இந்த ஆலயத்திற்கு ஏற்கனவே நாம் ஒரு முறை (2012 ஆம் ஆண்டு பாரதி விழாவிற்கு முன்பு) நமது நண்பர்களுடன் சென்றுள்ளோம். ஆனால் ஆலயத்தை பற்றிய விரிவான பதிவு தற்போது தான் அளிக்கப்படுகிறது.
திருநீர்மலை தொண்டை நாட்டில் அமைந்த வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. சென்னை பல்லாவரத்திலிருந்து 5. கி.மீ. துரத்தில் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன. மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன.
முன்காலத்தில் இம்மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர்.
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இத்தலம் பற்றிப் பாசுரம் பாடியுள்ளார்கள். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டிïர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் மங்ளாசாசனம் செய்துள்ளார்.
மலை அடிவாரக் கோவிலில் நீர்வண்ணப்பெருமாள், கிழக்கு நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
வால்மீகி முனிவர் ஒரு முறை இத்தலத்திற்கு வந்தார். மலை ஏறி, கிடந்த கோலத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட அரங்கநாதனை தரிசித்தார். இருந்த கோலத்தில் வீற்றிருந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டார். திரிவிக்ரமனாக நடந்த கோலத்துடன் சேவை சாதிக்கும் உலகளந்த பெருமாளை பூஜித்தார். பின்பு மலையிலிருந்து இறங்கி வந்தார். மலை அடிவாரத்தில் நின்றவண்ணமாக, வால்மீகி முனிவர் மானுட அவதாரமான ஸ்ரீஇராமபிரானை மனதாரத் துதி செய்தார். அப்போது ஒரு விந்தை நிகழ்ந்தது. முனிவரின் அகக்கண்களின் முன்னே அரங்கன் ஸ்ரீஇராமனாக வந்தான். இலக்குமி சீதையாகத் தோன்றினாள். பாம்பணையாகக் கிடந்த ஆதிசேடன் இலக்ஷ்மணனாகத் தோன்றினான். பெருமாளின் சங்கும் சக்கரமும் பரதனாகவும் சத்ருக்கனராகவும் மாறினர். கருடனே மகாபலவானான ஆஞ்சனேயராகி வால்மீகிக்குக் காட்சி தந்தனர். முனிவர் அக்காட்சியிலே ஆனந்தப் பரவசமுற்றார்.
“ஸ்ரீஇராமா! திருநீர்மலையிலே என்றும் எழுந்தருளி இருக்க வேண்டும்” என்று முனிவர் வேண்டினார். அவ்வாறே ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி நின்ற கோலம் கொண்டு மலை அடிவாரக் கோவிலிலே சேவை சாதிக்கிறார். நீர்வண்ணனாகக் காட்சி தருகிறார்.
“அணிமாமலர் மங்கை” என்ற அழகான திருநாமத்துடன் தாயார் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார்.
நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
மூலவராக அரங்கநாதப் பெருமாள் பாம்பணை மீது மாணிக்க சயனமாகக் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். திருமுகம் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. தாயார் அரங்கநாயகிக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
ஓங்கி உலகளந்த உத்தமனாக திரிவிக்கிரமன் என்ற திவ்யநாமத்துடன் நடந்த கோலமாக கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.
அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார்.
படியேறும் போது, ஆங்காங்கே ஆடுகள் அமர்ந்திருப்பதை பார்க்கலாம். நம்மை பொருத்தவரை அவை ஆடுகள் அல்ல ரிஷிகள். (உட்கார்ந்திருக்கும் விதத்தை பார்த்தாலே புரியும்!) மிகையாக நினைக்கவேண்டாம். கோவில் படிக்கட்டுகளில் ஊறும் எறும்புகளுக்கு கூட புண்ணியம் உண்டு.
மலைப்பாதைக்கு நடுவே ஒரு ஆஞ்சநேயர் சன்னதி உண்டு. அவரை சேவித்துவிட்டு மலை மீது ஏறலாம்.
கோபுரம் ராமருக்கு… கொடிமரம் நீர்வண்ணருக்கு…: கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.
திருநீர்மலையில் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என பெருமாள் நான்கு விதமாக சேவை சாதிக்கும் அற்புதத்தைக் கண்டு திருமங்கை ஆழ்வார் 19 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்துள்ளார்.
பூதத்தாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார்.
மலை அடிவாரக் கோவிலின் பின்னால், திருக்குளம் உள்ளது. குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் காணப்படுகிறது.
கோவிலில் உள்ள புஷ்கரணிக்கு மணிகர்ணிகா என்று பெயர். இந்தப் புஷ்கரணியில் நான்கு வகையான புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நான்கு நிலை சேவை சாதிக்கும் பெருமாளுக்கு நான்கு விதமான தீர்த்தங்கள் உள்ளன. (சுத்த புஷ்கரணி, ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி)
கிடந்த கோலப் பெருமாளாகிய அரங்கநாதருக்கு உரியதீர்த்தம் க்ஷீரபுஷ்கரணி. அவர் பாற்கடல் வாசன் அல்லவா?
ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி கருணைக் கடல். விபீஷணனுக்கும் அபயமளித்தவர். அவருக்குரிய தீர்த்தம் காருண்ய புஷ்கரணி. திடபுத்தி படைத்தவர் திரிவிக்ரமர். நடந்த கோலப் பெருமாளாகிய திரிவிக்ரமனுக்கு உரியது ஸித்த புஷ்கரணி. சாந்த நரசிம்மருக்கு உரியது ஸ்வர்ண புஷ்கரணி. இந்த நான்கு வித புண்ணிய தீர்த்தங்களும் மணிகர்ணிகா புஷ்கரணியில் உள்ளதாக தல புராணத்தில் காணப்படுகிறது.
திருநீர்மலைப் பெருமாளைச் சேவித்த திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்தின் முதல் பாடல் இது.
“அன்று ஆயர்குலக் கொடியோடு அணிமாமலர்
மங்கையொடு அன்பளாவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையும் இடம் ஆவது-இரும் பொழில்சூழ்
நன்றாய புனல்நரையூர், திருவாலி
குடந்தை, தடம்திகழ் கோவல்நகர்;
நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தார்க்கு
இடம் மாமலை ஆவது நீர்மலையே!
நின்ற கோலமாக நரையூரிலும், இருந்த கோலத்தில் திருவாலியிலும், கிடந்த கோலத்தில் குடந்தையிலும், கோவிலூரில் உலகளந்து நீட்டி நடந்த கோலத்துடனும் சேவை சாதிக்கும் பெருமாள் திருநீர்மலை என்னும் தேயாத்ரி க்ஷேத்திரத்தில் நான்கு விதமாக சேவை சாதிக்கிறார்.
இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாகக் காட்சி தருதலால், திருமணம் கைகூடும் தலமாகவும், பிரார்த்தனைத்தலமாகவும் விளங்குகிறது. இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்’ ரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது.
வேண்டுதல்
ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, திருமணத்தடைகள் நீங்க திருநீர் மலைக்கு வந்து பெருமாளைத்தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும் அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.
இத்தலத்தின் குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிபிரதட்சணம் செய்தும் வழிபடுகின்றனர்.
பெருமாள் கோயில் கிரிவலம்
தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, “ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்’ எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.
வார இறுதியில் குடும்பத்தினருடன் ஒரு முறை சென்று வாருங்கள். SPIRITUAL PICNIC செல்ல மிகவும் ஏற்ற தலம் இந்த கோவில்.
=========================================================================
உழவாரப்பணி குறித்து ஆலய நிர்வாகத்திடம் பேசி முறைப்படி அனுமதி பெற திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோவிலுக்கு சென்ற மாதம் ஒரு நாள் ஞாயிறு மாலை சென்றிருந்தோம்.
கோவிலை நெருங்கும்போதே நம்மை திருக்குளத்தின் அழகு சுண்டியிழுத்தது. இருட்டுவதற்குள் திருக்குளத்தை புகைப்படம் எடுத்துவிடவேண்டும் என்று கருதி, குளக்கரையை சுற்றி வந்து படங்கள் எடுத்தோம்.
இது பற்றி தெரியாதவர்கள் சென்னையில் இப்படி ஒரு அழகான காட்சியா என்று வியப்படைவார்கள் என்பது உறுதி. சட்டென்று பார்த்தால் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றே இருக்கும்.
தொடர்ந்து கோவிலின் தலைமை பட்டரான ராஜூ பட்டரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உழவாரப்பணி செய்ய விரும்புவது குறித்து விபரங்களை சொன்னோம். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் உரிய அனுமதியையும் பெற்று தருவதாகவும் கூறினார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
கீழே நீர்வண்ணப் பெருமாளையும் அணிமா மலர் மங்கையையும் தரிசித்துவிட்டு மேலே சென்று ரங்கநாதரையும், உலகளந்த பெருமாளையும், பால நரசிம்மரையும் சேவித்தோம்.
சென்னை புறநகர் பகுதி கண்களுக்கு விருந்தாக காட்சியளித்தது. மாலை வேளைகளில் ஜில்ஜில்லென வீசும் குளிர்ந்த காற்று, மனதுக்கும் உடலுக்கும் இதம் தரும் ஒன்று.
மறுபடியும் கீழே வரும்போது தவண உற்சவத்திற்காக சுவாமி கோவில் குளத்தை வலம் வந்துகொண்டிருந்தார். ஆர்வமுடன் ஓடோடிச் சென்று புகைப்படம் எடுத்தோம்.
நம்மை பார்த்த பட்டர், “சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க…!” என்று கூறியபடி அரங்கன் சூடிய சிறிய மலர்ச் சரம் ஒன்றை நமக்கு எதிர்பாராமல் சூட்டி கௌரவித்தார். ஓம் நமோ நாராயணாய!
தொடர்ந்து நடைபெற்ற உற்சவத்தை அருகே இருந்து ரசித்து, புகைப்படங்களை எடுத்து குவித்துவிட்டோம். திகட்ட திகட்ட நம் கண்களுக்கு கிடைத்த தெள்ளமுது விருந்து என்றால் மிகையாகாது.
கோவிலில் வேறு ஒருவரை சந்தித்தோம். அவரை வேறொரு சமயம் உங்களிடம் அறிமுகப்படுத்துகிறோம். இப்போதைக்கு இதை மட்டும் நினைவில் வைத்திருங்கள்.
==================================================================
திருநீர்மலை உழவாரப்பணிக்கு வர விரும்புபவர்கள் கவனத்திற்கு….
நம் தளம் சார்பாக வரும் ஞாயிறு 30/03/2014 அன்று நடைபெறும் திருநீர்மலை திவ்யதேசத்தின் உழவாரப்பணிக்கு வர விரும்புபவர்கள் அன்றைய தினம் காலை 7.30 க்குள் அடிவாரத்தில் நீர்வண்ணப்பெருமாள் கோவிலுக்கு வந்துவிடவேண்டும்.
சென்னை பல்லாவரம் மேம்பாலத்திற்கு அருகே உள்ள பாண்ட்ஸ் கம்பெனி பஸ் ஸ்டாப்பிற்கு பாலத்தின் கீழே உள்ள திருநீர்மலை மெயின்ரோட்டை பிடித்து திருநீர்மலைக்கு வந்துவிடலாம். பல்லாவரத்திலிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் பஸ் வசதி உண்டு. பல்லாவரத்திலிருந்து பழந்தண்டலம் செல்லும் 55 A பேருந்தில் ஏறி திருநீர்மலை கோவில் அடிவாரத்தில் இறங்கலாம். அரை மணிக்கொருமுறை பஸ் வசதி உள்ளது.
டூ-வீலரில் வருபவர்கள், ஜி.எஸ்.டி. ரோடு வழியாக வரலாம். அல்லது குன்றத்தூர் வழியாகவும் வரலாம்.
வழக்கமான பணிகளுடன், லைட் பிட்டிங்குகள் மற்றும் மின்சாதனங்களை பழுதுபார்க்கும், பணியும் நடைபெறும்.
உழவாரப்பணியில் பங்கேற்கும் அன்பர்களுக்கு காலை உணவும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணி நேரம் : 7.30 – 12.30 வரை.
முன்னதாக பெருமாள் சன்னதியிலும் தாயார் சன்னதியிலும் பணியில் பங்கேற்பவர்களுக்காகவும், நம் தள வாசகர்களுக்காகவும், 10 ஆம் வகுப்பு பரீட்சை எழுதும் மாணவர்களுக்காகவும் விசேஷ அர்ச்சனை + வழிபாடு நடைபெறும்.
அதன் பின்னரே பணி துவங்கும். கீழே உள்ள கோவிலில் உழவாரப்பணி முடித்துவிட்டு பின்னர் மேலே உள்ள மலைக்கோவிலில் பணி நடைபெறும்.
வரவிரும்பும் அன்பர்கள் நமக்கு அலைபேசியிலோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தகவல் தெரிவிக்கவும்.
நன்றி,
என்றென்றும் பகவத் சேவையில்,
– சுந்தர்,
M : 9840169215 | E-mail : simplesundar@gmail.com, rightmantra@gmail.com
Website : www.rightmantra.com
==================================================================
(ஆக்கத்தில் உதவி : தினமலர்.காம், மாலைமலர்)
கோவில் மிக ரம்மியமாக உள்ளது .இங்கு நமக்கு உழவாரபனி கிடைத்தது ஒரு பாக்கியம் தான்…
என்றும் நன்றிகளுடன்..
All the photos are fine. Even though we are in Chennai, we never know about this temple, After reading this article, we came to know the history of this temple. With regard to Uzavarapani, we will let you know through mail.
Regards
Uma
வணக்கம் சார்.
உங்களுடைய எழுத்து நடை உங்களுடன் கூடவே வந்து ஆலய தரிசனம் பண்ணிய உணர்வை ஏற்படுத்தி கொடுத்தது.
எல்லா புகைப்படங்களும் அருமை.
சுவாமி ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் பார்க்க முடியாத காட்சிகள் எல்லாம் படங்களாக எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்.
பெருமாளின் நான்கு கோலங்கள் மற்றும் ஆலய விபரமும், முக்கிய வேண்டுதல்கள் மேலும் ஆலய சிறப்புகள் எல்லாம் படிக்க படிக்க மன நிறைவை தந்தது.
தீர்த்த குளமும் படம் மிக நன்றாக வந்துள்ளது.குளத்தில் உள்ள நான்கு தீர்த்தங்களின் மகிமையும் இதுவரை நாங்கள் அறியாதது.
கடைசி நான்கு படங்களும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டியது.
எந்த இடத்திற்கு சென்றாலும் சுந்தர் சார் அவர்களுக்கு மரியாதையை எம் பெருமான் அளித்துவிடுவார். அதுதான் பட்டர் சூட்டிய சிறு மல்லிகை சரம்.
மிகவும் விசேஷமான இந்த தலத்தில் உலவரபணி கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம்.
அவசியம் கலந்து கொள்ள இறைவன் அருள்புரிவார்.
நன்றி
சுந்தர்ஜி,
எபோதும்போல் பதிவு மிக அருமை. படங்கள் ரம்மியமாக உள்ளது. அந்த ஊரிலேயே இருந்து கொண்டு நீர் வண்ண பெருமானின் அழகை ரசிக்க மாட்டோமா என்று மனம் ஏங்குகின்றது. நான் கூட திருநீர்மலை பார்த்ததே இல்லை. உழவார பணியின் மூலமாகத்தான் அவரை தரிசிக்க வேண்டும் என்பது கடவுளின் சித்தம் போலும்.
உழவார பணிக்கு நாங்களும் உங்களின் மூலமாக வர வேண்டும் என்பதை யாரால் மாற்ற இயலும். எல்லாம் அவன் செயல்.
நன்றி …………… சந்திப்போம் விரைவில் ………………