Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

print
ந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரை பற்றி, ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ என்ற பெயரில் நமது தளத்தில் தொடர் துவங்கவிருப்பது பற்றி அறிவித்திருந்தோம். ஏற்கனவே இணையத்தில், பல்வேறு புத்தகங்களில் அங்கே இங்கே என இருக்கும் செய்திகளை திரட்டி தராமல், நாமே களத்தில் இறங்கி இதுவரை வாசகர்கள் அறிந்திராத தகவல்களை, மகிமைகளை சேகரித்து அவற்றையே உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினோம். ஏற்கனவே நேரம் என்பது நமக்கு அரிதான ஒன்றாகிவிட்டநிலையில், “இதற்கெல்லாம் எங்கிருந்து இவருக்கு நேரம் கிடைக்கப்போகிறது? அதுவும் வேலையை வேறு பார்த்துக்கொண்டே இதெல்லாம் சாத்தியம் தானா?” என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொறுப்பை தரும் ராயர் அதற்குரிய நேரத்தை தரமாட்டாரா என்ன? மற்றவர்களின் அரை மணிநேரத்திற்கும் நம்முடைய அரை மணிநேரத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. நேரத்தை எந்தளவு தரமானதாக, உபயோகமிக்கதாக, லோக ஷேமத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்கிற பாடத்தை இறைவன் நமக்கு நன்கு கற்றுகொடுத்துவிட்டான். இன்னொன்று, நேரத்தை அதிகமாக வீணடித்தவனுக்கே அதை உபயோகமாய் செலவிடவும் தெரியும் (?!!).

நாம் சென்ற வாரம் சொன்னபடி, இந்த ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடருக்கு செய்திகளை திரட்டவேண்டி களத்தில் இறங்கிய நேரத்தில், சென்ற ஞாயிறு ஒரு ரோல் மாடல் சந்திப்புக்காக திடீரென்று ஈரோடு செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ஞாயிறு விடுமுறை நாளன்று இது தொடர்பாக எந்த பணியும் செய்ய இயலவில்லை.

Sri Ragavendhra Swamy_

இப்போது தான் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வருகிறோம். ராயரின் மகிமைகளை அவர்கள் கூறிவருகிறார்கள். அவற்றை தட்டச்சு செய்து பதிவளிக்கவேண்டிய சூழ்நிலையில், இடைவிடாத மின்வெட்டு காரணமாக வீட்டில் கணினியையே இயக்க முடியவில்லை. ஏதோ கிடைக்கும் நேரத்தில் நம்மால் இயன்றதை செய்து பதிவளித்து வருகிறோம். வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.

இந்த வாரம் திரட்டியவற்றை அடுத்த வாரம் முதலே தர இயலும். இருப்பினும் நாம் ஏற்கனவே சொன்னபடி இன்றே ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தரிசனம் தொடரை இன்று நிச்சயம் துவங்கவேண்டும் என்பதால், கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய ‘திருவருளும் குருவருளும்’  என்கிற விளக்கத்தை இங்கே தருகிறோம். இது பல சந்தேகங்களை போக்கும் என்பது உறுதி.

இந்த தொடரில் இடம்பெறப்போகும் பக்தர்களின் அனுபவங்களை படித்துவிட்டு, நமக்கு இப்படி நடக்காதா என்று ஏக்கப்படுவதை விடுத்து உண்மையான தொண்டுள்ள கொண்ட ஒரு பக்தியை நாம் சம்பந்தப்பட்ட குருமார்கள் மீது செலுத்துவோம். அதுவே குருவருளை பெறும் வழி.

மேலும் ஒரு பக்கம் மகா பெரியவா, மறுபக்கம் ஸ்ரீ ராகவேந்திரர் என்று நாம் இந்த தளத்தில் அளித்து வருவது பற்றி யாரும் குழம்பத் தேவையில்லை. ரைட்மந்த்ரா தளத்தை பொருத்தவரை ஞானத்தையும் அருளையும் தேடி வருபவர்களுக்கு இது ஒரு பெரிய விருந்து. பல சுவையான பதார்த்தங்கள், உடலுக்கும் மனதுக்கும் ஆன்மாவுக்கும் நலம் தரும் பல பதார்த்தங்கள் இங்கு பரிமாறப்படுகின்றன. யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை சாப்பிடுங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். அவ்வளவே.

மேலும் மகா பெரியவா, ஸ்ரீ ராகவேந்திரர் இருவரும் ஒரே பணிக்காக இறைவனால் அனுப்பப்பட்டவர்களே. சொல்லப் போனால் மகா பெரியவா, ஸ்ரீ ராகவேந்திரர் மீது தீராத பக்தி செலுத்திவந்தார். இவர் நமக்கு குரு என்றால் அவர் மஹா குரு. (அது பற்றிய பதிவுக்கு : குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!)

இருவருமே சாஸ்திரங்களை வழுவாமல் பின்பற்றவேண்டும், வேதநெறிப்படி ஒருவர் வாழவேண்டும், முக்கிய விரதங்களை அனுஷ்டிக்கவேண்டும், பரோபகார சிந்தனையுடன் வாழவேண்டும் என்றும் நமக்கு போதித்தவர்கள். போதித்ததோடல்லாமல் தாங்களும் பின்பற்றியவர்கள். ஒருவர் ஆதிசங்கரரின் வழி வந்தவர். மற்றவர் மத்வாச்சாரியரின் வழி வந்தவர். ஆதிசங்கரர், சிவபெருமானிடத்தே பக்தி கொண்ட அதே நேரம், ஸ்ரீமந் நாராயணனிடமும் தீராத பக்தி செலுத்தி வந்தார். பஜ கோவிந்தம் இயற்றினார். விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு உரை இயற்றினார். சொல்லப்போனால் ஆதிசங்கரர் கூப்பிட்ட குரலுக்கு சிவபெருமனைவிட நரசிம்மரே ஓடிவந்தார். ஏகாதசி விரதம் முதல் ஸ்ரீ ராகவேந்திரர் அனுஷ்டித்த  அத்தனை விரதங்களையும் மகா பெரியவரும் தாம் வாழ்ந்த காலத்தில் அனுஷ்டித்து தன்னை நாடி வரும் பக்தர்களையும் அனுஷ்டிக்க சொன்னார்.

அவ்வளவு ஏன், நமது உயிரினும் மேலாக விளங்கிய ஞானப்பழமாக திகழ்ந்த திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், எந்தளவு முருகப் பெருமானின் பக்தர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், முருகனின் பெருமையை மட்டுமா அவர் பேசினார்? சீதா கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், விஷ்ணு சஹஸ்ர நாம மகிமை, விபீஷணன் சரணாகதி, திருமலை பெருமை, ஸ்ரீனிவாச கல்யாணம், மீனாக்ஷி திருக்கல்யாணம், பிள்ளையார் பெருமை, ஸ்ரீ ராமானுஜர், ஆண்டாள் திருக்கல்யாணம் என்று அவர் சொற்பொழிவு நிகழ்த்தாத தலைப்புக்களே இல்லை, புகழ் பாடாத தெய்வங்களே இல்லை எனலாம். இன்றும் இவையெல்லாம் சி.டி.க்கள் வடிவில் கிடைக்கிறது. வாங்கி, கேட்டு பலனடையுங்கள்.

குருமார்களே தெய்வங்களிடம் பேதம் பார்க்காதபோது, அற்ப மானிடர்கள் நாம் பார்ப்பது அறிவீனம்.

நாம் செய்யவேண்டியது எல்லாம் தேவையற்ற ஆராய்ச்சிகளை விடுத்து அந்த மகான்கள் சொல்படி நடந்து அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதே.

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். மகா பெரியவரோ, ஸ்ரீ ராகவேந்திரரோ, மகாவதார் பாபாஜியோ, ஷிர்டி சாயிபாபாவோ யாராகிலும் உங்கள் நம்பிக்கை எந்தளவு ஆழமாக உள்ளதோ, நீங்கள் எந்தளவு பரிசுத்தமாக அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு பரோபகார வாழ்க்கையை வாழ்ந்துவருகிறீர்களோ அந்தளவு அவர்கள் அருள் உங்கள் மீது வெளிப்படும்.

======================================================================

variyarதிருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும்!

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான்.

“தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”

“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”

“தம்பீ, காண முயலுகின்றேன்.”

“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”

“அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”

“தேன் பாட்டில்.”

“தேன் இனிக்குமா, கசக்குமா?’

“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”

“தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

“தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?” “இல்லை.”

“என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.”

மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”

“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” “தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”

“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”

“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”

“ஆம்! தெரிகின்றன.”

“முழுவதும் தெரிகின்றதா?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”

மாணவன் விழித்தான்.

“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”

“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”

“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”

“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.

“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”

“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”

“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”

“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?”

“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”

– திருமுருக கிருபானந்தவாரியார் |  நன்றி : செங்கோட்டை ஸ்ரீராம் | Dinamani.com

(ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் தொடரும்….)

======================================================================

Also check :

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

======================================================================

[END]

 

14 thoughts on “திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

  1. பதிவு மிக மிக அற்புதம். குரு ராகவேந்திரர் பதிவை வரும் வாரம் முதல் எதிர்பார்க்கிறோம். அவரைப் பற்றிய நிகழ்ச்சியை அவரே தங்களுக்கு தொகுத்து அளிக்க உதவி செய்து, அதற்குண்டான காலத்தையும், நேரத்தையும் அளிப்பார். தாங்கள் ஒரு புறக் கருவியே. அவர் ஒரு அகக் கருவியாக செயல்பட்டு தனது மகிமையை நம் தளத்திற்கு வழங்குவார்.

    கிருபானந்த வாரியாரின் கதை மிகவும் அற்புதம். குரு வருளும் திருவருளும் இரூ கண்ணாடி போன்றது. இறைவனை காண இரண்டும் முக்கியமானவை என்பதை அறிந்து கொண்டோம்.

    இதை தான் ஷிர்டி சாய் பாபாவும், மனிதனுக்கு பொறுமை மற்றும் நம்பிக்கை மிகவும் முக்கியம் என்று கூறினார்

    இறை அருளால் தங்கள் தளம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். தேடுதல் உள்ள தேனிக்களுக்கு இந்த தளம் தேவாமிருதம் போன்றது

    ராகவேந்திரர் படம் மிக அருமை.

    நன்றி
    உமா

  2. சுந்தர்

    மானாமதுரை Dr.சேதுராமன் M.A., Ph.D. அவர்களோட சொர்போழிவு CDs எங்க கிடைக்கும்னு சொல்ல முடியுமா, CD டைட்டில் சொன்ன கூட போதும்.

    நன்றி

    1. அந்த படத்தின் HI-RES IMAGE உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதை பயன்படுத்திக்கொள்ளவும். நன்றி.

  3. அருமை….மானுடம் பயனுற குருவடி துணையுடன் திருவடிகிட்ட வழிகாட்டும் சுந்தர் சார் உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள் …

  4. குருவருளும் திருவருளும் ஒருங்கினைந்த பதிவு.
    மிக மிக அற்புதம். படிக்க படிக்க நீங்கள் சொன்னமாதிரி நிறைய சந்தேகங்கள் விளங்கின.
    நன்றி.

  5. வாரியார் அவர்களின் விளக்கம் அருமையிலும் அருமை. இப்படி ஒரு விளக்கத்தை இதவரை நான் எங்குமே கேட்டதில்லை. குருவருளின் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.

    குரு ராகவேந்திரர் தொடர் அமர்களமாக ஆரம்பித்திருக்கிறது. உங்கள் தளராத முயற்சிக்கு நன்றி சுந்தர்.

  6. தமிழ்செல்வி அவர்கள் கூறியதைப் போல் ராகவேந்திரர் படம் கொள்ளை அழகு. என் கணினியின் வால்பேப்பர் ஆக்கிவிட்டேன்.

    மகா பெரியவர் தான் வாழ்ந்த காலத்தில் ராகவேந்திரர் மேல் பக்தி செலுத்தினார் என்பது எனக்கு புதிது. நீங்கள் கூறுவதைப் போல குருமார்கள் எல்லாம் தெய்வங்களிடம் பேதம் பார்க்காத போது நாம் பார்ப்பது அறிவீனம். அறியாமை.

    திருவருள் குருவருள் குறித்து வாரியார் கூறியுள்ள விளக்கம் அருமை.

    வாரியார், மகா பெரியவர் போன்ற உத்தமர்கள் எல்லாம் தற்போது நமக்கு வழிக்கட்ட நம்மிடையே இல்லையே என்கிற குறைய இந்த தளம் தீர்த்துவைக்கிறது.

    நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர், சேலம்

  7. சுந்தர் சார் வணக்கம்

    ஸ்ரீ ராகவேந்திரர் தொடர் _ மிகவும் அருமை அற்புதங்கள் தொடர என் நல் வாழ்துக்கள் ..

    நன்றி

  8. Dear Shri Sundar,

    Am an ardent devotee of Mahaa Periyavaa. At the same time I have utmost devotion and bhakthi towards Raghavendra Swamigal, Shirdi Baba and Yogi Surat Ramkumar.

    For quite some time, say for about 5 years I have been constantly thinking, praying, talking about Mahaa Periyavaa. Yesterday, all of a sudden it looked to me as if Periyavaa was telling me to chant ” Poojyaaya Raghavendraaya ……. throughout the day which I started doing throughout my travel to office and in office also while attending to my duties.

    Somewhere at the deep of my heart, I had a feeling and watned to know if Periyavaa had spoken about Raghavendra Swaamigal and Shirdi Baba at any point in time.

    Secondly, about 4 years ago one of the ardent devotees of Raayaru from Australia had advised me to Chant ” Andhopi dhivya dhrishtithyaath eda mookopi “…….. (2 lines from Shree Raghavendra Guru Stotram) 11 times daily after taking bath for one of my ailments. I was chanting it for quite some time, but since I have included lot of other slokas and mantras slowly I have forgotten this verse.

    As I enter into Rightmantra.com today, I am dumb struck to see the answers for all my queries precisely you have posted this only yesterday.

    “……சொல்லப் போனால் மகா பெரியவா, ஸ்ரீ ராகவேந்திரர் மீது தீராத பக்தி செலுத்திவந்தார். இவர் நமக்கு குரு என்றால் அவர் மஹா குரு. ”

    “…ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். மகா பெரியவரோ, ஸ்ரீ ராகவேந்திரரோ, மகாவதார் பாபாஜியோ, ஷிர்டி சாயிபாபாவோ யாராகிலும் உங்கள் நம்பிக்கை எந்தளவு ஆழமாக உள்ளதோ, நீங்கள் எந்தளவு பரிசுத்தமாக அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு பரோபகார வாழ்க்கையை வாழ்ந்துவருகிறீர்களோ அந்தளவு அவர்கள் அருள் உங்கள் மீது வெளிப்படும் “…

    This is not all… Further I have got the forgotten verse of 2 lines from Shree Raghavendra Guru Stotram link which you have provided in the post ..

    … அன்’தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
    பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத் || (24)

    Am still to come out of the surprise and the abundant grace Shri Raghavendra Swaamigal showered on me, by answering my sincere prayer through Mahaa Periyavaa. Am in tears….

    Best regards
    Swaaminathan N
    East Tambaram

    1. மிக்க நன்றி சார். உங்கள் பின்னூட்டமும் கருத்தும் எமக்கு மிகப் பெரிய உத்வேகத்தை தந்துள்ளது.

      “கடமையை செய்; பலனை இறைவன் பார்த்துக்கொள்வான்!”

      – சுந்தர்

      1. சுந்தர் சார்

        உங்களின் இந்த ப்ளாக் பல தரப்பட்ட நல்ல விஷயங்களை இறையம்சத்துடன் மிகவும் புதுமையான செய்திகளையும் கொண்டுள்ளது. நீங்கள் வணங்கும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மஹா அனுக்ரஹத்தால் எல்லா வளங்களையும், நலங்களையும் பெற்று உங்கள் இறைப்பணி பல்லாண்டு செவ்வனே தொடர எல்லாம் வல்ல ராகவேந்திர ஸ்வாமிகளையும், மஹா பெரியவாளையும் மனமார பிரார்த்தனை செய்து கொள்கிறேன்..
        ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம:
        மஹா பெரியவா திருவடிகள் சரணம்..

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *