Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஆங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்!

ஆங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்!

print
ப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்றே தெரியாத அளவுக்கு கடும் மின்வெட்டில் நாம் திணறி வருகிறபடியால் வீட்டில் கணினியில் அமர்ந்து பதிவு எழுதவே முடிவதில்லை. எதற்கும் இருக்கட்டும், இது போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் சில வாரங்களுக்கு முன்பு தயார் செய்த ஒரு பதிவை தற்போது அளிக்கிறோம். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

மீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும்போது  சொன்னார், “என் மகனின் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக அலையோ அலை என்று அலைந்துகொண்டிருக்கிறேன். எம்.பி.பி.எஸ் சீட் கூட வாங்கிவிடலாம் போலிருக்கிறது இந்த எல்.கே.ஜி. சீட் வாங்க முடியவில்லை. தவிர டொனேஷன் ரூ.25,000/- கேட்கிறார்கள். ஃபீஸ் வேறு ஒரு வருடத்திற்கு ரூ.14,000/-. பேசாமல் எட்டாம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படிக்க வைத்துவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஒரு ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்த்தால் இந்த எட்டு வருடம் அந்த குழந்தைக்கு நான் கட்டவேண்டிய ஃபீஸை வங்கியில் சேமித்து வந்தாலே எட்டு வருட முடிவில் பல லட்சங்கள் என் கையில் இருக்கும். அதை அவனது மேற்படிப்புக்கு வைத்துக்கொள்வேன். நாளை எவரிடமும் கடன் கேட்கும் நிலைமை எனக்கு வராது பாருங்கள்!” என்றார்.

School Educationஎத்தனை உண்மை, எத்தனை சத்தியமான வார்த்தை. எத்தனையோ சிரமங்களுக்கு இடையே இன்று தங்கள் பிள்ளைகளை ஆங்கில மீடியம் வகுப்பில் படிக்க வைக்க, பெற்றோர் பாடுபடுகின்றனர். கடன்படுகின்றனர்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கப்போவதென்னவோ 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களும், +2 தேர்வு மதிப்பெண்களும் தான் எனும்போது, எதற்கு இப்போதே கடன்படுவானேன்?

எட்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியம் படித்துவிட்டு அதற்கு பிறகு ஆங்கில மீடியம் படிக்க சிரமமாக இருக்கும் என்பது பலர் கருத்து. நம்மைப் பொருத்தவரை அது அறியாமையே. ஒரு மாணவன் தாய்மொழிக்கல்வியில் சிறந்து விளங்கினாலே மற்ற அனைத்திலும் சிறந்து விளங்குவான். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. தாய்மொழியில் சிறந்து விளங்கி ஆங்கிலத்திலும் பட்டையை கிளப்பும் பல மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களில் (ஐ.ஏ.எஸ்.)  சுமார் 25 க்கும் மேற்பட்டோர் தங்கள் தாய்மொழியில் தான் உயர்கல்வி படித்தவர்கள் என்பது தெரியுமா? இவர்கள் யாரும் ஆங்கில மீடியத்தில் படிக்கவில்லை.

அதே போல இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தாய்மொழிவழிக் கல்வி படித்தவர்களே என்பது தெரியுமா?

இப்படி எத்தனையோ சொல்லலாம்.

பாலம் திரு.கலியாணசுந்தரம் ஐயா அவர்களும் இதே கருத்தை தான் கொண்டிருக்கிறார். எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை தனது அமைப்பின் மூலம் வழங்கி வரும் அவர், தாய்மொழிக்கல்வியை கற்பவர்களுக்கு மட்டுமே இத்தகு கல்வி உதவி வழங்குகிறார். காரணம், தாய்மொழியில் படித்தாலே ஒரு மாணவன் சிறந்துவிளங்க முடியும் எனும்போது ஆங்கில மீடியத்தில் எதற்கு படிக்கவைத்து சிரமப்படவேண்டும் என்பதே அவர் கருத்தாக உள்ளது. அவருடைய சொந்த அண்ணன் பிள்ளைகள் யாவரும் தமிழ் வழிக்கல்வி படித்தவர்களே. ஆனால் இன்று ஒவ்வொருவரும் பன்னாட்டு நிறுவனங்களில் மாதம் குறைந்து  ரூ. 2,50,000/- க்கும் மேல் ஊதியம் பெறுகிறார்கள்.

தகுதிக்கு மீறி கடன்பட்டு பிள்ளைகளை படிக்கவைத்து கஷ்டப்படுவதற்கு பதில், நண்பர் சொன்னது போல, தாய்மொழியில் படிக்கவைத்து தனியார் பள்ளிகளில் நாம் கொட்டும் பணத்தை வங்கியில் சேமித்து மிச்சம் பிடிக்கலாம். அந்த பணத்தை கொண்டு உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்கள் விரும்பிய மேற்படிப்பை நீங்ககள் கடன் படாமல் படிக்க வைக்கலாம்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் கற்றுகொள்வதைவிடவா பள்ளியில் அதிகம் கற்றுகொள்ளப்போகிறது? ஒரு தாயை விட சிறந்த ஆசிரியர் இந்த உலகில்  இருக்க முடியுமா? பள்ளியில் கல்வியை தான் கற்றுத் தருவார்கள். ஆனால், பெற்றோர் நினைத்தால் வாழும் கலையையே கற்றுத் தரலாம்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் கற்றுகொள்வதைவிடவா பள்ளியில் அதிகம் கற்றுகொள்ளப்போகிறது? ஒரு தாயை விட சிறந்த ஆசிரியர் இந்த உலகில்  இருக்க முடியுமா? பள்ளியில் கல்வியை தான் கற்றுத் தருவார்கள். ஆனால், பெற்றோர் நினைத்தால் வாழும் கலையையே கற்றுத் தரலாம்.

ஆங்கில மீடியம் வேண்டாம் என்பது நமது வாதமல்ல. தகுதியும் வருவாயும் இருப்பவர்கள் தாரளமாக தாங்கள் விரும்பும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளாய் சேர்க்கட்டும். ஆனால் ஆங்கில மோகம் கொண்டு தங்கள் வருவாய்க்கு மீறி பிள்ளைகளை படிக்க வைத்து அதனால் கடனில் மூழ்கி கஷ்டப்படும் பெற்றோர்களை மனதில் கொண்டே இதை சொல்கிறோம்.

நாம் சொன்னால் இதை கேட்பதற்கு சற்று தயக்கம் இருக்கக்கூடும். ஆனால், கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி சமூகத்தில் இன்று தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கும் மதுரா ட்ராவல்ஸ் திரு.வி.கே.டி. பாலன் போன்றோர்கள் சொன்னால்?

திரு.வி.கே.டி. பாலன் அவர்கள் தனது ‘சொல்லத் துடிக்குது மனசு’ நூலில் தாய்மொழிக் கல்வி குறித்தும் தாய்மொழியின் அவசியம் குறித்தும் எழுதியிருக்கும் ஒரு அற்புதமான கட்டுரையை இங்கு தருகிறோம்.
=============================================================

தாய்மொழி சாகுமானால்…

தாய்மொழி என்பது தாய்வழி மொழி. ஒரு தாய், எப்படிப் பேசுகிறாளோ அதுதான் குழந்தையின் தாய்மொழி. அவள் குழந்தைக்குப் பாலூட்டி, சோறூட்டி வளர்க்கிறாளோ, அதேபோலத்தான் தனது மொழியையும் சொல்லிக் கொடுத்துக் குழந்தைகளை வளர்ப்பாள். அந்த வகையில், குழந்தையின் உணர்ச்சி களோடும் குழந்தையின் சிந்தனை களோடும் சேர்ந்து வளர்வதுதான் தாய்மொழி. அந்தத் தாய்மொழியைப் பின் தள்ளிவிட்டு, வேற்று மொழியில் கல்வி கற்பவர்களுக்கு என்ன நடக்கும்? என்ன நடந்திருக்கிறது?

http://rightmantra.com/wp-content/uploads/2013/11/SollaThudikkudhu-Manasu-VKT-Balan.jpgதாய்மொழியில் கற்க முடியாத ஒரு சூழ்நிலையை அரசுகளும், சமூகமும் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைக் கூச்சமின்றிச் சொல்லலாம். தாய்மொழி யைப் புறக்கணித்துவிட்டுப் பிறமொழியில் கற்பதைவிடவுமான கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது. 25% தமிழர்கள், அதாவது ஒன்றரைக் கோடித் தமிழர்கள் எழுதப்படிக்கத் தெரியாத வர்கள், கைநாட்டுகள். இது சோகம்தான் என்றாலும், அதிலும் ஒரு மகிழ்ச்சி இருக் கிறது. எழுதப்படிக்கத் தெரியா விட்டாலும் பரவாயில்லை வாழ்வியல் மொழியாக, உணர்ச்சிகளைச் சொல்லும் மொழியாக, கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் மொழியாகத் தாய்மொழியை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதி லேயே அவர்கள் தங்களை இறுக்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில் தாய் மொழியோடு உண்மையாக உறவாடு பவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத அந்த 25% தமிழர்கள்தாம்.

அதே நேரத்தில் வேற்று மொழிக் கல்வி கற்றவர்களின் நிலை என்ன? இன்று குடும்ப நீதிமன்றங்களில் அதிகமான விவாகரத்தைப் பார்க்க முடிகிறது. என் நண்பரான குடும்ப நீதிமன்ற நடுவர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது “அய்யா .. இந்த விவாகரத்து வழக்குகளுக்கு உண்மையான காரணம் என்ன ? வரதட்சணையா ? வேறு காரணங்கள் இருக்கிறதா ?” என்று கேட்டேன். அவருடைய அனுபவ ஆராய்ச்சியின் மூலமாக வெளிப்பட்ட பதில், என்னைக் கொஞ்சம் அதிர்ச்சியடைய வைத்தது. ‘விவாகரத்துக்கு வரதட்சனை என்பது மிகவும் குறைவான காரணமே ! ஆண்மைக் குறைபாடு என்பதோ, பெண்மைக் குறைபாடு என்பதொகூட மிகக் குறைவான விகிதாச்சாரம்தான். ஆனால், அதிகமான விவாகரத்துக்களுக்கான காரணம், தம்பதியருக்கிடையில் தாய்மொழி உரையாடல்கள் இல்லாமல் போனதுதான்.

 நமது பாரதி விழாவுக்கு திரு.வி.கே.டி. பாலன் அவர்கள் வருகை தந்தபோது...

நமது பாரதி விழாவுக்கு திரு.வி.கே.டி. பாலன் அவர்கள் வருகை தந்தபோது…

அவர்கள் கற்ற வேற்றுமொழியால் அடிப்படையில் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் வேற்று மொழியில் உரையாடுகிறார்கள். சண்டையிடுவதுகூட ஆங்கிலத்தில்தான். “வேர் ஆர் யூ கோயிங் ?” என்று இவன் கேட்க, ‘தட இஸ் மை ப்ரைவசி. டோன்ட் ஆஸ்க்” என்று இவள் சொல்ல அத்துடன் அவர்கள் உரையாடல் முடிந்துவிடும். அல்ல..அல்ல .. முறிந்துவிடும். அவள் தான் நினைத்த இடத்திற்குச் சென்றுவிட, இவன் பேயறைந்தவன்போல உட்கார்ந்துவிடுவான். இருவருக்குமிடையிலான இது போன்ற மோதல்களுக்கும் விவாகரத்துகளுக்கும் சிறு காரணங்கள்தான் இருக்கும். தாய்மொழியில் உளப்பூர்வமாக உணர்ச்சிப்பூர்வமாக உரையாடாமல் வேற்றுமொழியில் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை நிறுத்திக் கொண்டுவிடுவதால் ஒருவரது உணர்வுகளை இன்னொருவர் புரிந்துகொள்ளாமல்போய் , தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி, விவாகரத்துவரை கொண்டு சென்றுவிடுகிறது:” என்று குடும்ப நீதிமன்ற நடுவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைன்தேன். அதே நேரத்தில், தாய்மொழி வாயிலாகக் குடும்ப உறவுகள் வளர்கின்றன என்பதையறிந்து மகிழ்ந்தேன்.

கொஞ்சம் வெளிநாட்டுச் செய்திகளை எட்டிப்பார்ப்போம். உலகில் புலம் பெயர்ந்த இனங்களில் தமிழினமும் ஒன்றாக இருக்கிறது. தமிழர்கள் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சட்டப்படியான அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள். அப்படி வாழ்வதற்கு எந்தெந்த நாடுகளுக்கு அகதிகளாக வருகிறார்களோ அந்த நாட்டின் தாய் மொழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் தாய்மொழியைக் கற்றுக் கொண்டால்தான் அந்த நாட்டில் உள்ள அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். ஏனென்றால் எல்லா நாடுகளிலும் நிகழும் சட்ட விரோதச் சமூக விரோதச் செயல்களில் அந்நாட்டினரைவிட, வேற்று மொழியைச் சார்ந்த பிற நாட்டவர்கள் அதிகளவில் குற்றங்களைச் செய்கிறார்கள் என்பதும் கூடிக்கொண்டே போகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் அந்நாடுகள் ஒரு தீர்வு காண முனைந்தன. இது குறித்து ஆய்வு செய்தார்கள். அதில் ஊர் உண்மையைக் கண்டறிந்தார்கள். யார் தனது தாயை விட்டு, தாய்நாட்டை விட்டுப்பிரிந்து, தாய் மொழியைப் பேச முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்களோ அவர்களில் சராசரியாக மூன்றில் இரண்டு பேர் மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. மன நோயாளியின் மனப்பான்மைக்குத் தள்ளப்படும் அவர்கள் குற்றங்களை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டே இருப்பார்கள் என்றதும், இதற்கான தீர்வை ஆராய்ந் தார்கள். இப்படிப் பட்டவர்களின் தாயை இவர்கள் இருக்கும் நாட்டுக்கே வரச் செய்வதற்கு ஏற்றவாறு கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றில் எளிமையான அணுகுமுறை யினைக் கடைப் பிடிப்பது என்பது ஓர் அம்சம். .

தாயை அழைத்து வந்துவிடலாம். தாய்நாட்டைக் கொண்டு வரமுடியாது. ஆனால், தாய் மொழியைப் பேசக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுத்தால் அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது இன்னொரு அம்சம். எனவே அவரவர் தாய்மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை அந்தந்த நாடே தம் சொந்தச் செலவில் செய்து தர முன்வந்துள்ளது. தன் நாட்டு மொழியுடன், அவரவர் தாய் மொழிக்கும் உரிய மதிப்பு அளிக்கப்படுகிறது.

http://rightmantra.com/wp-content/uploads/2013/12/DSC_63653.jpg

இது அயல்நாட்டில்… உள்நாட்டுக்கு மீண்டும் வருவோம். எத்தனையோ பேர் அமெரிக்கா சென்று, கணினித் துறையில் பணியாற்றி கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே அவர்களது பிரம்மாண்டமான வீட்டில் கிழவனோ, கிழவியோ தனித்து வாழ்ந்துகொண்டு, பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாத நிலைமையில் இருக்கிறார்கள். எத்தனையோ முதியவர்கள் முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகியிருக்கிறார்கள். தாய் மொழி கற்ற பிள்ளைகளின் பெற்றோரைவிட, தாய்மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள்தாம் அதிகளவில் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வேளையில் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். மாற்று மொழிகளைக் கேவலமாகப் பேசுவதை என்னால் ஆதரிக்க முடியாது. அத்தகைய செயல்கள் நம் தாய் மொழியை வளர்ப்பதற்கு உதவாது. அந்தந்த மொழியைப் பேசும் இனத்தாருக்கு ஒரு கௌரவம் இருக்கிறது. இங்கே ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

சென்னையில் வசிக்கும் ராஜஸ்தான் மக்கள் அவர்களது திருவிழா ஒன்றைக் கொண்டாடினார்கள். அப்போது தமிழகத்தின் முதல்வராக அறிஞர் அண்ணா அவர்கள் இருந்தார்கள். அவரை ராஜஸ்தானிய மக்கள் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அவரும் சென்றிருந்தார். அவரிடம், “”அய்யா… நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எங்கள் ராஜஸ்தானி உடை அணிந்து கலந்துகொண்டால் நாங்கள் மகிழ்ச்சி யடைவோம்” என்று சொல்ல அறிஞர் அண்ணாவும் அதனையேற்று, ராஜஸ்தானிய தலைப்பாகை அணிந்து கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “”நான் இப்படி அணிந்துகொண்டால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று சொன்னதால் அணிந்துகொண்டேன். அதற்கு மாறாக, நீங்கள் இந்த ராஜஸ்தானி உடையை அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கட்டளையிடும் தொனியில் சொல்லியிருந்தால், நான் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்க மாட்டேன்” என்று சொன்னார். வேற்று மொழியினரின் மனம் புண்படாமல் நடந்துகொள்ளவேண்டும். எனவே, மாற்று மொழியை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு, நம் தாய்மொழியை எப்படி உயர்த்துவது, மேம்படச் செய்வது, வாழ்க்கை யோடு இணைந்திருக்கச் செய்வது என்பதைப் பற்றிச் சமூகம் சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில், பிறமொழி மீது மோகம் கொண்டு, தாய்மொழியை மறப்பதென்பது துரோகத்திற்கு இணையானது.

http://rightmantra.com/wp-content/uploads/2012/10/Model-School2.jpg
இது ஒரு அரசுப் பள்ளி என்பதை நம்ப முடிகிறதா?

ஒருவன் என்னதான் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு, புலமை பெற்று, அந்த மொழியில் கலைக்களஞ்சியமே வெளியிடும் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும், அவன் இலண்டன் மாநகரில் ஓடிக்கொண்டிருக்கும் தேம்ஸ் நதிக்கரையில் அமர்ந்துகொண்டு, “ஐ எம் ஆன் இங்கிலீஷ்மேன்’ என்று சொல்வானேயானால், அந்நாட்டில் உள்ள ஒரு பிச்சைக்காரன்கூட, “யூ ப்ளடி இண்டியன்’ என்றுதான் நம் நாட்டில் பிறந்த ஆங்கில மேதாவியைத் திட்டுவான். இதுதான் உலக நடைமுறை.

தாய்மொழிக் கல்வியை அரசாங்கம் மட்டுமே முழுமையாகக் கொடுத்துவிட முடியாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. அரசியல் கட்சிகள், ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், பொது நலனில் அக்கறையுள்ளவர்கள் ஆகியோர் இதற்காக நேரத்தைச் செலவிட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வெளிநாடுகளைப் போலவே இங்கும் தாய்மொழியைத் தெரியாதவர்கள் சமூக விரோதிகளாக மாறிவிடுவார்கள் என்பதே உண்மை.

உலகின் மிகப் பிரபலமானவர்கள்கூட தங்கள் வாழ்க்கை வரலாற்றையும் முக்கிய நூல்களையும் தாய்மொழியில்தான் எழுதினார்கள்.

தாய்மொழிக் கல்வி அவசியமானது. ஆனால், இங்கே தாய்மொழியில் பயில ஒரு சில வரையறைக்குள்தான் முடிகிறது. ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியில் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி கற்றவர்களில் ஒருவர்தான், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, அந்த மொழியிலேயே படித்து, முன்னேறி விஞ்ஞானியாகி இந்நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். அவர் தாய்மொழியில்தான் கற்றுத் தேர்ந்தார். அதன்பிறகுதான் ஆங்கிலம் பயின்றார். எனவே முதலில் தாய்மொழி, அதன்பிறகு உலகத் தொடர்புக்கான மொழிகள் எனப் பயில வேண்டும். அதிலும், குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இலக்கியத்தில் ஈடுபாடு உடையவர். தாய்மொழி இலக்கியத்தில் ஈடுபாடு உடையவன், அவற்றைத் தேடித் தேடிப் படிப்பவன் மற்ற மனிதர்களைக் காட்டிலும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்தவனாக இருக்கிறான். மற்றத் துறைகளில் படிப்பவர்கள், அத்துறையில் வெறும் இயந்திரமாக ஆகி விடுகிறார்கள். இலக்கியம் மட்டும்தான் வாழ்க்கைக்கு உதவும். அதைத் தாய்மொழியில் கற்றுக் கொள்ளும்போதுதான் அன்பு, உறவு, வாழ்க்கை எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும். தாய்மொழி என்பதுதான் நம் அடையாளம். தாய்மொழி தெரியாதவன் இதயக் குருடன். அவனுக்கு வாழ்க்கையின் வழி தெரியாது. புழுங்கிப் புழுங்கி இறந்துபோவான்.

IMG_0325

எனக்கு மிகவும் வேண்டிய பெரியவர் 60 வயதைத் தாண்டியவர். அவரும் அவர் மனைவியும் அமெரிக்காவில் வசிக்கும் அவர்களது ஒரே மகனையும் மருமகளையும் அவரது பேரப் பிள்ளைகளையும் பார்க்க என்னிடம் பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு மகிழ்வுடன், “”என் மகன் குடும்பத்தோடும் பேரப்பிள்ளைகளோடும் ஆறு மாத காலம் வாழப்போவது நாங்கள் பெற்ற பாக்கியம்” என்று பெருமையோடு சொன்னார்கள். ஆனால் மூன்று மாதத்திற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்கள். “”ஏன் சீக்கிரம் வந்துவிட்டீர்கள்?” என்று நான் கேட்க, மகிழ்ச்சி மறைந்துபோன இறுக்கமான முகத்துடனும், கனத்த இதயத்துடனும் பெரியவர் சொன்னார், “”உணவு உண்டு மகிழ்ந்து, ஊர் சுற்றிப்பார்த்து, உணர்வுகளைப் பகிர்ந்து பேசிப் பேசி மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையில்தான் சென்றோம். ஆனால், அங்கேயோ என் மகன் ஒருபுறம், மருமகள் மறுபுறம். அவர்களுக்கு வேலை வேலை எப்போதும் வேலைதான். பேசுவதற்கும் நேரமில்லை. வீட்டில் உணவு சமைப்பதற்கும் நேரமில்லை. தகர டப்பாவில் அடைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவை நாமே சூடாக்கிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலை. சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

பேரப்பிள்ளைகளுடனாவது பாட்டுப்பாடி, கதைகள் சொல்லி, சோறூட்டி மகிழலாம் என்றால் அவர்களுக்கு ஆங்கிலம் மாத்திரமே தெரியும். எங்களுக்கோ தமிழ் மாத்திரமே தெரியும். தாய்மொழி அவர்களுக்கு அந்நியப்பட்ட காரணத்தினால், எங்களோடு ஒட்ட முடியவில்லை. நானும் என் மனைவியும் அவர்களோடு உறவாடலாம் என்று எண்ணிய கனவெல்லாம் தகர்ந்துபோனது. மகனும் மருமகளும் வெளியே வேலைக்குச் செல்ல, பேரக்குழந்தைகள் தத்தம் கம்ப்யூட்டரிலும் வீடியோ கேமிலும் மூழ்கிவிட அந்த வீட்டில் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத மரக்கட்டைப் போல் ஆனோம். சிரிப்பு மறந்துபோனது. மன அழுத்தம், சோகம் எங்களைச் சீக்கிரம் ஊர் திரும்ப வைத்தது” என்று சொல்லி முடித்தபோது, என் மனத்திலும் பாரம்.

தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே!
பிற மொழிகள், பிழைப்பதற்கு தாய்மொழி ஒன்றே வாழ்வதற்கு!
“நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்”

என்றான் ருஷ்யக் கவிஞன் ரசூல் கம்சதேவ்.

7 thoughts on “ஆங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்!

  1. மிகவும் அருமையான நீண்ட தற்காலத்திற்கு ஏற்ற உன்னதமான பதிவு. திரு பாலம் அய்யா அவர்கள் தாய் மொழியில் கற்பவர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்குவது பாராட்ட தக்கது. திரு பாலனின் ஒவொரு வரிகளும் பொட்டில் அடித்தார் போல் உள்ள வைர வரிகள்.

    நாமே அந்த காலத்தில் தமிழ் மீடியத்தில் 10ம் வகுப்பு வரை படித்தோமே என்று நொந்ததுண்டு. (அதன் பிறகு 11ம் வகுப்பு முதல் காலேஜ் வரை english literature ஒன்றும் புரியாமல் படித்தது வேற விஷயம் ).

    இந்த பதிவை படித்து எதாவது ஒரு பெற்றோராவது தன குழந்தையை தாய் மொழியில் படிக்க வைத்தாள்\ல் அதுவே இந்த பதிவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

    நன்றி
    உமா

  2. நல்ல கருத்து பரிமாற்றம் தான். ஆனால் தீர்வு இல்லையே !
    தமிழ் மீடியம் பள்ளிகளில் LKG கொண்டு வர வேண்டும்.

    1. தீர்வு : இலவசங்களுக்கு ஒதுக்கப்படும் தொகையை அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கவேண்டும்.

      – சுந்தர்

      1. ஆம்… தங்கள் கருத்து சரியானதே!

  3. ஆன்மிக பார்வையில் ஒரு சமூக பார்வை …கலக்கல் …தொடரட்டும்…தங்கள் ஆன்மிக சமூக பணி….சிவாய நம….

  4. இது அனைவரின் சிந்தனையை தூண்டும் சிறப்பான பதிவாக நான் இதை பார்க்கிறேன். மிக்க நன்றி மற்றும் உமா அவர்களின் கருத்து நன்று. வாழ்க வளமுடன்!!!

  5. நல்ல பதிவு! தாங்கள் குறிப்பிட்டிருந்த பல இன்னல்களுக்குக் காரணம் தாய்மொழியை புறக்கணித்தது தான் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதே! அத்தோடு, இன்று நிகழும் அதிகமான தற்கொலைகளும் அந்நிய மொழி பயின்ற பட்டதாரிகளுக்குள் தான் நிகழ்கிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை! ஆம்… அரசாங்கப் பள்ளியில் பயின்ற ஒரு மாணவனுக்கு இருக்கும் தன்னம்பிக்கையோ, தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் தன்மையோ, அயல்மொழி கல்வி படித்தவனிடத்தில் இருப்பதில்லை!

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *