெருமை இவரையே சாரும்.

குழந்தைகள் நம்மை இருகரம் கூப்பியபடி வரவேற்ற அழகே அழகு. அதற்கே அவர்கள் கைகளில் பொற்காசுகளை கொட்டவேண்டும்.

DSC06058
நம் தளம் சார்பாக முதல் மரியாதை

சந்திப்புக்கு பூர்வாங்கமாக அமர்வதற்கு முன்பு நம் தளம் சார்பாக குடும்பத்தினருக்கு மரியாதை செய்தோம். “ரைட்மந்த்ரா வாசகர்கள் சார்பாக இந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளவேண்டும்!” என்று கூறி, பழங்கள், பூ ஆகியவை ஒரு தாம்பாளத்தில் வைத்து அவர்களிடம் தரப்பட்டது.

குழந்தைகள் நன்றி கூறினார்கள்.

சோபாவில் அமர்ந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “ஏதாவது ஒரு பதிகம் பாடிய பிறகு நாம் தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்கும்” என்று குழந்தைகளிடம் நம் விருப்பத்தை தெரிவித்தோம்.

Valli_Lochana with their teacher
தங்கள் கர்நாடக இசை ஆசிரியர் திருமதி.ஜெயஸ்ரீ அவர்களுடன்…

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்று பாடி நம்மை பரவசப்படுத்தினர் குழந்தைகள்.

கண்மூடி கேட்டோம். “இன்னும் பாடுங்கள்… இன்னும் பாடுங்கள்” என்று அவர்களை பாடச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது.

“எத்தனையோ குழந்தைகள் எனக்கு தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் இன்று உங்களை எதுக்கு இன்னைக்கு வீடு தேடி பார்க்க வந்திருக்கோம் தெரியுமா?”

அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. குழந்தைகள் தானே… சற்று யோசித்தார்கள்.

“நாங்கள் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் GREAT GRAND DAUGHTERS என்பதால்!!!” என்றனர் தங்கள் மழலை மாறாத குரலில்.

“உண்மை தான்… அதுமட்டுமில்லாமல் உங்களை தேடி வந்து சந்திக்க வேறொரு காரணமும் இருக்கிறது. சற்று இடைவெளி விட்டு…. “நீங்கள் தேவாரம், திருப்புகழ் பாடுவதால்! ஆம்… நீங்கள் பாடும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களுக்காக உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்!” என்றோம் நாம்.

“இந்த தலைமுறை குழந்தைகளுக்கு கிரகிக்கும் சக்தி அதிகம். அதனால என் பேத்திகளுக்கு சின்ன வயசுலேயே தேவாரம், திருவாசகம்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு வள்ளி, நூற்றுக்கணக்கான பாடல்களை மனப்பாடமா சொல்லுவா!” என்று பெருமிதப்படுகிறார் வேலாயுதம் சுவாமிநாதன்.

P4100009

“இவர் படிக்கிற ஸ்கூல்ல பத்து வரைக்கும் அரித்மேடிக்ஸும் ரைம்ஸும் தான் உண்டு. எதை சொல்லிக்கொடுத்தாலும் அதை அப்படியே சொல்ற மெமரி பவர் இருந்ததுனால, சிவபுராணம், விநாயகர் அகவல்னு சீக்கிரம் கத்துக்கிட்டா. ஒருத்தர் சொன்னதை அதே மாதிரி திரும்ப சொல்லிடுவார்னு வாரியார் ஸ்வாமிகள் பத்தி சொல்லுவாங்க” என்கிறார் வள்ளியின் தாய் காயத்ரி பெருமை பொங்க.

தேவாரம் திருப்புகழ் நன்றாக வருவதால், குழந்தைகள் வளசரவாக்கத்தில் உள்ள கலாமந்திரில் ஜெயஸ்ரீ என்பவரிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று வருகின்றனர் என்ற கூடுதல் தகவலை காயத்ரி கூறினார்.

“வாரியார் ஸ்வாமிகள் உங்களுக்கு ஏதேனும் அருள் புரிந்திருக்கிறாரா? அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?”

“எங்கள் திருமணத்தை நடத்தி வைத்ததே அவர் தான். எனக்கு திருமணம் தட்டிக்கொண்டே சென்றது. வரன்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் என் மாமாவின் கனவில் வாரியார் ஸ்வாமிகள் வந்து என்னை ஆறு வாரங்கள் அம்மனுக்கு வெண் பொங்கல் நிவேதனம் செய்து விளக்கேற்றி வரச் சொன்னார். அதன்படி செய்து வந்தேன். பிறகு தான் இவருடன் என் திருமணம் நடந்தது.” என்றார் காயத்ரி.

Picture-031
போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் ஒரு நிகழ்ச்சியின்போது…

சீதாராமன் அவர்கள் கூறும்போது, “எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பின்னர் எத்தனையோ வரன்கள் பார்த்தும் எதுவும் கைகூடவில்லை. வாரியார் ஸ்வாமிகள் அருளால் காயத்ரியை கரம் பிடித்தேன்..!”

“உங்கள் திருமண வாழ்க்கையில் வேறு ஏதேனும் அதிசயம்?”

“எங்களுக்கு 2001 இல் திருமணமானது. திருமணமாகி இரண்டு வருஷம் குழந்தை இல்லாம இருந்தது. மனதளவில் நான் உடைந்து போனேன். இருப்பினும் என் மாமனார் சாமிநாதன் அவர்கள், தேவாரம கற்றவர் என்பதால்

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே

என்கிற பிள்ளை வரம் தரும் பதிகத்தை தினமும் நூறு முறைக்கு மேல் படித்தார். தினமும். நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்தேன். அதன் பயனாகத் தான் வள்ளி பிறந்தாள்!” என்கிறார் காயத்ரி.

(வாசகர்களே நம் நண்பர் சிவ.விஜய் பெரியசுவாமி அவர்கள் ஒவ்வொரு வாரமும் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம் பெறும் கோரிக்கைகளுக்கு உரிய பரிகாரங்களும், திருமுறை பாடல்களும் சொல்கிறார். மேற்கூறிய ‘பேயடையா பிரிவெய்தும்’ பாடலை பல முறை அவர் பரிந்துரைத்திருக்கிறார். பிள்ளை வரம் கேட்டு கோரிக்கை அனுப்பிய எத்தனை பேர், மனவுறுதியோடு பின்பற்றினீர்கள்?)

DSCN6238

“குழந்தைக்கு வள்ளி என்று பெயர் வைத்திருக்கிறீர்களே… அதில் ஏதேனும் சுவாரஸ்யம் உண்டா?”

சீதாராமன் அவர்கள் கூறும்போது, “வாரியார் ஸ்வாமிகள் ‘வாட்டம் தீர்க்கும் வள்ளி நாயகி’ என்று வள்ளிமலை பற்றியும் அங்கு பிறந்த வள்ளி பற்றியும் நூல் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறுவது என்னவென்றால், “இஸ்லாமியர்களுக்கு எப்படி ஒரு மெக்காவோ, கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஒரு வேளாங்கண்ணியோ, அதேபோல சைவத்தை பின்பற்றுகிறவர்களுக்கு வள்ளிமலை. வாழ்நாளில் ஒரு முறையேனும் அவசியம் அனைவரும் வள்ளிமலை சென்று வரவேண்டும். இங்கு வேலூருக்கு அருகில் தான் வள்ளிமலை உள்ளது. அடிவாரத்தில் முருகன் கோவில், மேலே வள்ளி குகை, வள்ளி சுனை என வள்ளி வாழ்ந்த அவள் காலடி பட்ட இடங்கள் உண்டு. அந்த நூலை படித்தவுடம் எனக்கும் வள்ளிமலை சென்று முருகனையும் வள்ளியையும் தரிசித்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றியது. உடனே நானும் என் மனைவியும் அங்கு சென்றோம். எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் வள்ளியப்பன் என்றும் பெண் குழந்தை பிறந்தால் வள்ளி என்றும் பெயர் வைப்பேன் என்றும் அங்கு வேண்டிக்கொண்டேன். அடுத்த சில மாதங்களிலேயே காயத்ரி கருத்தரித்துவிட்டாள்’ என்றார்.

DSCN6223

வள்ளிமலைக்கு நாம் நம் வாசகர்களுடன் ஒரு ட்ரிப் விரைவில் வைப்பதாக கூறினோம். “மறக்காமல் என்னிடம் சொல்லுங்கள்… நானும் உடன் வருகிறேன்” என்று கூறியிருக்கிறார் சீதாராமன்.

(வள்ளிமலைக்கு வரவிரும்பும் வாசகர்கள் இப்போதே நமக்கு மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்துவிடவும். பயணம் அடுத்த ஓரிரு மாதங்களில் இருக்கும்.)

“வாரியார் ஸ்வாமிகள் இருக்கும் வரை, தொடர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குனி மாதத்தின் கடைசி நாளன்று வள்ளிமலைக்கு சென்று படி உற்சவம் நடத்திவிட்டு வருவார். திருப்புகழ் பாடிக்கொண்டே ஸ்வாமிகள் வல்லிமலையை வலம் வருவார். வருடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் முருக பக்தர்களும் வலம் வருவார்கள்.”

சமீபத்தில் நாம் காங்கேயநல்லூர் சென்று வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானத்தை தரிசித்துவிட்டு வந்த கதையை கூறினோம். “இன்று எங்களை உங்கள் முன்னர் அமர வைத்திருப்பதே வாரியார் ஸ்வாமிகள் தான்! என்னை புத்தகம் வாங்கத் தூண்டி, அதன் மூலம் இங்கே போரூரில் உள்ள புத்தக கடைக்கு வரவழைத்து இவர்களை பற்றிய செய்தியை என் கண்ணில் பட வைத்திருக்கிறார் வாரியார்” என்று கூறினோம்.

Valli_lochana fam
வள்ளி, லோச்சனா தாய், தந்தை மற்றும் தாத்தா பாட்டிகளுடன்

“குழந்தைகளுக்கு எப்படி இந்த வயதில் தேவார, திருப்புகழ் ஆற்றல் வந்தது?”

“மூத்தவள் வள்ளி கருவில் இருக்கும்போது நான் படித்த தேவார, திருப்புகழ் பாடல்கள் தான் காரணம்” என்கிற பேருண்மையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் காயத்ரி.

நண்பர்களே… பார்த்தீர்களா? கருவுற்றிருக்கும்போது டி.வி.சீரியல், சினிமா இவற்றை தவிர்த்துவிட்டு தேவாரம், திருவாசகம், திருப்புகழ், சுந்தர காண்டம் உள்ளிட்ட நூல்களை படிக்கவேண்டுமென நாம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளோம். அது எந்தளவு பின்பற்றவேண்டிய ஒன்று என்பதை காயத்ரி அவர்களின் கூற்று விளக்குகிறது அல்லவா?

வள்ளி மட்டுமல்ல, அவளுடைய தங்கை லோச்சனாவும் பாடுகிறாள். இதில் என்ன அதிசயம் என்றால், சுவாமிநாதன் தினசரி தேவாரம் சொல்லிக் கொடுத்தது மூத்தவள் வள்ளிக்கு தான். மூத்தவள் பாடுவதை கேட்டு கேட்டே இளையவளும் பாடுகிறாள்.

அக்காவுக்கும் தங்கை சற்றும் சளைத்தவள் அல்ல. இருவருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை மனப்பாடமாக பாடுகிறார்கள்.

இன்றும் ஒவ்வொரு ஞாயிறு மாலையும், போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் தேவாரம் பாடுகிறார்கள் இருவரும். தவிர தினமும் மாலை 7.00 – 8.00 தாத்தா சுவாமிநாதன் அவர்களிடம் திருமுறை பயிற்சி. வாரம் இரண்டு நாட்கள் வளசரவாக்கத்தில் உள்ள கலாமந்திரில் ஜெயஸ்ரீ அவர்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்கிறார்கள். கேட்கவே எத்தனை சந்தோஷமாக இருக்கிறது… இதுவன்றோ பிள்ளைகளை வளர்க்கும் விதம் !

தொடர்ந்து திரு.ஈரோடு ஞானப்பிரகாசம் அவர்களை பற்றி கூறி, முழுக்க முழுக்க பார்வையற்றவர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் சிவஞான தேனிசை பாமாலை சி.டி.யை பரிசளித்தோம்.

DSC06068
ஞானப்பிரகாசம் அவர்களின் சிவஞான தேனிசை பாமாலை சி.டி.வழங்கப்படுகிறது

“ஞானப்பிரகாசம் அவர்கள் அவசியம் நீங்கள் சந்திக்கவேண்டிய ஒரு மாமனிதர். ஈரோடு இசைப்பள்ளியில் தேவார ஆசிரியராக இருக்கிறார். இந்த சி.டி.யை அடிக்கடி போட்டு கேட்டு இப்பாடல்களை மனனம் செய்துகொள்ளுங்கள். மேடைகளிலும் பாடுங்கள்” என்று கேட்டுக்கொண்டோம்.

நமது ஆண்டுவிழாவில் வள்ளியும், லோச்சனாவும் தான் கடவுள் வாழ்த்தும் தேவாரமும் பாடவிருக்கிறார்கள்.

DSC06069

சீதாராமன் அவர்களிடம் இது பற்றி கூறி, “திரு.ஞானப்பிரகாசமும் விழாவில் கலந்துகொண்டு பாடல்களை பாடி பரிசுகள் வழங்கவிருக்கிறார். உங்கள் குழந்தைகள் தான் கடவுள் வாழ்த்து பாடவேண்டும்” என்ற போது, “நிச்சயம் சார்… அதை விட என் குழந்தைகளுக்கு வேறு பாக்கியம் கிடைக்க முடியுமா என்ன?” என்றார்.

தொடர்ந்து நம் தளம் சார்பாக இது போன்ற சந்திப்புக்களில் நாம் வழங்கும் நமது அன்புப் பரிசாக, நமது தினசரி பிரார்த்தனை லேமினேட்டட் படத்தை பரிசளித்தோம்.

DSC06081

“இதில் உள்ள வரிகளையும் மனப்பாடம் செய்து மேடைகளில் பாடுங்கள். அதுவும் நீங்கள் பாடும்போது அதன் மதிப்பு எங்கோ சென்றுவிடும்.” என்று கூறி, குழந்தைகளிடம் அப்பாடலை நம் முன்னர் படிக்கச் செய்தோம்.

அவர்கள் படிக்க படிக்க பேரானந்தம். உடனே சுவாமிநாதன் அவர்கள் அதை வாங்கி அவர் ஒரு முறை படித்தார். இசைக் கற்றவர் என்பதால் பண் அமைத்தே பாடிவிட்டார்.

DSCN6232

இறுதியில் சுவாமிநாதன் அவர்களில் கால்களில் இருவரும் வீழ்ந்து ஆசிபெற்றோம். நம் நெற்றியில் விபூதி பூசி ஆசீர்வதித்தார்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

என்ற பாடலை பாடி குழந்தைகளும் நம்மை பாடல் மூலம் ஆசீர்வதித்தனர்.

DSCN3477

விநாயகர் சதுர்த்தியும், வாரியார் சுவாமிகளின் ஜெயந்தியும் நெருங்கி வரும் இவ்வேளையில் எல்லாம் வல்ல அந்த வள்ளி மணவாளன் முருகப்பெருமான் அருளாலும், முழுமுதற்க் கடவுள் விநாயகப் பெருமான் கருணையினாலும், என்றும் நம்மை நல்வழியில் நடத்தும் திருமுருக.கிருபானந்த வாரியார் அருளாலும் வாசகர்கள அனைவரும் அனைத்து நலன்களும் இன்பமும் பெற்று வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறோம்.

Video of Valli, Lochana’s concert @ Porur, Ramanaadheeswarar Temple

==============================================================

வள்ளி, லோச்சனாவை உங்கள் பகுதி கோவில் விழாக்களில் பாடவைக்கவும். இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யவும், குழந்தைகளின் தந்தை திரு.சீதாராமன் அவர்களை தொடர்புகொள்ளவும். அலைபேசி எண் : 9841323328

==============================================================

[END]

20 thoughts on “தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

  1. “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
    சான்றோன் என கேட்ட தாய்”
    என்பதற்கு ஏற்ப இந்த இரு குழந்தைகளையும் பெற்றவர்கள் பெரும் பேரு பெற்றவர்கள்.
    அதுவும் இந்த காலகட்டத்தில் தனது இரு குழந்தைகளையும் அருமையாக வளர்த்துள்ள பெற்றோர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
    இக்குழந்தைகள் இருவரும் எல்லா நலமும் வளமும் பெற இறைவனை வேண்டிக்கொள்வோம்.

  2. வணக்கம்………

    குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு திரு.சீதாராமன் – திருமதி.காயத்ரி தம்பதி ஒரு உதாரணம்.

    குழந்தைகளின் திறமை வியக்க வைக்கிறது. குழந்தைகள் மென்மேலும் வளர்ந்து இசை பரப்ப இறையருளையும், வாரியார் சுவாமிகளின் அருளையும் வேண்டுகிறோம். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்…..

    இப்படிப்பட்ட திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கும் நன்றிகள்………..

  3. திரு வாரியார் சுவாமிகளின் பேத்திகள் வள்ளி மற்றும் லோச்சனா பற்றி படிக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பதை இந்த குழந்தை நிரூபித்து வருகிறார்கள். இந்த குழந்தைகள் ஆண்டு விழாவில் பாடுவதை கேட்க ஆவலாக உள்ளோம்.

    குழந்தை கருவில் இருக்கும் பொழுது தெய்வ சிந்தனையுடனும் பகவன் நாமாவை உச்சரித்தால் பிறக்கும் குழ்ந்தை தெய்வீகத் தன்மையுடன் பிறக்கும் என்பதற்கு இந்த குழந்தைகள் உதாரணம்.

    அருமையான பதிவிற்கு நன்றி

    உமா

  4. வாரியார் கொள்ளு பேத்தி வள்ளி மற்றும் லோச்சனா அவர்களை இந்த தளம் முலம் எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. அவர்களின் திறமையால் இந்த உலகம் முழுவதும் தேவாரம் , திருவாசகம், திருபுகல் பரவட்டும்.

    இந்த ஆண்டு விழாவிற்கு குழதைகள் வள்ளி, லோச்சனா மற்றும் ஞானப்ரகாசம் அய்யா வருகையால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி மற்றும் விழாவை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம் .

    வள்ளி மலை பயணம் தேதியை எதிர்பார்த்து இருக்கிறோம் .

    மிக்க நன்றி
    வெங்கடேஷ் பாபு

  5. Dear sundarji,

    Arumaiyana padhivu. Indha Kuzhandhaigal ai paarka migavum perumaiyaga irukiradhu.

    Ellam andha agilanda kodi brahmanda nayagan seyal.

    ரேகர்ட்ஸ்
    Harish V

  6. அருமை.. சுந்தர் சார் மிக்க நன்றி இத்தகைய திறமையை வெளிகொனர்ந்ததற்கு ,
    எம் பெருமான் முருக பெருமானுக்கு நன்றி சொல்லவேண்டும்

  7. குழந்தைகளை எவ்வாறு நன்முறையில் வளர்க்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக திகழ்கின்றனர் இத்தம்பதியினர். அவர்களுக்கு வாழ்த்துகள். குழந்தைகளுக்கு தேவாரம் உள்ளிட்ட திருமுறைப்பாடல்களையும் திருப்புகழ் பாடல்களையும் சொல்லிக்கொடுத்து அவர்களின் வாழ்வை மேன்மையுற செய்துள்ளார் குழந்தைகளின் தாத்தா திரு. சுவாமிநாதன் அவர்கள், அவருக்கு எனது வணக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன். எனது சிறுவயதில் வாரியார் சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றேன், அவருடய வாரிசுகளின் வீட்டில் எனது குரல் ஒலிக்கும் வாய்ப்பை அளித்த தங்களுக்கு நன்றி. தங்களின் பணி மேலும் சிறப்பு பெற வாழ்த்துகள்.

  8. உங்கள் கட்டுரை படித்தேன் . அது படி தேன்…..குழைந்தைகள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் . . .

  9. வாழ்க வளமுடன் , வாழ்க வையகம்

    வள்ளி , லோச்சனா வின் தந்தை

    அனைவருக்கும் வணக்கம்

    என்னதான் வீரியம் மிக்க விதையாக இருந்தாலும் அது வளர நீர் , நிலம் , நெருப்பு , காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் துனை தேவை . அப்போதுதான் அது வளர்ந்து இந்த சமுதயதிறிற்கு பயனளிக்கும்
    .
    இங்கு

    1 , நீராக – தாத்தா சுவாமிநாதன் (நீரின்றி அமையாது உலகு )

    2 , நிலமாக – குழந்தைகளின் விடாமுயற்சி

    3 , நெருப்பாக – தாயின் கண்காணிப்பு

    4 ,காற்றாக – இசை ஆசிரியரின் பயிற்சி

    5 , ஆகயமாக – நல்ல ஆத்துமாக்கள் (ரைட் மந்த்ர போல)

    எல்லாமும் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி

    அனைவர்க்கும் நன்றி

    கை பேசி எண் 98413 23328

    1. நன்றி சீதாராமன் அவர்களே.

      வள்ளி, லோச்சனா இருவரின் சீரிய வளர்ப்பில் உங்கள் பங்கு அளப்பரியது.

      தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
      முந்தி இருப்பச் செயல்.

      என்ற குறளின் வழிப்படி இருவரையும் வளர்த்திருக்கிறீர்கள்.

      நன்றி.

  10. வாழ்க வளமுடன் , வாழ்க வையகம்

    இவர்களுடைய போரூர் இராமநாதீஸ்வரர் கோவில் நிகழ்ச்சியை நேரில் கண்டேன், இச்சிறுவயதில் இவர்களின் திறமை மிகவும் வியப்பானது, இக்கட்டுரையின் வரிகளுக்கும், கருத்துக்களுக்கும் தகுதியுடையது .

    பாடலுடன் மற்றுமின்றி பண்புடனும் வளர்க்கப்படுவது சிறப்பு, பாராட்டதக்கது.

    தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள், இக்குழைந்தைகள் மேன் மேலும் வளர மனமார வாழ்த்துக்கள் .

    தமிழ் வாழ்க…

Leave a Reply to Venkatesh Babu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *