Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

print
ராயப்பேட்டையில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ அருகே தன்னைத் தேடி தினசரி வரும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு இருவேளையும் உணவளிக்கும் சேகர் அவர்களை நாம் சந்தித்ததும், அவரது சேவையில் நம்மை இணைத்துக்கொண்டு மாதந்தோறும் அவருக்கு உதவி வருவதும் நீங்கள் அறிந்ததே.

மாதம் ஒருமுறையாவது சேகர் அவர்களை சந்திக்காமல் நாம் இருப்பதில்லை. இந்த மாதம் நம் கோட்டாப்படி கிளிகளுக்கு அரிசி வாங்கித் தரவேண்டி (75 கிலோ) திரு.சேகர் அவர்களை தொடர்பு கொண்டு நாம் வருவதாக சொன்ன போது, “சார்… அரிசி வேண்டாம்.  என் கிட்டே இன்னும் ரெண்டு மாசத்துக்கு போதுமான அளவு ஸ்டாக் இருக்கு. மூட்டை வைக்கிறதுக்கு இங்கே  இடம் வேற இல்லை!”

IMG_4227

“வேற என்ன வேணும் சொல்லுங்க சார்… எங்களால முடிஞ்சதை வாங்கித் தர்றோம்!  இல்லே பணமா வேணும்னாலும் கொடுத்துடுறேன். நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க!”

“எனக்கு கிளிகளுக்கு அரிசி வைக்க பெரிய பக்கெட், முறம் இதெல்லாம் தான் தேவைப்படுது!” என்றார்.

“சரி எப்போ வரணும்னு சொல்லுங்க வர்றேன். உங்க ஏரியாவுலேயே ஏதாவது கடையில வாங்கிக்கலாம்”

“இல்லே…. தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் போய்டலாம். அங்கே கொஞ்சம் சீப்பா கிடக்கும். ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணுங்க. போய்ட்டு வந்துடலாம்” என்றார்.

நமக்கு என்ன தான் நேரம் மிகவும் அரிதான விஷயம் என்றாலும், சேகர் போன்றவர்களுக்கு உதவிடவோ அவருடன் நேரத்தை செலவிடவோ நாம் என்றுமே தயங்கியதில்லை. கோவிலுக்கு செல்வதைவிட இது தான் நம்முடைய PRIOIRITY.

DSCN0632

அடுத்தவர் நலனுக்கு அதுவும் சேகர் போன்றவர்களுக்கு உதவிட நாம் செலவிடும் நேரம் தான் நாம் உண்மையாக வாழும் நேரம் என்ற கருத்துடையவன் நாம்.

சொன்னபடி அடுத்த இரண்டு நாளில், சேகர் அவர்களின் வீட்டுக்கு சென்று நம் பைக்கில் அவரை அழைத்துக்கொண்டு தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்றோம்.

தமிழகத்தின் பிரதான வணிக மையம், சென்னை வர்த்தகத்தின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் ரங்கநாதன் தெரு சரியான சாலை வசதி கூட இன்றி, கரடு முரடாக பரிதாபமாக காட்சியளிக்கிறது.

சரவணா ஸ்டோர்ஸ் சென்றவுடன், அவர் பொருட்களை தேர்வு செய்யும் வரை நாம் கடையை சுற்றிப் பார்க்கலாம் என்று நாம் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தோம்.

நண்பர் நாராயணன் நம்முடன் ஒருமுறை வந்திருந்தபோது…

மூன்றாம் தளத்தில் ஒரு அழகான பிள்ளையார் சிலை உண்டு. அதன் அருகில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நம்முடைய  காமிரா நம்முடைய பையில் மாட்டிக்கொண்டபடியால் மொபைலில் தான் புகைப்படங்களை எடுக்க முடிந்தது.

“சேகர் சார்… ஏதாவது நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவங்கள் உண்டா?” என்றோம்.

“சமீபத்துல வீட்டுல கூண்டுல அடைச்சு வெச்சு வளர்த்த கிளியை ஒருத்தர் என்கிட்டே கொண்டு வந்து கொடுத்தார். இதை கொஞ்சம் எப்படியாவது பரக்கவைங்க சார் போதும்” அப்படின்னு சொன்னார்.

நான் கூண்டை வாங்கி வீட்டுல வெச்சேன். ஏற்கனவே ரெக்கை வெட்டப்பட்ட ரெண்டு கிளிகள் இப்போ ஓரளவு சுதந்திரமா நம்ம வீட்டுல இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா பறக்க ஆரம்பிச்சிருக்குங்க.

DSC06763

இந்த கிளியை பொருத்தவரை, அதோட இறைக்கையையே விரிக்க முடியாத அளவிற்கு குறுகலான ஒரு சின்ன கூண்டுல அதை வளர்த்திருப்பாங்க போல. அதுக்கு பறக்குறதுன்னாலே என்னன்னு தெரியலே. இறக்கையேயே விரிக்க மாட்டேங்குது. பாவம்.

நான் தினமும் அதுக்கு பறக்க ட்ரெயினிங் கொடுத்துட்டு வர்றேன். பறக்க ஆரம்பிச்சவுடனே மத்த கிளிகளோட சேர்ந்து  பறந்துபோய்டும்.

“பறக்குறதுக்கு ட்ரெயினிங்கா? அது எப்படி கொடுப்பீங்க?”

“கிளியை கொஞ்சம் மேலே தூக்கி அப்படியே கீழே விட்டோம்னா… அது ரெக்கையை விரிக்க முயற்சி பண்ணும். அப்புறம் இந்த ரெக்கை நமக்கு பறக்குறதுக்கு தான் போலன்னு அதுக்கு தெரிஞ்சிடும். ஆனா இந்த கிளிக்கு பாவம் எதுவுமே தெரியலே. ரெக்கையை நாமளே விரிக்க வெச்சு ட்ரெயினிங் கொடுக்கலாம்னா, ரெக்கையை தொட்டாலே கத்துது”

எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ தெரிகிறதா?
எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ தெரிகிறதா?

அவர் சொல்லும்போது நமக்கு அந்த கிளியை நினைத்து பரிதாபமாக இருந்தது. சுதந்திரமாக பாடித் திரிய வேண்டிய கிளிகளை இப்படி கூண்டில் அடைத்து சித்ரவதை செய்வது எந்த வகையில் நியாயம்? அதை விற்பவர்களுக்குத் தான் அறிவில்லை என்றால் வாங்குப்பவர்களுக்கு வேண்டாமா? ‘பெட் ஷாப்ஸ்’ என்ற பெயரில் நடக்கும் இந்த பறவை சித்ரவதைக் கூடங்களுக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டவேண்டும். (இப்படி பறவைகளை அடைத்து விற்பதற்கு எதிராக இந்த ‘பெட் ஷாப்’களுக்கு எதிராக நம் தளம் சார்பாக பொதுநல வழக்கு தொடர  வழக்கறிஞர் தொழிலை ப்ராக்டீஸ் செய்யும் நண்பர்கள் எவராவது நமக்கு உதவவேண்டும்!)

அடுத்து சேகர் தொடர்ந்தார்…. “அடுத்து ஒரு ரெண்டு வாரம் கழிச்சு அந்த கிளியை என்கிட்டே கொடுத்தவர் வந்தார். என்ன விஷயம்னு கேட்டேன். இல்லே அந்த கிளி பார்க்க ஆரம்பிச்சிருக்கான்னு பார்க்கலாம்னு வந்தேன். ஒரு வேளை பறக்க ஆரம்பிச்சிருந்தா திரும்ப வாங்கிட்டு போகலாம்னு…..”

“எனக்கு வந்ததே கோவம் சுந்தர். “யோவ் உனக்கு ஏதாவது அறிவிருக்கா? இறைக்கையை கூட விரிக்க முடியாதபடி ஒரு கூண்டுல அதை அடிச்சி சித்ரவதை பண்ணிட்டு இப்போ திரும்ப எடுத்துக்கிட்டு போகலாம்னு வந்தாராம்… கிளிஎல்லாம் உன்கிட்டே கொடுக்க முடியாது போ… வேணும்னா அதை எவ்ளோ விலை கொடுத்து வாங்கினியோ அதே அளவு பணம் தர்ரேன். பணத்தை வாங்கிட்டு பேசாம ஓடி போய்டு” என்று விரட்டிவிட்டுவிட்டேன் அந்த ஆளை” என்றார்.

சரவணா ஸ்டோர்ஸில் சேகர் அவர்கள்...
சரவணா ஸ்டோர்ஸில் சேகர் அவர்கள்…

இங்கு கடையில் அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொண்ட பிறகு, ஒரு ஆட்டோவில் சேகர் அவர்களை ஏற்றிவிட்டு, ஆட்டோ கட்டணத்தையும் அவரிடம் கொடுத்து வழியனுப்பினேன்.

IMG_20140627_202045

இரண்டு நாள் கழித்து ஃபோன் செய்தார். “சுந்தர் இன்னைக்கு தினமலர்ல நம்ம பேட்டி வந்திருக்கு பாருங்க!” என்றார்.

“ரொம்ப சந்தோஷம் சார்… நிச்சயம் பார்க்குறேன். நாம் வெப்சைட்லயும் போடுறேன்” என்றோம்.

சொன்னபடி தினமலர் நாளிதழை பார்த்தோம். மனிதர் பொருமித் தள்ளியிருந்தார்.

சேகர் அவர்கள் செய்யும் சேவை மிக மிகப் பெரியது. தினமும் கிளிகளுக்கு உணவிட, காலை இரண்டு மணிநேரமும் மாலை இரண்டு மணிநேரமும் அவர் செலவிடுகிறார். ஒய்வு ஒழிச்சலின்றி. விடுமுறையின்றி. நமக்காவது ஞாயிறு விடுமுறை உண்டு. அவருக்கு அதுவும் கிடையாது. எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவிலும், தொல்லைகளுக்கு நடுவிலும் இந்த சேவையை அவர் செய்து வருகிறார்.

பாடித் திரிய வேண்டிய இந்த கிளியை இப்படி இறைக்கையை விரிக்க கூட வழியின்றி கூண்டில் அடைத்து வளர்ப்பது நியாயமா?
பாடித் திரிய வேண்டிய இந்த கிளியை இப்படி இறைக்கையை விரிக்க கூட வழியின்றி கூண்டில் அடைத்து வளர்ப்பது நியாயமா?

இந்த சமூகத்தை பற்றியோ நாட்டை பற்றியோ இயற்கை குறித்தோ கொஞ்சமும் கவலைப்படாமல், உண்டு, உறங்கி, தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சம்பாதித்து வார இறுதி கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், என்று ஒரு குறுகலான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜென்மங்களுக்கு நடுவே, இப்படியும் கூட சேவை செய்ய முடியும் என்று உணர்த்துபவர் சேகர்.

“அடுத்த மாதம் முதல் கிளிகளுக்கு அரிசி தருவதற்கு பதில் உங்களிடம் பணமாக கொடுத்துவிடுகிறேன் சார். அதை நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு அரிசி, பருப்பு வாங்கினால் கூட சந்தோஷம் தான்!” என்றோம்

“ஏன்?” என்றார்.

“கிளிகளை பத்தி நீங்க கவலைப்படுறீங்க. நான் உங்களை பத்தி கவலைப்படுறேன். உங்கள் தொண்டு எந்த காரணத்தை கொண்டும் நின்றுபோய்விடக்கூடாது. நாம் செய்யும் இந்த சிறு உதவி உங்களுக்கு ஒரு MORAL BOOSTER  ஆக இருக்கக்கூடும். அதனால தான் சார்” என்றோம்.

“சுந்தர்… என் சொத்தை வித்தாவது இந்த கிளிகளை நான் காப்பாற்றுவேன். நீங்க கவலையே படாதீங்க” என்றார்.

“சார் அந்த நிலைமைக்கெல்லாம் நீங்க வரமாட்டீங்க. சீக்கிரம் பாருங்க… எங்கள் மீனாட்சியின் அருளால் இந்த பில்டிங்கே உங்களுக்கு சொந்தமாகப்போகுது!” என்றோம்.

DSCN0663

(அது சரி…. நீங்க எப்போதான் போய் அவரை பார்க்கப்போறீங்க? தினசரி அங்கு படையெடுக்கும் கிளிகளை இரசிக்கப்போறீங்க? நேரமில்லை, தூரம் அது இது என்று சாக்கு சொல்லவேண்டாம். சென்னையின் பிரதான வணிக மையமான எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ அருகில் தான் சேகர் அவர்களின் வீடு அமைந்துள்ளது. கிளிகள் வரும் நேரம் : காலை 6-7.30 மாலை 4.30 – 6.00).

நம்மை சுற்றி சுயநலப் பேர்வழிகளையே நித்தம் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கோவிலுக்கு போவதும் இறைவனை தரிசிப்பதும் மட்டும் புண்ணியமல்ல… சேகர் போன்ற தன்னலமற்ற சேவை செய்பவர்களை சந்திப்பதும் பார்ப்பதும் கூட புண்ணியம் தான். அவருடன் கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள்.

நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க
நல்லார் சொற்கேட்பதும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே!

===============================================================

தினமலரில் வெளியான திரு.சேகர் அவர்களின் பேட்டியில் இருந்து சில துளிகள்…

* கிளிகளுடன் உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்…

கிளிகள், என்னை நண்பனாகவும் பாதுகாவலனாகவும் நினைக்கின்றன. கடந்த ஆண்டு, என் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.அதற்காக, நான் செல்ல வேண்டி இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரரை உணவளிக்க சொன்னேன். காலை, 5:00 மணிக்கு உளவு பார்க்க வந்த கிளிகள், மற்ற கிளிகளிடம் தகவலை பரப்பி விட்டன.அத்தனை கிளிகளும் வட்டமிட்டு, காலை 8:30 மணி வரை என்னை தேடி இருக்கின்றன. மாலையும், அவரையே பார்த்து ஏமாந்த கிளிகள், ஒன்று கூட இறங்கி வந்து உணவருந்தவில்லையாம். இதை, அக்கம்பக்கத்தினர் சொன்னபோது, கண்களில் நீர் வந்து விட்டது எனக்கு. இவ்வளவு பெரிய சென்னையில், என்னை நம்பி இருக்கும் 1,500க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு, நான் நம்பிக்கையாக இருக்கவே நினைக்கிறேன். அதற்காகவே, காலையும் மாலையும், என் பணி நேரத்தில் இருந்து தலா மூன்று மணிநேரத்தை அவற்றுக்காக ஒதுக்குகிறேன். அவை உண்ணும் நேரத்தில், பக்கத்து வீட்டுக்காரர்களையும் மொட்டை மாடிக்கு வரவேண்டாம் என, கேட்டுக் கொண்டுள்ளேன். சாலையின் குறுக்கே, கட்டுக் கம்பிகளை கட்டி, அவை உட்கார வழி செய்திருக்கிறேன். நான், வெளியூர் செல்வதை தவிர்க்கிறேன். என் வருமானத்தில் பெரும்பகுதியை, அவற்றுக்காகவே செலவழிக்கிறேன். இந்த கிளிகளுக்காகவே, 4 ஆண்டுகளாக வீடு மாறவில்லை.

DSC00694
இறக்கை வெட்டப்பட்டு தன்னிடம் கொண்டு வந்து விடப்பட்ட கிளிகளுடன் திரு.சேகர்

* உண்ணும் கிளிகளுக்கு, ஏதும் தொந்தரவு இருக்கிறதா?

சிலர், கிளிகளை, உண்டிகோல் வைத்து அடிக்க வருவர். வேடிக்கை பார்க்க வரும் காதலர்களில் சிலர், தங்கள் இணையை சந்தோஷப்படுத்த கல் எறிந்து, கிளிகளை பறக்க வைக்க முற்படுவர்; சிலர் பெருஞ்சத்தம் எழுப்புவர்.இவற்றால், சந்தேகப்படும் கிளிகள், பறந்து சென்று தொலைவில் உள்ள மரங்கள், கட்டடங்களில் அமர்ந்து, கண்காணிக்கும்.அவற்றுக்கு நம்பிக்கை வர, 20 நிமிடங்கள் ஆகும். அதனால், அவர்களை கண்காணிக்க, நான் சாலையிலேயே நின்று காவல் காப்பேன். அதனால், என் தொழில் பாதிக்கப்படும். ஆயினும், அதை விரும்பியே செய்கிறேன். வானத்தில், கழுகு வட்டமிட்டால், கிளிகள் கீழேயே இறங்காது. ஆங்காங்கே அமர்ந்து விட்டு, பாதுகாப்பாக திரும்பி விடும்.

*கிளிகளை ரசித்தது?

கிளிகளின் கீச் கீச் ஒலியே… என்னை தேடுவதாக தோன்றும். கிளிகள், மனிதனை போலவே பெரும்பாலும் ஒரே ஜோடியுடன்தான் வாழுமாம்.ஆண் கிளிகள், வெகுவாக சேட்டை செய்யும். ஒற்றை கண்ணால் ஜாடை செய்யும்; ஒற்றை காலால் கம்பியை கவ்வி கொண்டு, தலைகீழாக தொங்கி வேடிக்கை காட்டும். தலைக்கு மேல் பறந்து பறந்து வட்டமடிக்கும்; சிறகை திடீரென விரித்து, சிலிர்த்து கொள்ளும்; மூக்கோடு மூக்கை உரசி முத்தமிடும்; மெதுவாக காதல் மொழி பேசி பெண் கிளியை கவரும். இன்னும் என்னென்னவோ செய்யும். குறிப்பாக கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இவற்றை ரசித்தால், மனதுக்கும். உடலுக்கும் நல்லதாம்.

* எதிர்கால ஆசை?

கிளிகளை விட்டுப் பிரிய மனமில்லை. ஆயினும், வாடகை வீடு நிரந்தரமில்லையே. நான் செல்லுமிடத்தை, கிளிகளுக்கு எப்படி சொல்வது? அதை, நினைத்தால் தூக்கம் வருவதில்லை. நான், 50,000 ரூபாய் வரை செலவழித்து, ஒவ்வொரு முறையும் கேமரா கண்காட்சி வைக்கிறேன். சமீப காலமாக அவற்றை நடத்த முடியவில்லை. என் சேகரிப்புகளை காண வெளிநாட்டு, உள்நாட்டு மாணவர்கள் நிறைய வருகின்றனர். அவற்றை நிரந்தர கண்காட்சியாக மாற்ற, அரசு உதவி செய்தால், தமிழகத்திற்கு பெருமை கிடைக்கும். ஒருவேளை, அது நிறைவேறாமல் போனால், என் 40 ஆண்டு கேமரா சேகரிப்புகளை வெளிநாட்டு, அருங்காட்சியகங்களுக்கு விற்றால், எனக்கு பல கோடிகள் கிடைக்கும்.ஆனால், அரிய பொருட்களை கொண்டுள்ள பெருமை, அவர்களின் நாட்டுக்கு போய் சேர்ந்து விடும்.

===============================================================

Also check :

ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

===============================================================

[END]

 

9 thoughts on “ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

  1. பணம் பணம் என்று நித்தம் பேராசையுடன் அலையும் இன்றைய பரபரப்பான உலகத்தில் இப்படியும் ஒருவர். சேகர் அவர்களின் தன்னலமற்ற செயல்களுக்கும் அவரது பொறுமைக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக கோடி கோடியாக பணம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் அரிய வகை கேமராக்களை வெளிநாட்டுக்கு விற்காத இவரது தேசப்பற்றுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு. கிளிப்பிள்ளைகளை பேணிகாக்கும் இவருக்கு எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. அதனால்தான் கிளிகள் இவரைத்தேடி வருகின்றன. நல்லதே நடக்கும்.

    1. கண்டிப்பாக எங்கள் அன்னை மதுரை மீனாட்சி துணை நிற்பாள்

  2. கிளிகளை பார்ப்பதே அபூர்வமாகிவிட்ட ஒரு காலத்தில் சென்னை போன்ற நகரத்தில் அதுவும் பரபரப்பான ஒரு இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகள் வந்து செல்கின்ற என்றால் அது சாதாரண நிகழ்வு அல்ல. பேரதிசயம்.

    தொண்டு செய்வதைவிட தொண்டு செய்பவர்களுக்கு உதவி செய்வது மிகப் பெரிய தொண்டு என்பது உங்கள் செயலில் இருந்து புரிகிறது.

    பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் இறைவனுக்கு மிகவும் பிடித்தவை.

    உங்கள் தொண்டில் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம்.

    சேகர் அவர்களின் பிரச்னைகள் யாவும் அந்த மீனாட்சியின் அருளால் சீக்கிரம் தீரவேண்டும். அவர் தொண்டு சிறக்கவேண்டும்.

    நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர், சேலம்

  3. தான் செய்யும் சிறு உதவிக்கு கூட பிரதிபலன் எதிர்பார்க்கும் இந்த அவசர உலகில் தன்னலம் கருதாது, பிரதிபலன் எதிர்பாராது இவர் செய்யும் இந்த சேவை என்றும் தொடர முதலில் இறைவனை பிராத்திப்போம்.

    இவருக்கு 1500 குழந்தைகள் என்று தான் சொல்ல வேண்டும்.
    தன் குழந்தையை போல இவர் கிளிகளை நேசிக்கிறார்.
    இந்த அன்புக்கு நமது வணக்கங்கள்.

    இவர் தனது வாழ் நாளில் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்வோம்.
    இவரது துன்பங்கள் யாவும் சூரியனைக்கண்ட பனி போல கூடியவிரைவில் மறைந்து போக வேண்டிகொள்வோம்.

    நம்மால் முடிந்தால் தினமும் சிறு எறும்புகளுக்காவது உணவளிப்போம்(அரிசி+நாட்டு சர்க்கரை).

  4. திரு சேகர் அவர்கள் கிளிகளை தாயுமானவராக இருந்து பார்த்துகொlள்கிறார். அவர் நினைத்தது நிறைவேற இறைவன் அருள் புரிய வேண்டும். அவரது சேவை உள்ளம் அளப்பர்கரியது. இந்த காலத்தில் நம் சொந்த வேலையை கவனிக்கவே நேரம் போதவில்லை. அவர் ஆயிரக்கணக்கான கிளிகளை பாது காப்பதை பார்க்கும் பொழுது உள்ளம் சிலிர்கிறது ..

    தங்கள் திரு சேகர் அவர்களுக்கு கிளிகளுக்க வேண்டிய பிளாஸ்டிக் items வாங்கி கொடுத்தது அறிய மிக்க மகிழ்ச்சி.

    //பெட் ஷாப்ஸ்’ என்ற பெயரில் நடக்கும் இந்த பறவை சித்ரவதைக் கூடங்களுக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டவேண்டும். //

    இன்றைய தின தந்தி நாளிதழில் கிளிகள் போன்ற பறவைகளை அடைத்து விற்பதற்கு எழும்பூர் கோர்ட் தீர்ப்பு ஒன்று அளித்திருக்கிறது,

    பச்சை கிளிகளை வீடுகளிலோ கடைகளிலோ , வியபாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது என்று வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கூறியிருக்கிறது. இதன்படி மெரினா கடற்கரயில் சோதனை செய்து அன்கு ஜோசியதிற்கு பயன் படுத்திய கிளிகளை பரிமுதல் செய்தனர். அந்த கிளிகள் எஸ் பி சி எ அலுவலகத்தில் வைகாட்டு இருந்தது. நீதி மன்ற விசாரணையின் பொது நீதிபதி பச்சை கிளிகளை வளர்ப்பது சட்டப்படி குற்றம் எனவே வண்டலூர் பூங்காவில் ஒப்டைக்க வேண்டும் என்று எழும்பூர் நீதி மன்றம் தீர்ப்பு கூறி இருக்கிறது.

    நன்றி
    உமா

  5. சுந்தர் சார் காலை வணக்கம்

    தங்கள் அனைத்து பதிவு மிகவும் அருமை

    நன்றி

  6. சார் என்னக்கு சேகர் சார் நம்பர் கொஞ்சம் கொடுங்க சார் ப்ளீஸ் நான் அவர் மாதிரி நல்ல உள்ளங்களை பார்த்து அவருக்கு என்னால் முடிந்த உதவுகிறான்

    ரொம்ப நன்றி உங்களுக்கும்
    கார்த்திகேயன்

  7. இன்று பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் ஹாபி-லாபி எனும் நிகழ்ச்சியில் சேகர் அவர்களின் பேட்டியைப் பார்த்தேன். ஒரு சேர இத்தனை கிளிகளின் அணிவகுப்பைப் பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. அன்னை மீனாட்சியின் அருளால் அவரின் தேவைகள் நிறைவேறட்டும். நன்றி.

Leave a Reply to பிரேமலதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *