Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > கொடுங்கள்… பெறுவீர்கள்! – MONDAY MORNING SPL 50

கொடுங்கள்… பெறுவீர்கள்! – MONDAY MORNING SPL 50

print
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”

hand-water-pump copy

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.

1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================
[END]

12 thoughts on “கொடுங்கள்… பெறுவீர்கள்! – MONDAY MORNING SPL 50

  1. very nice.
    Every action has an equal and opposite reaction.
    நாம் எண்ணும் எண்ணம்,சொல்லும் சொல், செய்யும் செயல் அனைத்தும் நமக்கே மீண்டும் பிரதிபலிக்கும்.
    “சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்”.
    So be good. Do good & be happy.

  2. மிக அற்புதமான நிதர்சனமான உண்மை.

    மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.

    என்ற திருக்குறளுக்கு ஏற்ப பிறர்க்காகவும் எல்லா நிலைகளும் வாழ்பவர்கள் எந்நாளும் தன் உயிர் மேல் கவலை கொள்ள மாட்டார்கள்.

    நன்றி ஜி

    ப.சங்கரநாராயணன்

  3. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
    இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
    வாசகம் எளிமையாக இருப்பினும் நடைமுறையில் இது சாத்தியமா என்றால் ஆம் சாத்தியமே என்று ஆணித்தரமாக உள்ளம் உறுதி செய்யும்
    ஆயினும் அதற்கான முயற்சி என்று வரும்போது தான் ஒவ்வொருவரும் சற்றே பின்தங்கி போகிறோம்
    அதைக்காட்டிலும் நம்மை அதிகம் பலவீனப்படுத்துவது சுயநலம் என்னும் கொடிய நோய்
    மேற்கூறிய கதையில் சுநலம் கருதாது பிறர்க்கு உபயோகப்படும் வகையில் தண்ணீரை நிரப்பியது மட்டுமல்லாமல் குறிப்பையும் எழுதி வைத்து சென்ற அந்த புண்ணியவான் இறைவனுக்கு நிகரானவன்
    வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த எத்துனை எளிமையான உதவியாக இருந்தாலும் சரி அதனை முழு மனதோடு செய்வோமேயானால் அதில் கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவுமில்லை
    நாம் நம் குடும்பத்துக்கு செய்யும் உதவி – முடிந்தவரை பிறர்மனம் புண்படாமல் எல்லோரையும் அரவணைத்து செல்வதும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுமே
    நம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யமுடியாவிட்டாலும் ஒரு மரத்தையாவது நட்டுசெல்வதே
    முயல்வோம்
    முடிந்ததை செய்வோம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன் !!!

  4. சுந்தர் சார்,

    நல்ல பதிவு சிறந்த கதை சுருக்கம்.

    அருண்

  5. உண்மையான பொய். கொடுப்பவர்களை ஏமாளி ஆக்கும் இந்த உலகம், இதுதான் அனுபவபூர்வமான உண்மை, மனம் வலிக்கவே எழுதுகிறேன்.

  6. நல்ல பதிவு. அருமையான கருத்து
    எப்போதும் போல ஒரு நல்ல தகவலை பரிமாறிக்கொண்ட உணர்வு.
    ஒன்றை கொடுத்துதான் ஒன்றை பெற முடியும்.
    ஆனால் பெரும்பான்மையனோர் தாம் மட்டுமே நல்லதை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார்களே அன்றி மற்றவருக்கு உதவும் எண்ணம் இருக்காது.
    “நாம் நம் குடும்பத்துக்கு செய்யும் உதவி – முடிந்தவரை பிறர்மனம் புண்படாமல் எல்லோரையும் அரவணைத்து செல்வதும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுமே ” மிகவும் வலிமையான வார்த்தைகள். நடைமுறை படுத்தி பார்க்கும் போதுதான் அதன் சுமை தெரியும். அந்த சுமையும் காலபோக்கில் சுகமான சுமைகளாக உணரதொடங்கிவிடுவோம்.
    படிப்பினை என்று போட்டுள்ள 2 பாராவும் நம்மால் செய்ய முடிந்தவை தான். செல்வத்தை கொடுக்க முடியாவிட்டாலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நம்மால் கொடுக்கமுடியுமே.
    நன்றி

  7. எளிய ஒரு உதாரணத்தின் மூலம் மிகப் பெரிய உண்மை விளக்கப்பட்டுள்ளது.

    அடி பம்பு இல்லையென்றாலும் இதே போல வேறு விதமான சூழ்நிலைகள் நமது வாழ்வில் வருவதுண்டு. அப்போது நாம் என்ன செய்யவேண்டும் என்று இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    “நல்லது செய்து கெட்டவர் இல்லை. தீயது செய்து வாழ்ந்தவர் இல்லை” என்பது தான் உண்மை.

    இந்த பதிவு உணர்த்தும் நீதியும் அது தான்.

    நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர், சேலம் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *