Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

print
முருகனின் பெயரை மூன்று முறை கூறியதற்கு கிடைத்த தண்டனை!

யோத்யா காண்டம் – குகப்படலத்தில் ஓர் அற்புதமான செய்தியை – தத்துவத்தை முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையை – சிறப்பைப் பேசுவதும்தான் இப்படலத்தின் சாரம் மற்றும் தனிச்சிறப்பு!

“”கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்”

என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதுபோல, இடர்வந்த காலத்தில் உற்ற நண்பனை அடைந்தவன் ஸ்ரீராமபிரான். அவனுற்ற துயர், நல்லதொரு காலத்தே மிகச்சிறந்த நண்பனின் இயல்புகளை அளந்து பார்க்கக்கூடிய அளவுகோலாக உதவியது ராமனுக்கு.

இராமனுக்குக்கூட “பெருமாள்’ என்ற பட்டம் கிடையாது. இராமாயணத்தில் இரண்டே இரண்டு பேருக்குத்தான் அந்தப் பட்டம் உண்டு. ஒருவன் “இளைய பெருமாள்’ இலக்குவன்; மற்றொருவன் “குகப்பெருமாள்’ குகன். “ஆன்மா’ என்ற குகையில் வாழ்பவன்தான் குகன் – என்று குகனுக்கு விளக்கம் தருவர் சான்றோர். முருகப் பெருமானுக்குக் “குகன்’ என்ற ஒரு பெயருண்டு. இராமாயணத்தில் வரும் குகன் பிறப்புக்கும் ஒரு புராணக் கதையுண்டு.

Guhan Ramar

இராமபிரானைப் பார்க்காமலேயே அவரது கல்யாண குணங்களைக் கேட்டறிந்து, அதன் காரணமாக அவர்மீது பேரன்பு கொண்டு வாழ்ந்தவன்; “பில்’ எனும் மலைஜாதி இனத்தவரின் தலைவனான குகன். முரட்டு குணமும், மாமிசம் புசிக்கும் பழக்கமும், பார்க்கவே அருவருக்கத்தக்க உருவம் கொண்ட ஒருவனை, “”எனதருமை நண்பனே!” என்று ஸ்ரீராமபிரான் கட்டித் தழுவினார் என்றால் – இராமனின் அன்பும், நட்பும், திருவடிப் பேறும் குகனுக்கு வாய்த்திருக்கிறதென்றால், அவன் முற்பிறப்பில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கத்தானே வேண்டும்! அந்தப் புண்ணியம்தான் என்ன? அந்தக் குகனின் முற்பிறப்பு வரலாறு – வந்த வழி என்ன?

மனிதர்களைப் புனிதமாக்கும் புண்ணிய நதி கங்கை. அந்தக் கங்கைக் கரையில் ஓர் அந்தண முனிவர் இலைக்குடிலில் இருந்து தவம் செய்துவந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு புதல்வன். வேதங்களைக் கசடறக் கற்றவன்; அன்பும் பண்பும் அடக்கமும் உடைய உத்தமச் சிறுவன்.

ஒருநாள் தந்தையை நோக்கி, “”தந்தையே! தெய்வங்களுக்குள் சிறந்த தெய்வம் எது?” என்று கேட்டான்.

“மகனே! நமது உடம்பின் உச்சியில் இருப்பது சிகை. வேதங்களின் முடிந்த முடிவாக உள்ள உபநிடதம் அதர்வ சிகை. அதுபோல் தெய்வங்களின் தனிப்பெருந் தலைவர் முருகவேள். முருகன், மூவர் தேவாதி தேவர்கள் போற்றும் முழுமுதற் கடவுள். மறையாயிரங்களும் போற்றும் மகாதேவன். முருகனை வணங்கினால் எல்லா மூர்த்திகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும். அவன் கருணைக் கடல்; குணநிதி. முருகனை வழிபாடு செய்தோர், பிறவிப் பெருங்கடலைக் கடப்பர்; முக்தி பெறுவர்” என்று முருகன் பெருமையை மகனுக்குக் கூறினார்.

ஒரு சமயம், முனிவர் கேதாரம் வரை சென்றிருந்தார். அதுவரை முனி மைந்தன் ஆசிரமத்தில் இருந்து, முருகன் திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மன்னன் ஒருவன், முனிவர் இல்லாததைக் கண்டு மன வருத்தத்துடன் திரும்ப நினைத்தான். அவ்வாறு திரும்பிய மன்னனைப் பார்த்து,

“வேந்தே! நீர் என்ன காரணமாக வந்தீர்? உமக்கு என்ன கவலை? என்னைச் சிறுவன் என்று எண்ண வேண்டாம். ஓர் இருள் சூழ்ந்த வீட்டில் சிறுவன் ஒருவன் விளக்கை எடுத்துச் சென்றால், இருள் விலகத்தானே செய்யும்? சிறுவன்தானே என்று இருள் அலட்சியமாக எண்ணுமா? விளக்குதானே முக்கியம்! அதுபோல, நான் சிறுவனாக இருப்பினும் என்னிடம் “ஞானதீபம்’ இருக்கிறது. உமது அறியாமையாகிய இருளை நான் அகற்றுவேன்” என்றான் முனி மைந்தன்.

மன்னன் மகிழ்ந்து, “”குழந்தாய்! நான் இந்த நாட்டை ஆளும் மன்னன். வேட்டையாடியபோது குறிதவறி, நான் விட்ட அம்பு ஒரு முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால், பிரமஹத்தி (தோஷம்) தொடர்ந்து என்னை வருத்துகின்றது இதற்கு நிவாரணத்தை நாடி வந்தேன்” என்றான்.

“வேந்தர் பெருமானே! இவ்வளவுதானா! நீர் இந்தப் புனிதமான கங்கையில் மூழ்கி, வடதிசை நோக்கி நின்று, ஒருமித்த மனதுடன், “ஓம் முருகா’ என்று மூன்று முறை கூறும். உம்மைப் பிடித்த பிரமஹத்தி உடனே அகலும்” என்றான்.

அம்மன்னனும் அவ்வாறே செய்து, பிரமஹத்தி நீங்கப்பெற்று, முனிமைந்தனைப் பணிந்து, வினை நீங்கி மகிழ்ச்சியாக தன் நகரம் திரும்பினான்.

முனிவர், சில நாள்களுக்குப் பின் தமது குடிலுக்கு வந்தார். தன் தந்தையைப் பணிந்தான் மகன். முனிவர் தன் மகனைப் பார்த்து, “”மகனே! இங்கே தேர்ச் சக்கரத்தின் சுவடுகள் காணப்படுகிறதே, வந்தது யார்?” என்றார்.

“தந்தையே! இந்நாட்டு மன்னன் பிரமஹத்தி நீக்கம் கருதித் தங்களைக் காண வந்தார். அதற்குரிய நிவாரணத்தைக் கூறினேன். மன்னன் நான் கூறியபடி செய்து, பாவம் நீங்கித் துன்பம் தொலைந்து மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்” என்றான்.

முனிவர் பெரிதும் மகிழ்ந்து, “மகனே! வந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தனையே, இதுதான் பண்பாடு. அவருக்கு நீ என்ன பரிகாரம் கூறினாய்?”

“தந்தையே! பிரமஹத்தி விலக – கங்கையில் மூழ்கி, ஒருமனத்துடன் “ஓம் முருகா’ என்று மும்முறை கூறும் என்றேன்”.

இதைக்கேட்ட முனிவருக்குக் கடுங்கோபம் பொங்கி எழுந்தது. “மூடனே! நீ என் மகனா? என்ன காரியம் செய்துவிட்டாய்? உனக்கு முருகன் பெருமை தெரியவில்லையே? ஒருமுறை “முருகா’ என்று கூறினாலே ஆயிரம் பிரமஹத்திகள் அகலுமே… ஆனால் நீயோ, ஒரு பிரமஹத்தி விலக மூன்று முறை “முருகா’ என்று கூறுமாறு கூறியுள்ளாயே! இது முறையோ? நீ முருக மந்திரத்தின் பெருமையை நன்கு உணரவில்லையே! ஆதலால், நீ வேடனாகப் பிறப்பாயாக!” என்று மகனைச் சபித்தார்.

தந்தையைப் பலமுறை வேண்டிப் பணிந்து, தன் பிழை பொறுக்குமாறு மகன் வேண்டினான்.

முனிவர் சினம் தணிந்து, “மகனே! புனிதமான இதே கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய்! வேடனாகப் பிறந்தாலும், “முருகன்’ நாமமாகிய “குகன்’ என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ஸ்ரீராமபிரான் (அவதாரம் எடுத்து) வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் (உய்தி) பெறுவாய்!” என்று சாப விமோசனம் தந்தருளினார்.

அந்த முனி மைந்தன்தான் கங்கைக் கரையில் “சிருங்கிபேரம்’ என்ற ஊரில் வேடனாகப் பிறந்து, “குகன்’ என்ற பெயருடன் விளங்கி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குத் தோழனாகி உய்தி பெற்ற குகப்பெருமாள்! இதுதான் குகனின் முற்பிறவி வரலாறு. முருகப் பெருமானைப் போற்றியதால் கிடைத்த பெரும்பேறு!

“காரணம் இல்லாமல் காரியம் இல்லை’ என்பதை நிரூபிப்பவை நமது இந்து இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களும்!

கம்பர் கூறவிழைந்த குகப்படலத்தின் சாரம் இதுதான்:- எத்தனை இழிந்த பிறவியாக இருந்தாலும்கூட, இறைவனிடத்தில் தூயபக்தி இருக்குமானால் – கள்ளங் கபடமற்ற அன்பிருக்குமானால், அவன் இறைவனின் திருவடியை அடைந்து அவரது அருளுக்குப் பாத்திரமாகிப் பேரின்பப் பெருநிலையை அடைய முடியும் என்பதுதானே…!

(நன்றி : இடைமருதூர் கி.மஞ்சுளா | தினமணி)

=====================================================================

புராண காலம் முதல் இந்த கலியுகம் வரை பல அடியார்கள் முருகனை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றுள்ளனர்.

நாம் அறிந்த சிலரை பார்ப்போம்.

Agathiar copy

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள்!

1.அகத்தியர்
2.நக்கீரர்
3.சிகண்டி முனிவர்
4.நல்லியக் கோடன்
5.ஒளவையார்
6.முருகம்மையார்
7.பொய்யாமொழிப்புலவர்
8.சிதம்பர சுவாமிகள்
9.ஞாவைரோதயர்
10.பகழிக்கூத்தர்
11.கவிராஜ பிள்ளை
12.குமரகுருபரர்
13.மார்க்க சகாய தேவர்
14. குணசீவர்
15.ராமலிங்க அடிகள்
16.முருகதாச சுவாமிகள்
17.பாம்பன் சுவாமிகள்
18.தண்டபாணி சுவாமிகள்
19.அருணகிரிநாதர்
20.கச்சியப்பர்
21.திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகள்

வைகாசி விசாக நன்னாளில் இந்த முருகனடியார்களின் பெயர்களை நாம் படிக்க நேர்ந்ததே பாக்கியம் தான்.

மீண்டும் மீண்டும் படியுங்கள்.

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

=====================================================================

[END]

8 thoughts on “முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

  1. குகனின் முற்பிறவி வரலாற்றை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம். இதற்கு முன் இந்த கதை நமக்கு தெரியாது, குகன் முருகனை தொழுததால் அடுத்த பிறவியில் ராமபிரானின் அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமாகி ராமனின் நண்பராக ஆகி இருக்கிறார். நாமும் இன் நன்னாளில் முருகன் துதி பாடி முருகனின் அன்புக்கு பாத்திரமாவோம்

    நமக்கு தெரியாத கதைகளை பதிவாக போட்டு அனைவருக்கும் பயன் பெற செய்யும் உன்னத பணிக்காக ரைட் மந்திரா விற்கு எமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்/ தங்கள் அறப்பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் . முருகன் அடியார்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டோம்

    நன்றி
    உமா

  2. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

    விசாக நன்னாளில் குரு பெயர்ச்சி வந்தணையும் நன்னாளில் முருக அடியார்களின் திருநாமங்களை போட்டு எங்களுக்கு குருவருளும்,திருவருளும் தேடி தந்த உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ,,,
    “பழவினைகள் தீர்த்தவனாம் பழநியுறை திருமுருகன்
    கழல் பணிந்து புகழ்பாடும் கடமையுடன் பிறவியறும்
    வழிகாட்டும் குருவருளால் வள்ளிமலைப் பணிபுரிந்த
    அழகர் சச்சிதானந்தர் அகம் அமர்வேள் பதம்போற்றி “

    1. உங்களுக்கு இருக்கும் எத்தனையோ வேலைப் பளுவுக்கு நடுவே, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, தளத்திற்கு வந்து பிரார்த்தனை பதிவுகளுக்கு சிறந்த பரிகாரங்களை சொல்லி, பதிகங்களை அளித்து வாசகர்களுக்கு நல்வழி காட்டுவதற்கும் அவ்வப்போது தங்களின் கருத்துக்களை பின்னூட்டங்களாக வெளியிட்டு அடியேனை உற்சாகப்படுதுவதற்கும் ‘நன்றி’ என்று ஒரே வார்த்தையில் எப்படி சொல்வது?

      வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தொண்டு.

      திருசிற்றம்பலம்.

      – சுந்தர்

  3. Dear Sundar!

    Excellent article on a great auspicious day! I do not know really how many readers understood properly…! Some of the lines are still vibrating inside me…!
    Thank you very much for this article..!
    Those who have problems unable to solve for a long time, can try to visit once to Thiruchendur…..! They can literally see the miracle!
    Ohm Muruga !
    With kind regards,

    Rishi

    1. Thank you Rishi. It’s a sweet surprise to see your reply here.
      Yes as you said, some of the lines have in-depth meaning.
      I have not been to Thiruchendur so far. Willing to go soon by Lord Muruga’s grace.
      Convey my regards to Guru Vishnu and your family.
      – Sundar

  4. தமிழ் கடவுள் – உலகமகான், பழனியாண்டவர் அடிபணி வாழ்க…வளர்க..

  5. ராமனின் கதையில் குகனின் பங்கு மிகவும் முக்கியமானது.
    ராமன்-குகன் நட்புக்கு ஒரு இலக்கணம்.
    தெரிந்த பாத்திரம் தெரியாத கதை என்பது போல குகனின் முற்பிறப்பு முருகன் பெருமானின் பெருமையை சொல்கிறது.
    அயோத்யா காண்டம் என்று முதல் வார்த்தையை படித்தது முதல் அகத்தியரின் படத்தை பார்ப்பது வரை ஏதோ மயக்கத்தில் கட்டுண்டது போல இருந்தது.
    உங்கள் எழுத்து திறமை குகனின் முற்பிறப்பின் காலத்திற்கே எங்களை கொண்டு போய் நேரில் பார்ப்பது போல உள்ளது.
    எனக்கு சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை.
    இதுவரை சிற்சில சமயங்களில் மட்டும் அனுபவித்த ஒருவகை உணர்வு என்னை கட்டிபோட்டது போல இருந்தது.
    முருகன் பெருமைக்கு மேலும் ஒரு எடுத்துகாட்டு. நன்றி

    1. பாராட்டுக்குரியது நானல்ல. தினமணியை சேர்ந்த இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள். அவர்கள் எழுதியதை நான் பகிர்ந்துகொண்டேன்.

      பதிவின் இரண்டாம் பகுதி (முருகனை கண்ட அடியார்கள்) மட்டுமே நான் எழுதியது.

      – சுந்தர்

Leave a Reply to T.NOBLE ALEX Cancel reply

Your email address will not be published. Required fields are marked *