Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

print
சென்ற ஆடிக்கிருத்திகை அன்று நடைபெற்ற நமது அன்னதானம் மற்றும் முருகனின் தரிசனம் குறித்த பதிவு இது. ஆடிக்கிருத்திகை அன்று முருகனுக்கு மிகவும் விஷேடமான நாள் என்பதால் தளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை அளித்ததோடு அன்று அன்னதானமும் செய்ய விரும்பினோம். முன்பே கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து பணமும் கட்டிவிட்டோம்.

இதற்கிடையே ஆடிக்கிருத்திகைக்கு முந்தைய தினம் மாலை, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது, போரூர் ஏரிக்கரை மீதுள்ள ஆதி ஜலகண்டேஸ்வரர் கோவில் முன்பாக ஒரு வாகனத்தில் உற்சவர் எழுந்தருளியிருந்தார். அந்த வழியே போவோர் வருவோர் எல்லாம் விபூதி பெற்றுக்கொண்டு சென்ற வண்ண மிருந்தனர்.

DSC03396

நாம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தரிசனம் செய்யச் சென்றால்… அட நம்ம முருகன்! ‘பார்த்தீங்களா எங்க முருகனை. நாளை அவனை குன்றத்தூர் போய் தரிசிக்கலாம் என்றால், இங்கே அட்வான்சாகவே நமக்கு தரிசனம் தந்துவிட்டான்.’ மனம் பரவசத்தில் மூழ்கியது

“எங்கே போகுது வண்டி?” என்று விசாரித்தோம். திருத்தணிக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பாதயாத்திரை செல்வதாக கூறினார்கள் பக்தர்கள். பணத்தை தேடி ஓடும் இந்த அவசர உலகில் இப்படி தெய்வத்தை தேடி ஓடும் சிலரும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

AADIKIRUTHIGAI

முருகனை தரிசித்துவிட்டு உண்டியலில் சிறுகாணிக்கை அளித்துவிட்டு விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு சில வினாடிகள் பிரார்த்தித்தோம்.

மனம் மிகவும் லேசானது.

மறுநாள், காலை எழுந்து குளித்து முடித்து தயாராகி ஆடிக்கிருத்திகை பற்றிய பதிவுகள் அளித்துவிட்டு அன்னதானத்திற்கு கே.கே.நகர்  பிள்ளையார் கோவில் புறப்பட்டோம். நண்பர்கள் யாரும் வரவில்லை என்றாலும் அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு எடுத்திருந்ததால் அனைத்துக்கும் சௌகரியமாக இருந்தது.

அன்னதானம் சாப்பிடுபவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு தரவிரும்பியதால் வரும் வழியில் விருகம்பாக்கத்தில் காமாக்ஷி பவன் இனிப்பகத்தில் சுமார் 2.5 கிலோ மில்க் ஸ்வீட்ஸ் வாங்கிக்கொண்டோம்.

DSC05649

நாம் கே.கே.நகர் கோவிலுக்கு வந்து சேரவும், அன்னதானம் துவங்கவும் சரியாக இருந்தது. திருக்கோவில்களில் தமிழக அரசு சார்பாக தினமும் பகல் 12.00 மணிக்கு நடக்கும் அன்னதானம் இது. ஏற்கனவே இது குறித்தும் இந்த அன்னதானத்தில் நாம் பங்கேற்று அன்னதானம் செய்தது குறித்தும் பலமுறை எழுதியிருக்கிறோம். ஒரு சிலரை தவிர, மிக மிக சரியான பயனாளிகளுக்கு தான் இந்த அன்னதானம் போய் சேருகிறது என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறோம். உணர்ந்திருக்கிறோம்.

DSC05651

அன்னதானம் துவங்கியதையடுத்து நாமும் கூட இருந்து பரிமாறினோம். அதில் ஒரு சில முதியவர்கள் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்கள். அவர்களிடம் நலம் விசாரித்தபடியே பரிமாறினோம்.

பின்னர் நாம் வாங்கிச் சென்ற இனிப்பு ஒவ்வொருவருக்கும் வைக்கப்பட்டது.

“ஸ்வீட் யாருக்காவது பிடிக்காது, சாப்பிடமட்டீங்கன்னா இலையில் வெக்கறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க… வாங்கிட்டு சாப்பிடாம வேஸ்ட் பண்ணவேண்டாம்… இது ரொம்ப ஒஸ்தி இனிப்பு…. விலை ஜாஸ்தி…” என்று வேண்டுகோள் விடுத்தோம்.

DSC05658

நல்லவேளை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏழை பாழைகள் தானே இங்கு சாப்பிட வருகிறார்கள்… இவர்கள் எந்த வீட்டுக்கு எந்த கல்யாணத்துக்கு போய் விருந்து சாப்பிட்டிருப்பார்கள்…

அனைவருக்கும் பதார்த்தங்கள் வைக்கப்பட்ட பிறகு, நடுவே நின்றுகொண்டோம்… “இன்னைக்கு வந்து Rightmantra.com அப்படிங்கிற வெப்சைட் சார்பாக இந்த அன்னதானம் நடக்குது. இன்னைக்கு என்ன விசேஷம்? இன்னைக்கு ஏன் இந்த அன்னதானத்தை ஸ்பான்சர் செய்திருக்கோம் தெரியுமா? அதுவும் இனிப்போட?”

“இன்னைக்கு ஆடிக்கிருத்திகை. முருகனுக்கு ரொம்ப விசேஷமான நாள். நீங்க இங்கே சாப்பிட்டுகிட்டு இருக்குற இந்த நேரத்துல உலகத்துல, ஏன் நம்ம நாட்டுலேயே சாப்பிட வழியில்லாம எத்தனையோ பேர்…பட்டினியா இருக்குறாங்க. அப்படியிருக்கும்போது உங்க எல்லாருக்கும் இப்போ சாப்பாடு கிடைச்சி அதை சாப்பிடுறீங்கன்னா… அதுக்கு யார் காரணம்? ஆண்டவன் தான் காரணம். So, இந்த சாப்பாட்டுக்கு முதல்ல முருகனுக்கு நன்றி சொல்லுங்க…”

DSC05652

“இங்கே இருக்குறவங்க… யாராவது நாளைக்கு உங்க கஷ்டமெல்லாம் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வர்ற பட்சத்துல நீங்களும் இங்கே வந்து அன்னதானம் செய்யனும். செய்வீங்களா?”

இப்போது தான் பலரது மௌனம் கலைந்தது. “நிச்சயம் செய்வோம்” என்றனர்.

இது ஒன்னு போதும். இந்த தன்னம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் அவர்கள் சிலரது மனதில் விதைக்க முடிந்ததே நம்மை பொருத்தவரையில் மிகப் பெரிய வெற்றி.

அரசாங்க அன்னதானத்தில் பொரியலோ கூட்டோ ஒரு முறை தான் வைப்பார்கள். சாம்பார், ரசம் வேண்டுமானால் கேட்டால் தருவார்கள். எனவே சாம்பார் ரசம் யாருக்கு வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு அதை பரிமாறினோம்.

கோவில் தரப்பில் நமக்கும் ஒரு இல்லை போட்டு நம்மையும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடச் சொன்னார்கள். ஆனால் அன்று விரதம் இருந்தபடியால், நாம் சாப்பிடவில்லை.

சரியாக பத்தே நிமிடத்தில் அன்னதானம் முடிந்துவிட்டது.

DSC05663

இந்த அன்னதானமே முருகன் சாட்சியாகத் தான் நடைபெற்றது. எப்படி எனில் அன்னதானக் கூடத்தில் ஒரு ஓரத்தில் கையில் தண்டை வைத்துக்கொண்டிருக்கும் முருகன் சிலை உண்டு. நடப்பது அனைத்தையும் பார்த்துகொண்டிருப்பது போலிருக்கும்.

சாப்பிடும் அனைவரிடம் வழக்கம் போல ஒரு விண்ணப்பம் வைத்தோம். “மற்ற நாட்களில் எப்படியோ.. இன்றைக்கு மட்டும் நீங்கள் இலையை எடுக்கவேண்டாம்” என்று கூறி, குப்பைக்கூடையை இழுத்துப் போட்டு அனைத்து இலைகளையும் எடுக்க ஆரம்பித்தோம்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளின் வீட்டு விஷேடங்கள், மற்றும் அன்னதானம் எங்கு நடைபெற்றாலும், பந்தி பரிமாறும் வேலையை செய்வது, தண்ணீர் வைப்பது, சாப்பிட்ட பின்னர் அந்த இலைகளை எடுப்பது, சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகளை நீங்கள் தயங்காமல் மேற்கொள்ளவேண்டும். அன்னதானம் செய்வதைவிட இவை பல மடங்கு புண்ணியம் தருவன. சாப்பிட்ட இலையை எடுக்கும்போது, அவர்களுக்கு அன்னமளித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

எச்சில் இலை எடுத்த பரந்தாமன்!

பாண்டவர்கள் யாகம் செய்துவிட்டு அன்னதானம் அளித்தபோது, அங்கு சென்று எச்சில் இல்லை எடுத்தது யார் தெரியுமா?

பாண்டவர்கள் ஒரு முறை “இராஜ சூய யாகம்’ செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்தனர்.

“சபையில் முதலில் பூஜிக்கத் தகுந்தவர் யார்?’ என்ற வினா எழுந்தது. பல்கலைகளில் தேர்ந்தவனான சகாதேவன் எழுந்து, “ஆன்றோர்களே! அரசர்களே! இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூஜை பெறத் தகுதியுடையவன்! அத்தகையோரில் நம்மிடையே கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அதனால் அவருக்கே பூஜை செய்வோம். அப்படிச் செய்தாலே எல்லா உயிர்களுக்கும் செய்ததற்கு ஒப்பாகும்” என்றான்.

சகாதேவன் சொன்னபடி கண்ணனுக்கு முதல் பூஜை செய்தனர். கண்ணன் ஓர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து அருங்காட்சி அளித்தான்.

இராஜசூய வேள்வி தொடர்ந்து நடைபெற்றது. ஒரு பக்கம் பல்லாயிரம் பேருக்கு விருந்து படைக்கப்பட்டது.

இந்நிலையில், ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணனைக் காணவில்லை. எல்லாரும் தேடினர். நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.

இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் காணப்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பால் கொட்டும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தான்.

“முதற்பூஜை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா…!’ என எல்லாரும் வியந்தனர்.

“கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் இருக்க, நீர் இக்காரியம் செய்யலாமா? முதற்பூஜை பெற்ற நீ எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா…? உடனே நிறுத்து… எச்சில் பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு சிம்மாசனத்தில் இருந்து காட்சி தா!” என வேண்டி நின்றனர்.

“எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா…? முதல் பூஜை பெறுவதும் ஒரு தொழில்தான். எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில்தான். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூஜை பெற்ற நான் எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதினால் நான் பெற்ற முதல் பூஜை தகுதிக்காக பெற்றதாகுமா? பகட்டுக்காகத்தானே பெற்றதாக ஆகும்” என்றான் கண்ணன்!

பரம்பொருள் தானே உதாரணமாக நின்று வழிக்காட்டியிருக்கிறான். எனவே எங்கேனும் அன்னம் பாலிப்பு நடைபெற்றால் அவ்விடத்தில் இலைகளை எடுத்து சுத்தம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவறவிட வேண்டாம்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

DSC03407

நேரே மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பயணம். அங்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பசுக்களுக்கு தீவனம் ஆர்டர் செய்திருந்தோம். வழக்கமாக நாம் செய்வது தான் இது. இருந்தாலும் இந்த மாத தவணையை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அன்றைய தினம் அளிக்க விரும்பினோம். தீவனத்தை ஏற்கனவே போனில் ஆர்டர் செய்துவிட்டபடியால் தயாராக இருந்தது. கோவிலில் மூட்டைகள் இறக்கப்படும் வரை, உடனிருந்தோம். பின்னர் கோ-சாலையை எட்டிப்பார்த்துவிட்டு நந்தினியையும் துர்காவையும் நலம்விசாரித்துவிட்டு கிளம்பினோம்.

அங்கிருந்து நேரே குன்றத்தூர் பயணம்.

DSC03420

கே.கே.நகரில் இருந்து போரூர் சென்று பின்னர் அங்கிருந்து குன்றத்தூர் பயணம். சரியாக கோவூர் தாண்டுபோது, விவசாயிகள் சிலர் வயலில் வேலை செய்யும் காட்சியை பார்க்க நேர்ந்தது.

நாம் வணங்கும் முதல் தெய்வம் விவசாயிகள் அல்லவா… அவர்களை கடந்து செல்ல மனமின்றி நமது டூ-வீலரை ஓரமாக நிறுத்தினோம். அவர்கள் வேலை செய்யும் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம்.

DSC03424

அவர்களில் ஒருவரை கைதட்டி அழைத்தோம். (கூப்பிட்டால் காதில் விழாது என்பதால்). சற்று அருகே வந்தார் ஒரு பெண்மணி. “அம்மா… இங்கே குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு வந்தேன். நீங்க இங்கே வயல்ல வேலை செஞ்சிக்கிட்டு இருக்கிறதை பார்த்தேன்… நீங்கல்லாம் சாப்பிட்டீங்களா? சாப்பாடு வாங்கித் தந்தா சாப்பிடுறீங்களா?” என்றோம்.

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“தாராளமா வாங்கிக் கொடுங்க சாமி” என்றார் அந்த பெண்.

குன்றத்தூர் ஜங்க்ஷன் சென்று அங்கு ஒரு நல்ல ஹோட்டலில் வாங்கி வருவதாக சொன்னோம்.

DSC03426

தாங்கள் ஆறு பேர் இருப்பதாகவும் மொத்தம் நான்கு சாப்பாடு போதும் என்றும், கூறினார்கள்.

“ஒரு கால்மணி நேரம் வெயிட் பண்ணுங்க… சாப்பாடோட வர்றேன்” என்று கூறி குன்றத்தூர் பறந்தோம்.

நான்கு சாப்பாடு வாங்கிக்கொண்டோம். பைக்கில் அவற்றை முன்புறம் மாட்டிக்கொண்டு கொண்டு வருவதற்கு சிரமமாக இருந்தது. வாழை இலை வேறு இருந்தது. இலையை மடிக்காமல் பைக்கை ஓட்டிவருவது சவாலாக இருந்தது. எனவே தான் இது போன்ற நாள், கிழமை விஷேடங்களின் போது ஆலய தரிசனத்தில் யாராவது ஒருவர் உடனிருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

DSC03427 copy

எப்படியோ மீண்டும் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருந்த வயலுக்கு வந்துவிட்டோம்.

நம்மை உள்ளே அழைத்தார்கள்.

எத்தனை பெரிய பாக்கியம். வயலில் காலை வைக்க, வைக்க இந்த ஜன்மமே சாபல்யம் பெற்றது போன்ற ஒரு சந்தோஷம்.

அவர்கள் லாவகமாக நடக்க ஆனால் நாம் கால் வைக்க வைக்க, கால் உள்ளே போனது. அப்புறம் அவர்கள் வரப்பின் மீது லாவகமாக நடக்க சொல்லித் தந்தார்கள்.

வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள், நாற்று நட்டுக்கொண்டிருந்தவர்கள் நம்மிடம் வந்தார்கள். அவர்களுக்கு ஒரே சந்தோஷம். யாரோ முன் பின் தெரியாத ஒருவர், தங்களை தேடி வந்து இப்படி சாப்பாடு வாங்கித் தந்தால் எப்படி இருக்கும்?

அவர்களிடம் விவசாயிகள் மீது நாம் வைத்திருக்கும் பெருமதிப்பு பற்றியும், விவசாயத்தின் சிறப்பு பற்றியும் எடுத்துக்கூறி, அன்று ஆடிக்கிருத்திகை என்பதால் முருகப்பெருமானின் மனம் குளிரும் வகையில் அவர்களில் சிலருக்கு நாம் பசி தீர்க்க விரும்பியதை எடுத்துச் சொன்னோம்.

விவசாய வேலைகளுக்கு பலர் வரமறுக்கும் சூழலில் இவர்கள் மட்டும் எப்படி வந்தார்கள் என்று விசாரித்தோம். இதற்கென ஒரு கான்ட்ராக்டர் இருப்பதாகவும் அவர் மூலம் தாங்கள் வந்ததாகவும் கூறினார்கள். நான்கு பேரும் நெருங்கிய உறவினர்கள் தான்.

“இந்த உலகமே ஏர் முனையில் தான் சுத்திக்கிட்டுக்கு.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

அப்படின்னு வள்ளுவர் கூட சொல்லியிருக்கார். எத்தனையோ தொழில் இன்னைக்கு உங்களை மாதிரி ஆளுங்களுக்கு இருக்கு… ஆனா நீங்க விவசாயத்தை தேர்ந்தெடுத்து வேலை செய்ய வந்ததுக்கு ரொம்ப நன்றி. மத்த வேலைக்கு போனா, கூட நூறோ இருநூறோ கிடைக்கலாம். ஆனா, இதுல கிடக்குற புண்ணியம் உங்களுக்கு வேற எதுலயும் கிடைக்காது. தொழில்களுக்கெல்லாம் முதன்மையானது இது. இந்த உலகத்துல எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் குற்றமற்ற ஒரே தொழில் விவசாயம் தான். இன்னைக்கு உங்கள் பிள்ளை குட்டிகள்  கஷ்டப்படலாம். ஆனா நீங்க சேர்க்குற இந்த புண்ணியத்தால அவங்க நாளைக்கு நல்லா இருப்பாங்க… நிச்சயமா… அடுத்த முறை வேலை செய்றதுக்கு உங்களுக்கு வாய்ப்பு வந்தா நிச்சயம் விவசாய வேலையைத் தான் நீங்க தேர்ந்தெடுக்கணும்.”

“நிச்சயம் சார்…” என்றார்கள் அனைவரும்.

“நான் என்னோட விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு போறேன். அடுத்து இங்கே அறுவடைக்கு வரும்போது ஃஎனக்கு போன் பண்ணுங்க… நீங்க எத்தனை பேர் வந்தாலும் உங்க எல்லோருடைய சாப்பாடு செலவும் என்னோடது” என்று கூறினோம்.

அவசியம் நமக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள். நமக்கு சோறிடும் விவசாயிகளுக்கு நாம் சோறிடும் அந்த வைபவத்தில் நண்பர்கள் சிலர் அச்சமயம் உடனிருக்கவேண்டும் என்று இங்கே கேட்டுக்கொள்கிறோம்.

DSC03454

விவசாயத்திலும் விவசாய வேலைகளிலும் உள்ள கஷ்டத்தை கேட்டு தெரிந்துகொண்டோம். நாம் நின்றுகொண்டிருந்த வயல் வெளிக்கு பின்னணியிலேயே பிரம்மாண்ட கட்டிடங்கள் எழும்பியிருந்தது வயிற்றில் புளியை கரைத்தது.

மார்கழி மாத அதிகாலை வேளைகளில் போரூர் ராமநாதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றபோது ஒரு பெரியவர் கூறியது நினைவுக்கு வந்தது. “தம்பி ஒரு நாப்பது அம்பது வருஷத்துக்கு முன்னே இங்கேயிருந்து குன்றத்தூர் வரைக்கும் ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு வயல் வெளிகள் தான் இருக்கும். குன்றத்தூர் ரோட்டுல தான் நாங்க படுத்து தூங்குவோம்.”

ஆனால் இப்போது? ஏற்கனவே ரியல் எஸ்டேட் அரக்கர்களின் அசுரப் பசிக்கு குன்றத்தூரும் அதன் சுற்றுப் பகுதிகளும் அதில் இருந்த விவசாய நிலங்களும் பலியாகிவிட்டன.

விளைநிலங்கள் எல்லாம் இப்படி வீட்டு மனைகளாகவும் அப்பார்ட்மெண்ட்களாகவும் ஆகிவிட்டால் அரிசிக்கு பதில் நாளை மண்ணைத் தான் நம் சந்ததியினர் சாப்பிடவேண்டும்.

ஒன்றுக்கு உதவாத வெத்து அறிவிப்புக்களை எல்லாம் வெளியிட்டுவிட்டு தங்களின் சாதனை என்று பீற்றிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் விளை நிலங்களை குடியிருப்புகளாக்கும் ரியல் எஸ்டேட் பெருச்சாளிகளை கணக்கெடுத்து அவர்களை முற்றிலும் ஒழிக்க ஏதேனும் செய்தால் நன்றாக இருக்கும். அப்படி செய்தால், அதுவே உண்மையில் நூறாண்டு பேசும் மூன்றாண்டு சாதனையாக இருக்கும். செய்வார்களா? செய்வார்களா??

விவசாயத் தொழிலாளர்களுக்கு சாப்பாடு வாங்கித் தந்தபோது கூட, அது போதாது இன்னும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியது. சட்டைப் பையில் பார்த்தோம்… ஐந்நூறு ரூபாய் சொச்சம் இருந்தது. நூறு ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு, நானூறு ரூபாயை கொடுத்து அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம்.

“வீட்டுக்கு உங்க குழந்தைகளுக்கு ஏதாச்சும் பலகாரம் வாங்கிட்டு போங்க!” என்றோம்.

“ரொம்ப சந்தோஷம் சார்” என்று கூறி வாங்கிக்கொண்டார்கள்.

 கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி... நம் விவசாயி

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி… நம் விவசாயி

அவர் பாதத்தை பார்த்தோம். சேறும் சகதியுமாக இருந்தது. அப்படியே அவர் காலில் வீழ்ந்து ஆசி வாங்கினோம்.

“அட… எதுக்கு சார்… நீங்க எங்க கால்லலாம் விழுறீங்க?” பதறிப் போனார்கள்.

அவர்களின் பெயரை கேட்டோம். (ஒருவர் பெயர் மட்டும் நினைவிருக்கிறது). “நரசிம்மன்!” என்றார். அப்படிப் போடு. நம் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய நாம் வணங்கும் தெய்வம்.

சாட்சாத் அந்த நரசிம்மருக்கே இதை செய்ததாக கருதினோம்.

இறைவனை இங்கேயே பார்த்தாகிவிட்டது. இனி கோவிலுக்கு வேறு செல்லவேண்டுமா என்ன?

அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு குன்றத்தூர் புறப்பட்டோம்.

DSC03457

ஆடிக்கிருத்திகையாக இருந்தாலும் நாம் சென்ற நேரம் மதியம் என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அடிவாரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அர்ச்சனை செட் ஒன்று வாங்கிக்கொண்டு விறு விறுவென படியேறினோம்.

DSC03459

காலை ரகு குருக்களிடம் பேசும்போது “நீங்க வந்தவுடனே எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்று கூறியிருந்தார். எத்தனையோ பேர் க்யூ வரிசையில் காத்திருக்க, நாம் எந்தவித சிறப்பு சலுகையும் பெற விரும்பவில்லை.

ரூ.50/- கட்டண க்யூ வரிசையில் கூட்டம் சற்று மிதமாக இருந்தது. என்ன சுமார் 15 நிமிடங்கள் க்யூவில் நிற்கப்போகிறோம். வாழ்க்கையில் எது எதற்கோ இந்த கால்கள் நின்றிருக்கின்றன. முருகனை நினைத்துக்கொண்டு முருகனுக்காக நிற்கலாமே என்று கருதி ரூ.50/- டோக்கன் வாங்கிக்கொண்டு க்யூவில் நின்றோம்.

மனம் முழுக்க முருகனையே சுற்றி வந்தது.

க்யூ நகர சற்றைக்கெல்லாம் அர்ச்சனை நடைபெற்ற முருகனுக்கு அருகே வந்துவிட்டோம். தேங்காய் இங்கேயே உடைத்து அனைவருக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.

DSC03464

ரகு ஐயரும், திருமுருகனும் நம்மை பார்த்துவிட்டார்கள். “சார்… நான் தான் போன் பண்ணச் சொன்னேன் இல்லை…” என்றார் ரகு ஐயர்.

“இருக்கட்டும்… பரவாயில்லே…”

“நீங்க உள்ளே தரிசனம் பண்ணிட்டு வாங்க… வந்தவுடனே இங்கே அர்ச்சனை பண்ணிக்கலாம்” என்றார்.

(விஷேட நாட்களில், வெளியே உற்சவருக்கு அலங்காரம் செய்து அங்கு தான் அர்ச்சனை நடைபெறும். மூலவரை தரிசிக்க மட்டுமே இயலும். அங்கு அர்ச்சனை கிடையாது. கூட்ட நெரிசலை மனதில் கொண்டு செய்யப்படும் ஏற்பாடு இது.).

மூலவர் பிரமாதமான அலங்காரத்தில் இருந்தார். குன்றத்தூர் முருகனின் அழகே தனி.

வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

பிரசாதமும் புஷ்பமும் பெற்றுக்கொண்டு மறுபடியும் உற்சவரிடம் வந்தோம். “நீங்க இப்படி வந்துடுங்க…” என்று கூறி உள்ளே அழைத்து ஒரு ஓரமாக நிற்கவைத்தார் குருக்கள்.

கண்ணெதிரே அழகுக்கு பெயர் சொல்லும் முருகன். எம் தந்தை, நண்பன், ஆசான், நீதிபதி, குழந்தை என எல்லாமுமாக இருக்கும் எம் முருகனை கண்குளிர தரிசித்தோம்.

“ஐயனே, யாம் எந்த தெய்வத்தை எவ்விதம் வணங்கினாலும் உன்னையே யாம் வணங்கியதாக ஏற்றுக்கொண்டு அருள் செய்யவேண்டும்.”

நண்பர்களுக்காகவும் தள வாசகர்களுக்காகவும் வேண்டிக்கொண்டோம்.

DSC03466 copy

உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்

“முருகா, உன் விருப்பமில்லாது எதுவும் இங்கு நடக்குமா? உன்னை இன்று தரிசிக்கும் பாக்கியத்தை எமக்கு அளித்தமைக்கு எவ்வளவு முறை நன்றி சொன்னாலும் போதாது. இதுவரை நீ அளித்த அனைத்திற்கும் நன்றி. எங்களிடம் உள்ள அல்லவைகளை நீக்கி, நல்லவைகளை பெருக்கி அருள் செய்யவேண்டியது உன் கடமை.”

நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்

தூயா முருகா மாயோன் மருகா – உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்

நாம் மெய்யுருகி நின்றுக்கொண்டிருந்த நேரம் முருகன் திருமேனியை அலங்கரித்த மலர்ச்சரத்தை எடுத்து நம் மீது சூட்டினார் குருக்கள். என்னே எம் பாக்கியம்.. உடலும் மனமும் சிலிர்த்தது.

DSC03475

வரும் செவ்வாய் முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையும் குன்றத்தூர் முருகனை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறோம். மஹா பெரியவா கூறியுள்ள பத்து கட்டளைகளுள் இது ஒன்று. (வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு!)

DSC03478

தாய்நாட்டில் இருப்போர் குறிப்பாக தமிழகத்தில் இருப்பவர்கள் வாரம் ஒரு முறை ஆலய தரிசனம் செய்யத் தவறக்கூடாது. நாமெல்லாம் ஒரு வகையில் பாக்கியசாலிகள். நினைத்தால் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடவோ, துன்பமென்றால் ஓடிச் சென்று அவன் காலடிகளை பற்றிக்கொள்ளவோ வழியிருக்கிறது. தாய்நாட்டை பிரிந்து இயந்திரத் தனமான ஏதோ ஒரு அயல்நாட்டில் ஒரு வித நிர்பந்தத்தில் (விருப்பத்தில் அல்ல) வசிப்பவர்களுக்கு தெரியும் இதன் அருமை. எனவே இதை படிக்கும் அனைவரும் தங்களுக்கு சௌகரியமான நாளையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து, வாரம் ஏதாவது ஒரு திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடவேண்டும்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. அதிலும் முருகனை தொழுவது அதனினும் நன்று.

ஏன் தெரியுமா?

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும்!

[END]

22 thoughts on “உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

  1. //////வயலில் காலை வைக்க, வைக்க இந்த ஜன்மமே சாபல்யம் பெற்றது போன்ற ஒரு சந்தோஷம்./////

    இந்த வார்த்தைகளை படிக்கும் போதே மேனி சிலிர்த்தது. அருமையான பதிவு. வேறென்ன இருக்கிறது சொல்ல!!!!!!!!!!!!!!!!!

    குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தை பார்க்கும் போது அங்குள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் போல தோன்றுகிறது.( என்று திருந்தும் இந்த பாரத நாடு)

  2. ஆடி கிருத்திகை பதிவு லேட் ஆக பதிவாக வந்தாலும் நாங்கள் நேரில் அன்ன தான நிகழ்ச்சியை பார்த்தது போல் உள்ளது. தனது பக்தனுக்கு கிருத்திகைக்கு முதல் நாளே ஆசி வழங்கி காட்சி கொடுத்து மெய் சிலிர்க்க வைத்து விட்டார் நம் முருகன்.

    அன்ன தான நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக சாப்பிடுவதை பார்க்கும் பொழுது அந்த இறைவனே மகிழ்ச்சியை வெளிப் படுத்துவது போல் உள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். அனைவருக்கும் இலை எடுப்பதன் மகத்துவத்தை கதை மூலமாக விளக்கி நம் வாசகர்களுக்கும் புரிய வைத்ததற்கு நன்றிகள் பல முருகன் சாட்சியாக அன்ன தானம் நடைபெற்றிருக்கிறது.முருகன் படம் அழ காக உள்ளது

    ஆடி கிருத்திகை அன்று பசு மாட்டிற்கும் உணவு அளித்து மாடுகளையும் குளிர்வித்து விட்டீர்கள். குன்றத்தூர் விவசாயி களுக்கு உணவு அளித்து அவர்களின் வாழ்த்தையும் பெற்று விட்டீர்கள். வயல்வெளிகளை பார்க்கும் பொழுது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தானே நாம் சோற்றில் கை வைக்க முடியும். அறுவடை சமயத்தில் அன்ன தான நிகழ்ச்சியில் நாமும் எங்களால் முடிந்த உதவி செய்கிறோம்.

    குன்றத்தூர் முருகன் கொள்ளை அழகு.

    நன்றி

    உமா

  3. வணக்கம்……..

    இக்கட்டுரையை படிக்கும்போது தங்களுடன் பயணித்த உணர்வு ஏற்படுகிறது.

    இந்த வாரம் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற போது அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போது எதுவுமே தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது, என்னால் முடிந்த உதவி எதாவது அவர்களுக்கு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    presence of mind லேட்டாக வேலை செய்கிறது. இன்னும் நிறைய பக்குவம் வேண்டும். இறைவன் அருள வேண்டும்……….

    1. உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்த ஒரு மனமாற்றத்தை வாசகர்கள் அனைவரிடமும் எதிர்பார்த்துத் தான் இது போன்ற பதிவுகளை அளிக்கிறேன்.

      இதைத் தான் வாலி அவர்கள் ‘அன்புக்கரங்கள்’ படத்தில் மிக அழகாக கூறியிருப்பார்.

      தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
      அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
      பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
      இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை

      – சுந்தர்

  4. சார் எந்த பதிவு படித்தாலும் என் கண்கள்ல கண்ணீர் வந்துடுது சார் மன பாரமெல்லாம், குறைஞ்சிடுது . superb சார் கீப் இட் அப் …

  5. ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு படிக்க படிக்க மனம் நிறைவாக இருந்தது.
    இலை எடுப்பதின் அர்த்தம் அதுவும் அந்த கண்ணனை வைத்தே விளக்கிருப்பது அதன் மகத்துவத்தை தெரிவிக்கிறது.
    விவசாயிகள் சேற்றில் காலை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.
    பதிவு உங்களுடனே பயணம் செய்த உணர்வை கொடுக்கிறது.
    நன்றி.

  6. ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு மிகவும் நன்றாக உள்ளது சுந்தர் சார்.
    எங்களை எல்லாம் அழைத்து சென்றமைக்கு நன்றி. (நேரடியாக பார்த்தது போன்று ஒரு உணர்வு)

    மற்றவர் சாப்பிட்ட இலை எடுக்க யோசிபவர்களுக்கு, சரியான கதையை சொல்லி, நன்கு புரிய வைத்து இருக்குறீர்கள். பச்சை பசேலன இருக்கும் வயல்வெளிகளைக் காணும் பொழுது, மனசு இதமாய் இருக்கிறது.

    ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற உதவியை, இது போன்ற ஏழை விவசாயிகளுக்கு செய்யவேண்டும். அவர்கள் மனம் குளிர்ந்தால் தான் நம் வயிறு குளிரும்.

    “நதியை போல நாமும்
    நடந்து பயன் தரவேண்டும்

    கடலை போல விரிந்த
    இதயம் இருந்திட வேண்டும்

    வானம் போல பிறருக்காக
    அழுதிட வேண்டும்

    வாழும் வாழ்கை உலகில்
    என்றும் விளங்கிட வேண்டும்

    என்ற பாடலை ஞாபகபடுத்தி விட்டீர்கள் சுந்தர் சார்.

    வாழ்த்துக்கள்!

  7. அத்தனை படங்களும் அருமை .
    சேற்றில் கால் வைத்தவர்களுக்கு வாழை இலையுடன்சாப்பாடு உங்கள் கையால் கிடைக்க அவர்களுக்கு தகுதியும் உங்களுக்கு புண்ணியமும் கிடைத்தது.
    குன்றத்தூர் அடிவாரமும், விநாயகர் கோயில் அன்னதானமும் பார்க்க பார்க்க பரவசம்.
    இனிப்புடன் கூடிய அன்னதானம் விரைவில் உங்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கும்.
    நன்றி

  8. வணக்கம்……..

    இக்கட்டுரையை படிக்கும்போது தங்களுடன் பயணித்த உணர்வு ஏற்படுகிறது

    நந்தா கோபால்
    வந்தவாசி

  9. //நாம் நின்றுகொண்டிருந்த வயல் வெளிக்கு பின்னணியிலேயே பிரம்மாண்ட கட்டிடங்கள் எழும்பியிருந்தது வயிற்றில் புளியை கரைத்தது.//

    இது தங்களிக்கு மட்டுமல்ல சார் இந்த பூமியை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் எண்ணம் (ஆனால் இந்த ரியல் எஸ்டேட்காரர்களுக்கு மட்டும் ஏனோ தெரிவதில்ல்லை) நான் அதிகமாக கிராமங்களுக்கு செல்பவன் கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் மிகப்பெரிய மாற்றம் குறிப்பக என் இதய தெய்வம் லக்ஷ்மி நரசிம்மன் உறையும் பேரம்பாக்கம் எனக்கு மிகவும் பிடித்த ஊர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு சென்று கொண்டிருக்கிறேன் ஆனால் இப்போதெல்லாம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கிராமங்களின் அழகை கொள்ளை அடித்து விட்டனர் அப்போதெல்லாம் தங்களுக்கு ஏற்பட்ட அதே “பகீர்” உணர்வுதான் எனக்கும். கிராமங்களின் அழகை காப்பாற்ற அவன் ஒருவனால்தான் முடியும் நம் தள வாசகர்கள் அனவரும் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்யலாம் என நினைக்கிறன்.(இது எனது சிறு விண்ணப்பம்தான்) இதற்கு தாங்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

    மற்றபடி தங்களிடம் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் தெரிகிறது எனக்குத் தெரிந்து தாங்கள் மட்டும்தான் இந்த வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்கிறீர்கள் இது வெறும் புகழ்ச்சி அல்ல என் மனதில் தோன்றும் உண்மை ! தங்களுக்கு அந்த ஆண்டவனின் அருளாசி நிறைய இருக்கிறது மேன்மேலும் வளர அழகன் முருகனிடம் நாங்கள் அனைவரும் வேண்டிக்கொள்கிறோம்.
    நன்றி!

    1. தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

      விவசாய நிலங்கள் தொடர்பான உங்கள் கூட்டுப் பிரார்த்தனை கோரிக்கை படித்தேன். இது பற்றி நமது பிரார்த்தனை கிளப்பில் ஏற்கனவே இரண்டு முறை கோரிக்கை வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

      இன்றும் நமது பிரார்த்தனை கிளப்பில், தனிப்பட்ட கோரிக்கைகள் தவிர, எவரும் கேட்காமலே பொது கோரிக்கைகளான விவசாய மறுமலர்ச்சி, நெசவாளர்களின் வாழ்வாதாரம், மின் பற்றாக்குறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு, மது ஒழிப்பு, இளைஞர் நலன் உள்ளிட்ட பொதுப் பிரச்னைகளுக்கு நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

      மேலும் தெரிந்துகொள்ள நமது பிரார்த்தனை கிளப் பதிவுகளை பார்க்கவும்.

      – சுந்தர்

  10. வாழ்க வளமுடன் . உங்கள் பனி தொடர காங்ககயனல்லூர் முருகன் துனை புரிவராக

    1. தங்கள் வருகைக்கு நன்றி சார். தொடர்ந்து வருகை தந்து இந்த எளியவர்களை பெருமைப்படுத்துங்கள்.

      நண்பர்களே, திரு.சீதாராமன் வேறு யாருமல்ல, கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேத்தி காயத்ரியின் கணவர்.

      – சுந்தர்

  11. சிறப்பான பதிவு அழகான பயணம்
    படிக்கும்போதே மனது நிறைந்துவிட்டது
    நன்றி
    பிரியதர்சினி

  12. சிறப்பான பதிவு!. இறைவனின் அருளாலே அனைத்தும் நடக்கிறது. படங்கள் அருமை. முருகனின் அழகிற்கு ஈடில்லை. விவசாய நிலங்களின் தற்போதய நிலைமை வேதனைக்குரியது. அவ்வுணர்வை தங்கள் எடுத்த படம் நன்கு வெளிப்படுத்துகிறது. நன்றி!.

  13. அருகம்புல்லுக்கு ஈடு இணை எதுவும் இல்லை – தங்களின் முதல் கட்டுரை மாலை மலர் இதழில் படித்து மகிழ்தோம்,
    மேலும் மேலும் இது போல பல கட்டுரைகள் எல்லா இதழிலும் வந்து நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.
    இப்படிக்கு உங்கள் வாசகர்கள்.
    நன்றி.

    1. தங்களின் முதல் பத்திரிக்கை கட்டுரையான அருகம்புல்லின் மகத்துவம் மாலை மலரில் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்

      இந்த பதிவு பத்திரிகைத் துறையில் நீங்கள் காலூன்றும் முதல் பதிவு. தங்கள் முதல் பதிவே கணபதியைப் பற்றி எழுதி பத்திரிகைத் துறையில் எழுதுவதற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டீர்கள். தாங்கள் மேலும் மேலும் பிள்ளையார் அருளால் பல கட்டுரைகள் எழுத எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வாழ்த்துகிறேன்

      நன்றி

      உமா

  14. சுந்தர் சார் காலை வணக்கம்

    சொல்வதற்கு வார்தைகளை இல்ல

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  15. முருகனை நினை மனமே -நலங்கள் பெருகிடும் தினம் தினமே உருகிடும் மறுகணமே நெருங்கி வருவது அவன் குணமே ….

    பிள்ளையார் சுழி போட்டு [மாலைமலரில் அருகம்புல் ]தொடங்கிய உங்கள் பணி…தொடரட்டும்…. எங்கள் நெஞ்சம் வாழ்த்தும் இனி …….

    ஓரானைக் கன்றை உமையாள் திருமகனை
    போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
    புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
    சத்தி தரும் சித்தி தருந்தான்

    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்
    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்
    துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்
    துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்
    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

    அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை
    ஆனந்தக் கூத்தரின் மகனே தில்லை
    ஆனந்தக் கூத்தரின் மகனே பிள்ளையார்

    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

    வழியின்றி வேலனவன் திகைத்தான் குற
    வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
    வழியின்றி வேலனவன் திகைத்தான் குற
    வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்

    மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
    மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான் மறு
    கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் மறு
    கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் பிள்ளையார்

    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

    கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை அவன்
    கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
    ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும் அவன்
    நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்? அவன்
    நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்? பிள்ளையார்

    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

    தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும்
    துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
    அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும் அவன்
    அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் அவன்
    அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் பிள்ளையார்

    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்
    துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்
    துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்
    சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

  16. மிகவும் அருமையான பதிவு தொடரட்டும் தங்களின் பணி.

    நன்றி

    ராஜாமணி

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *