Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

print
வக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும் மோன நிலையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு செய்வது எந்த வகையில் சரி? “அந்த குரு தான் இந்த குரு!” என்று சொன்னது எந்த மகானுபாவர் என்று தெரியவில்லை. கோவில்களில் வியாழக்கிழமைகளில் குரு பரிகாரத்துக்காக கூடும் கூட்டத்தை மனதில் கொண்டும் அதன் மூலம் பல்வேறு விதங்களில் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டும், இந்த தவறு அனுமதிக்கப்படுகிறது. பல கோவில்களில் இதை வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.

Guru Bhagawan

நமக்கும் இந்த அறியாமை இருந்ததுண்டு. சொற்பொழிவு ஒன்றில் ஒரு பெரியவர் இது குறித்து விளக்கியபோது தான் உண்மையை உணர்ந்துகொண்டோம்.

நம் வாசகர்களுக்கு இந்த அறியாமை இருக்கக்கூடாது என்று கருதி, ஆதாரப்பூர்வமாக ஒரு பதிவு வெளியிட நீண்ட நாட்களாகவே முயன்றுவந்தோம். அண்மையில் இது குறித்த ஒரு அற்புதமான கட்டுரையை தினகரன் நாளிதழில் படிக்க நேர்ந்தது. இதோ உங்கள் கவனத்திற்கு அந்த கட்டுரை. படியுங்கள். குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.

========================================================

குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது?

நவக்கிரக குருவையா, ஞான குருவையா?

சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99  சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின்  எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரிதானா?இவர்கள் இருவருக்கும் உள்ள  வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.  அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில்  ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படை யிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற  ஆடையை  உடுத்தியிருப்பவர். (‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று  பொருள்.) உண்மை  நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது,  தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை.  வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

DSC03636

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே   தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று  போற்றப்படுகிறார்.  அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன்  என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.  ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன்  என்றும், ப்ரத்யதி  தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகார த்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய  அவசியம் என்ன?  இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த  ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ
குருவே நம:

– இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு  பகவானுக்கு  உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். இறைவன் இட்ட பணியைச்  செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச்  செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த  காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந் தால் திருமணம்  நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.  திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம்  கிட்டவும், உயர் கல்வியில் இடம்  பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்ய  விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,  இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும்  வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும்,  கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.

கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து  வடக்கு முகமாய்  நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை  வழிபடலாம். வியாழக்கிழமைதான்  என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்தி லும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு  முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று  மனம் தெளிவடையும். இந்த குரு பெயர்ச்சி நாளன்று ஞான குரு  வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம். அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான  பலனை அடைவோம்.

(நன்றி : திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா | தினகரன்)

========================================================

அடுத்த பதிவில்… குரு பெயர்ச்சி பலன்கள் & பரிகாரங்கள் – 2014

[END]

14 thoughts on “குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

  1. எனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் இருந்து வந்தது .ஆனால் தாங்களின் இந்த பதிவின் மூலம் ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என மிக சரியாக புரிந்து கொண்டோம் என நினைக்கின்றேன்.
    மிக்க நன்றி ..

  2. வியாழ குருவிற்கும் ஞான குரு தக்ஷிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்., நாங்களே நிறைய முறை தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலையும் மஞ்சள் வஸ்திரமும் சாற்றி வழிபாடு செய்திருக்கிறோம் எங்கள் அறியாமையால் . Actually நாளை மஞ்சள் வஸ்த்ரம் தக்ஷிணாமூர்த்திக்கு சாற்ற வேண்டும் என நினைத்திருந்தோம். இந்த பதிவை படித்ததன் மூலம் வியாழ குருவை நாளை வழிபடுவோம்

    இந்த பதிவை படித்ததன் மூலம் தெளிவு கிடைத்தது. தக்க நேரத்தில் உரிய பதிவை தந்தமைக்கு ரைட்மந்த்ராவுக்கு நன்றி. தங்கள் இறை பணி மற்றும் ஆன்மிக பணி தொய்வில்லாமல் மேலும் மேலும் வளர குரு பகவான் அருள் புரிய வேண்டும்.

    நன்றி
    உமா

  3. பலருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பதிவு.
    குருபெயர்ச்சி செய்பவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
    இந்த பதிவு மூலம் எனக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகம் தீர்ந்தது.

  4. எனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் இருந்து வந்தது .ஆனால் தாங்களின் இந்த பதிவின் மூலம் ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என மிக சரியாக புரிந்து கொண்டோம் என நினைக்கின்றேன்.
    மிக்க நன்றி .

  5. இந்த பதிவின் மூலம் ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என மிக சரியாக புரிந்து கொண்டோம். மிக்க நன்றி.

  6. குருவை பூஜித்தாலும், தக்ஷிணாமூர்த்தியை பூஜித்தாலும் தீங்கேதும் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. பெயரால் இருவரும் வேறானாலும் மூல தெய்வம் ஒன்றுதான். அதனால் இவ்விருவரில் யாரை வழிபட்டாலும் யாரும் கவலைப்பட தேவை இல்லை. மனமார எவரை வணங்கினாலும் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
    தயவுசெய்து தேவதை பெயராலும் வழிபாடாலும் பிரிக்காதீர்கள்.

    1. தயவு செய்து மீண்டும் ஒரு முறை கட்டுரையை படியுங்கள். தக்ஷிணாமூர்த்தியை வணங்க வேண்டாம் என்று நானோ கட்டுரை ஆசிரியரோ எங்கும் கூறவில்லை. நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானை வணங்குவதாக கருதிக்கொண்டு, அவருக்கு பரிகாரம் செய்வதாக எண்ணிக்கொண்டு தக்ஷிணாமூர்த்தியை வழிபடவேண்டாம் என்று தான் கூறுகிறோம்.

      மேலும் இந்த பதிவு மக்களுக்கு அவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ள ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை விளக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. அவ்வளவே. ‘இன்னதை இன்ன தெய்வத்துக்கு செய்கிறோம்’ என்று மக்கள் விபரமறிந்து செய்யவேண்டும் என்பதே நம் குறிக்கோள்.

      தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
      சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் –சூழும்
      திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
      இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

      என்று திருமலை சென்ற போது, சிவபெருமானையும் இங்கே பார்க்கிறேன் என்று பாடிய பேயாழ்வாரின் பக்குவம் திருமலை செல்லும் அனைவருக்கும் இருக்கும் என்று கூற முடியாது.

      – சுந்தர்

      1. சுந்தர் ஜி,

        நான் நீங்கள் கூறும் விஷயத்தை தவறு என்று சொல்லவில்லை.
        ஆனால் பரிகாரம் என்ற பெயரில் எந்த தெய்வத்தை பூஜித்தாலும் எண்ணிய பலன் கிட்டிடும் என்பதுதான் என்னுடைய செய்தி.
        தவறுதலாக வேறு தெய்வத்துக்கு பரிகாரம் செய்து விட்டோம் என்று மக்கள் வருத்தபடக்கூடாது என்பதற்காகவே நான் அவ்வாறு கூறினேன்.
        எனினும் மனதார மனமுருகி எந்த தெய்வத்தை பூஜித்தாலும் தகுதி உள்ளவர்களுக்கு தெய்வ அருள் கிட்டிடும்.

        நான் கூறியதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.

  7. தெளிவு பெற தக்கவகையில் சிறப்பான பதிவு!. தட்சினாமூர்த்தி சிவ பெருமானின் அம்சம்…………………இவர் தென் திசையைப் பார்த்திருப்பதாலே சிவபெருமானைப் போற்றி முழங்கப்படும் மகுடத்தில், தென்னாடுடைய சிவனே போற்றி!, எனும் முழக்கம் முதலில் இடம் பெற்றுள்ளது…………………….நவகிரக குரு ப்ரகஸ்பதியாவார். ஆதி முதல்வருக்கும், துணை தெய்வங்களுக்குமிடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்வோம்!.

    1. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர், தேன்குடித் திட்டை வாசிஷ்டேஸ்வரர், சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம்.

      ஆலங்குடியில் உற்சவர் தட்சிணாமூர்த்தி கொஞ்சம் விசேஷம். தட்சிணாமூர்த்தி இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். எனவே இந்த குருவையே நவக்கிரக குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள். அது நாளடைவில் எல்லா இடத்திலும் பரவிவிட்டது. மற்றபடி குருவுக்கு பரிகார தெய்வமாக விளங்குவது ஆபத்சகாயேஸ்வரர் தான்.

  8. சுந்தர் அண்ணா,
    தெரியாத உண்மையான விபரத்தை தெளிவு செய்தமைக்கு நன்றி.

  9. சுந்தர் சார் அவர்களுக்கு,

    இன்று தான் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. நவகிரக குருவுக்கும் உள்ள வேறுபாட்டை பற்றிய இப் பதிவானது என்னை போன்ற அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மிக்க நன்றி.

    S Gopinath

Leave a Reply to N.CHANDRASEKARAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *